Published:Updated:

`ஒரே உரையில் உலக ஃபேமஸ்..!’ - காஷ்மீர் தலைவர்களை க்ளீன் போல்டாக்கிய லடாக் எம்.பி பேசியது என்ன?

எம்.பி ஜம்யாங் செரிக் நம்கியால் ( FaceBook )

முன்னர் லடாக் எம்.பி யார் என்று கேட்டால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை.. ஏன் லடாக்கில் பா.ஜ.க வெற்றி பெற்றதைக்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஒரே உரை அவரை அகில இந்திய ஸ்டார் ஆக்கிவிட்டது.

`ஒரே உரையில் உலக ஃபேமஸ்..!’ - காஷ்மீர் தலைவர்களை க்ளீன் போல்டாக்கிய லடாக் எம்.பி பேசியது என்ன?

முன்னர் லடாக் எம்.பி யார் என்று கேட்டால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை.. ஏன் லடாக்கில் பா.ஜ.க வெற்றி பெற்றதைக்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஒரே உரை அவரை அகில இந்திய ஸ்டார் ஆக்கிவிட்டது.

Published:Updated:
எம்.பி ஜம்யாங் செரிக் நம்கியால் ( FaceBook )

நாடெங்கிலும் காஷ்மீர் குறித்த பேச்சு தொடர்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுக்காலமாக எந்த மத்திய அரசும் செய்ய முயலாததை 2 -வது முறையாக பதவியேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு செய்தது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் பகுதியை இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்தது.

`ஒரே உரையில் உலக ஃபேமஸ்..!’ - காஷ்மீர் தலைவர்களை க்ளீன் போல்டாக்கிய லடாக் எம்.பி பேசியது என்ன?

இது தொடர்பான அறிவிப்பை இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபோது கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்கட்சிகளின் கடுமையான அமளிக்கு மத்தியில் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள், இது காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என கடுமையாக விமர்சிக்க, லடாக் தொகுதியின் பா.ஜ.க எம்.பி ஜம்யாங் செரிக் நம்கியால், இந்த மசோதா குறித்து பேசினார். 17 -வது மக்களவைத் தேர்தலில் ஜம்யாங், சுயேட்சை வேட்பாளரான சஜ்ஜத் ஹூசைனை 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் லடாக் தொகுதியில் வெற்றிகொண்டார்.

மக்களவையில் அவர் அளித்த உரை, ஒரே நாளில் அவரை பிரபலம் ஆக்கிவிட்டது. எதிர்க்கட்சியினரைப் பார்த்து, ``இங்கு இருக்கும் உறுப்பினர் பலரும் காஷ்மீர் குறித்தும் லடாக் குறித்தும் பேசுவது மிக்க மகிழ்ச்சி. ஆனால், எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். லடாக் பகுதியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

1948-ம் ஆண்டு, லடாக்கின் புத்த சங்கத் தலைவர் அப்போதைய பிரதமர் நேருவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார். அதில் லடாக் எக்காரணத்தைக்கொண்டும் காஷ்மீருடன் இணைக்கக் கூடாது எனச் சொல்லியிருந்ததை நினைவுகூர விரும்புகிறேன்.

மக்களவையில் ஜம்யாங் செரிக் நம்கியால்
மக்களவையில் ஜம்யாங் செரிக் நம்கியால்

66 ஆண்டுகளுக்கு முன்பு, ஜன் சங்கின் நிறுவனரான ஷியாம பிரசாத் முகர்ஜி , ``இந்த நாட்டில் இரண்டு கொடிகள், இரண்டு பிரதமர்கள் கூடாது" என்றார்.

ஜம்மு - காஷ்மீரில் 8 மாவட்டங்கள் 2008-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. 4 மாவட்டங்கள் காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்டது. ஜம்மு மக்கள் போராடியதால், அவர்களுக்கும் 4 மாவட்டங்கள் தரப்பட்டது. லடாக்கிற்கு ஒன்றுமே தரவில்லை. இதுதான் உங்கள் சமத்துவமா?

கார்கில் மூடப்பட்டுவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். லடாக்கில் இருந்து தேர்வானவன் நான். நீங்கள் அல்ல. அமைதியாக உட்காருங்கள். இத்தனை ஆண்டுக்காலம் நீங்கள் பேசினீர்கள். இப்போது நான் பேசுகிறேன். கேளுங்கள். ஒரு சிறு ரோட்டையும், மார்க்கெட்டையும் கார்கில் என நினைத்துக்கொண்டு பிதற்றுகிறார்கள். கார்கில் பற்றி தெரிய வேண்டும் என்றால், ஜான்ஸ்கருக்கு நீங்கள் பயணம் செய்ய வேண்டும். முல்பெக் ஷார்கோல் செல்ல வேண்டும். ஆர்யன் வேலி (Aryan Valley )க்கு செல்ல வேண்டும். 70% கார்கில் மக்கள் இந்த முடிவை வரவேற்கிறார்கள்.

காஷ்மீர் அரசியல்வாதிகள் தங்களின் கொடி பறிபோய்விட்டதாய் இன்று புலம்புகிறார்கள். 2011-ம் ஆண்டிலேயே காஷ்மீரின் கொடியை நாங்கள் ஏற்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். நாங்கள், லடாக்கிய மக்கள் எப்போதுமே இந்த தேசத்தோடு இணைய விரும்பியவர்கள்.

ஜம்யாங் செரிக் நம்கியால்
ஜம்யாங் செரிக் நம்கியால்

எங்கள் மொழியின் பெயர் போத்தி. எழுத்துருவே இல்லாத காஷ்மீரி மொழிக்கு அந்தஸ்து வழங்கினீர்கள். எட்டாம் நகர்வில் அதைச் சேர்த்தும் விட்டீர்கள். ஜம்மு மக்கள் போராடியவுடன் டோக்ரி மொழிக்கும் அந்தஸ்து வழங்கினீர்கள். லடாக்கின் மொழி அங்கீகரிக்கப்படவே இல்லை. இதுதான் உங்கள் சமத்துவமா?

கடந்த 70 வருடங்களாக லடாக்கின் பிரச்னைகள் ஒரு மூலையில் வீசப்பட்டுக் கிடந்தது. இந்த அவை குறிப்பிலும் கூட அது ஒரு புல் கூட முளைக்காத இடம் என்றுதான் இருக்கிறது. லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற வேண்டும், இந்தியாவுடன் முழுமையாக இணைய வேண்டும் என 70 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இதற்கு முந்தய அரசாங்கங்கள் எங்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் இல்லை. காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக்கில் எங்களின் வளர்ச்சி, எங்களின் அடையாளம், மொழி என அனைத்தையும் இழந்தோம். எல்லாவற்றுக்கும் ஆர்ட்டிகிள் 370 யும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம்.

ஜம்மு - காஷ்மீரில் இருக்கும் மாநிலக் கட்சிகள் என்றேனும் லடாக் குறித்தோ, லடாக்கிய மக்கள் குறித்தோ பேசி இருக்கிறீர்களா? லடாக்கின் லே பகுதியிலிருக்கும் மாவட்ட நிர்வாகிகள் எங்களுக்கு தனி யூனியன் பிரதேசம் வேண்டும் என அறிக்கைகள் சமர்பித்தபோது, அவர்களைக் கட்சியைவிட்டு நீக்கிய கட்சிகள் தான் PDPயும், ஜம்மு - காஷ்மீர் நேஷனல் கான்பிரன்ஸும். இப்போது அவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள்.

ஜம்யாங் செரிக் நம்கியால்
ஜம்யாங் செரிக் நம்கியால்

எங்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது, கல்வி மறுக்கப்பட்டது. நரேந்திர மோடியின் தீவிர முன்னெடுப்பால் மட்டுமே, லடாக்கில் தற்போது ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருக்கிறது.

370 சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய காங்கிரஸ், ஜம்மு - காஷ்மீரில் இருக்கும் காஷ்மீர் பண்டிட்களை துரத்தி அடித்தது; புத்த மதத்தை பின்பற்றுபவர்களை இல்லாமல் செய்தது.

கார்கில், லடாக்கில் இருக்கும் மக்களுக்கு லடாக் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி. அரசியல் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கும் இரு குடும்பங்களைத் தவிர, ஒட்டுமொத்த காஷ்மீருக்கும் இது நல்லதொரு முடிவு. ஏனெனில் அந்த இரு குடும்பமும் இங்கு ஆட்சி செய்யவில்லை, ராஜ்ஜியம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். காஷ்மீர் பிரச்னை என இரு குடும்பமும் தொடர்ச்சியாக பேசி வருகிறது. காஷ்மீரின் பிரச்னையே அந்த இரு குடும்பமும்தான். காஷ்மீர் அவர்களின் தந்தை சொத்து என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி எப்போதும் அது நடக்காது.

மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். இத்தனை ஆண்டுக்கால இந்திய வரலாற்றில், லடாக் மக்களின் பிரச்னைகளை இவர்கள்தான் காது கொடுத்துக் கேட்டிருக்கிறார்கள்!
ஜம்யாங் செரிக் நம்கியால்

இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசினார். லடாக்கில் இருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் தொடர்பாக நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது என்றைக்காவது சிந்தித்தது உண்டுமா?” என்ற கேள்விகள் எழுப்பினார்.

தொடர்ந்து, ``சில புத்தகங்களைப் படித்துவிட்டு எங்களைப் பற்றி பேசுகிறார்கள், கார்கில் பற்றி பேசுகிறார்கள். கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும் லடாக் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தை முன்வைத்தோம். மக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் வெற்றிபெற்றோம்.

காஷ்மீரின் சமத்துவம் குறித்துப் பேசுகிறார்கள். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு என, மத்திய அரசிடமிருந்து நிதி வருகிறது. அதில், லடாக்கிற்கும் பங்கு உண்டு. ஆனால், நீங்கள் லடாக்கிற்கு எதையும் தராமல், முழு நிதியையும் காஷ்மீருக்கு எடுத்துச் சென்றீர்கள். இதுதான் உங்கள் சமத்துவமா?” என ஜம்மு - காஷ்மீர் தலைவர்களையும் சாடினார்.

இவரின் இந்தப் பேச்சை அவையிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்றனர். அமித் ஷா இவரது பேச்சை இமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தார். ஸ்மிருதி இரானி, எழுந்து நின்று பாராட்டினார். அவரது உரையில் தவறுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தாலும் தனது ஒரே உரையில் இந்தியா முழுவதும் அறியும்படி ஸ்டார் ஆகிவிட்டார் இந்த இளம் எம்.பி.

இவரது பேச்சை பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட அனைவரும் ஷேர் செய்ததுடன் புகழ்ந்து தள்ளினர். பிரதமர் மோடி, இந்த வீடியோவை ஷேர் செய்து, `எனது இளம் நண்பரான ஜம்யாங் செரிக் நம்கியால் மக்களவையில் சிறப்பான உரை ஒன்றை வழங்கியுள்ளார். லடாக்கில் இருக்கும் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை அவர் பிரதிபலிக்கிறார். கட்டாயம் கேட்க வேண்டிய உரை’ என்று குறிப்பிட்டார்.

பிரதமர் என்னைக் குறிப்பிட்டது பெருமைக்குரிய விஷயம் என ஜம்யாங் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த உரைக்குப் பின்னர் இந்திய அளவில் பிரபலம் ஆகிவிட்டார் ஜம்யாங். முன்னர் லடாக் எம்.பி யார் என்று கேட்டால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்பில்லை.. ஏன் லடாக்கில் பா.ஜ.க வெற்றி பெற்றதைக் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஒரே உரை அவரை அகில இந்திய ஸ்டார் ஆக்கிவிட்டது.

இதன் காரணமாக உரை வழங்கிய ஒரே நாளில் சுமார் 40,000 ட்வீட்கள் அவரைக் குறிப்பிட்டு பதியப்பட்டுள்ளது. மேலும், அவரை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் ஒரே நாளில் 30 மடங்கு அதிகரித்துள்ளது. முன்னதாக 4000 ஃபாலோவர்கள் கொண்டிருந்த அவர் ஒரே நாளில் 1,29,000 ஃபாலோயர்களை பெற்றார்.

ஜம்யாங் செரிக் நம்கியால்
ஜம்யாங் செரிக் நம்கியால்
Facebook

கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் அதிக கேட்கப்பட்ட உரையில் இவரது உரையும் ஒன்று என்று சொல்லும் அளவுக்கு வைரல் ஹிட். இந்த நிலையில், முகநூலில் நேற்று ஒரு பதிவை இட்டார் ஜம்யாங். அதில், ``என்னால் முகநூலிலில் இதற்கு மேல் நண்பர்களை ஏற்க முடியாது. 5,000 என்னும் லிமிட்டை தொட்டுவிட்டேன்.. அதனால் எனது அதிகார முகநூல் பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

காலம் எப்போது யாரை பின்வரிசையில் இருந்து முன்வரிசைக்கு கொண்டு வரும் எனத் தெரியாது. யாரென்றே தெரியாக ஜம்யாங், ஒரே நாளில் ஒரே உரையில் லடாக் பகுதியின் அடையாளமாக மாறியுள்ளார்.