Published:Updated:

அமைச்சரைப் பகைத்துக்கொள்ளாத எடப்பாடி முதல் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் மர்மம் வரை... கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``மழை வெளுத்துக்கொண்டிருக்கிறது... வொர்க் ஃப்ரம் ஹோம். வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருக்கிறேன்” என்றபடி அலைபேசி இணைப்பைத் துண்டித்தார் கழுகார்.

ஆவினில் வள்ளலார் மாற்றம் ஏன்?

ஆவின் மேலாண்மை இயக்குநராக இருந்த வள்ளலாரை, சில தினங்களுக்கு முன்னர் தொழிலாளர் நலத்துறையின் ஆணையராக மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. அந்தப் பதவிக்கு நந்தகோபால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆவின் நிறுவனத்துக்கு வள்ளலார் வந்ததிலிருந்தே அவருக்கும், துறையின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்திருக்கிறது.

வள்ளலார்
வள்ளலார்

``வள்ளலாரை மாற்றுங்கள்” என்று அமைச்சர் பலமுறை கோரிக்கை வைத்தும் அதைக் கண்டுக்கொள்ளவில்லையாம் முதல்வர் பழனிசாமி. இந்தநிலையில் மீண்டுமொரு முறை அதே கோரிக்கையை சற்று காட்டமாகவே வலியுறுத்தினாராம் ராஜேந்திர பாலாஜி. இதையடுத்து, தேர்தல் நேரத்தில் அமைச்சரை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ஆசைப்படி நந்தகோபாலை ஆவின் நிறுவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்களாம்.

`பால் காய்ச்சி’ட்டீங்களா நந்தகோபால்?

உடைகிறதா இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்?

இடதுசாரித் தலைவரான கல்யாணசுந்தரத்தால் தொடங்கப்பட்டது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி. முன்பு, இந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தா.பாண்டியன் சென்ற பிறகு, சுந்தரராஜன் என்பவர் இந்தக் கட்சிக்கு மாநிலச் செயலாளராக இருக்கிறார். மாநிலத் தலைவராக பட்டாபிராமனும், மாநிலப் பொருளாளராக சுந்தரமூர்த்தியும் இருக்கிறார்கள். சுந்தரராஜனுக்கு வயதாகிவிட்டதால் மாநிலச் செயலாளர் பதவியைப் பிடிக்க மாநில செயற்குழு உறுப்பினரான பாஸ்கர் முயன்றாராம். இதனால் நிர்வாகிகளுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு களேபரம் ஆகிவிட்டது என்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், மாநிலப் பொருளாளர் சுந்தரமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் தேனியில் தனியாகப் போட்டிக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடுப்பான சுந்தரராஜன், பட்டாபிராமன் ஆகியோர் ஜனவரி 3-ம் தேதி சேலத்தில் கூட்டம் நடத்தி பாஸ்கர், சுந்தரமூர்த்தி ஆகியோரிடம் யாரும் தொடர்புகொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் செஞ்சட்டைக்காரர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. விரைவில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி உடையவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுக்கெல்லாம் கங்கிராட்ஸ் சொல்ல முடியாது காம்ரேட்ஸ்... வருத்தங்கள்!

தி.மு.க-வின் கிராமசபைக் கூட்டம்
கோவையில் தொடரும் சர்ச்சை!

சமீபத்தில் கோவை தொண்டாமுத்தூரில் தி.மு.க நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண்ணொருவர் புகுந்து கேள்வி எழுப்பியதும், `அமைச்சர் வேலுமணி அனுப்பிய பெண்மணி அவர்’ என்று கூறி தி.மு.க-வினர் அவரைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு அந்தப் பெண் மட்டுமல்ல... ராஜன் என்ற அ.தி.மு.க பிரமுகர் உட்பட மூன்று பெண்களும் வந்திருந்தனராம்.

கோவைப் பெண்
கோவைப் பெண்

ராஜன், ஆலந்துறையில் டாஸ்மாக் கடை விற்பனையாளராக இருக்கிறாராம். இதையடுத்து, ``இவர் எப்படி கடை நேரத்தில் தி.மு.க கூட்டத்துக்கு செல்லலாம்? அவர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று டாஸ்மாக்கின் எதிர்க்கட்சி முகாமிலிருந்து குரல்கள் எழுந்திருக்கின்றன. எதிர்முனையில், `பூங்கொடி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை எப்படி அடிக்கலாம்?’ என்று விஷயத்தை வேறு வகையில் திசை திருப்பவும் திட்டமிடப்பட்டிருக்கிறதாம் அ.தி.மு.க வட்டாரம்.

பூங்கொடியை வெச்சு போர்க்கொடியைத் தூக்கிட்டாங்களே!

கமிஷன் பணத்தில் சிக்கல்!
மயிலை அ.தி.மு.க பஞ்சாயத்து...

புதிதாக உதயமான மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அ.தி.மு.க செயலாளராக செந்தில்நாதன் நியமிக்கப்பட்டார். இதில் அதிருப்தியடைந்த மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மூன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் முதல்வர் வரை முறையிட்டும் `பப்பு’ வேகவில்லை. இந்தநிலையில், பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

இதற்கான ஒப்பந்தப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இதற்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக மாவட்ட ஆளுங்கட்சி பிரமுகருக்குச் சென்றடைய வேண்டுமாம். ஆனால், அந்தப் பணத்தை மற்றவர்கள் சுருட்டிக்கொண்டதால், பிரச்னை கட்சி மேலிடம் வரை சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். தற்போது பணத்தைச் சுருட்டியவர்கள் பற்றி பஞ்சாயத்து நடக்கிறதாம்!

அடிக்கறதே கொள்ளை... இதுல எதுக்கு சொள்ளை!

செந்தில் பாலாஜிக்கு ஷாக்!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேம் ஸ்டார்ட்

தி.மு.க முகாமில் கரூர் செந்தில் பாலாஜி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மோதல் தொடர்பாக ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அல்லவா... அதன் ஃபாலோஅப் இது. ஜனவரி 3-ம் தேதி, வாங்கல் கரூர் மாவட்டம், குப்பிச்சிப்பாளையத்தில் நடைபெற்ற தி.மு.க கிராமசபைக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசி வாய் மூடவில்லை...

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

அடுத்த சில நிமிடங்களில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மின்னாம்பள்ளி பஞ்சாதேவி ஊராட்சிக் கிளைச் செயலாளர் தேவராஜன், நெரூர் தென்பாகம் ஊராட்சிக் கிளை பிரதிநிதி சரவணன், தி.மு.க ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் கௌசல்யா, நெரூர் வடபாகத்தைச் சேர்ந்த மணி ஆகியோர் தலைமையில் கணிசமான எண்ணிக்கையிலான தி.மு.க-வினர், அ.தி.மு.க-வில் இணைந்தனர். ஸ்டாலின் வருகையையொட்டி, செந்தில் பாலாஜிக்கு `ஷாக்’ கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த ஏற்பாட்டைச் செய்தாராம்.

அடுத்து மாறி மாறி கிட்னாப் பண்ணுவாங்களோ!

பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்!
வதந்தியா, உண்மையா?

சமீபத்தில் பா.ஜ.க தரப்பிலிருந்து தமிழகத்தில் 38 தொகுதிகளைப் பட்டியலிட்டு, அவற்றுக்கு வேட்பாளர்களையும் தேர்வுசெய்ததுபோல இணையத்தில் ஒரு பட்டியல் வைரலானது. இந்தப் பட்டியலில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதிக்கு குஷ்பு, தூத்துக்குடி தொகுதிக்கு சசிகலா புஷ்பா, நெல்லை தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் அடங்கியிருந்தனர். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு பஞ்சாயத்தே இன்னமும் முற்றிலுமாக முடிவுக்கு வராத சூழலில், இந்தப் பட்டியல் எடப்பாடி தரப்பை ஏகத்துக்கும் அப்செட் ஆக்கியிருக்கிறதாம்.

அமித் ஷா
அமித் ஷா

இதையடுத்து, உளவுத்துறையை விசாரிக்கும்படி முடுக்கியதாம் எடப்பாடி தரப்பு. `வரும் ஜனவரி 14-ம் தேதி சென்னைக்கு அமித் ஷா வரவிருக்கும் நிலையில் பா.ஜ.க தரப்பிலிருந்தே சிலர் இப்படிக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்... இதில் உங்கள் கட்சியிலிருந்தும் சிலர் ஊக்குவித்திருக்கிறார்கள்’ என்று உளவுத்துறை `நோட்’ போடவே கடுகடுவென இருக்கிறாராம் எடப்பாடி.

அந்த 38 பேரை தேத்தறதுக்குள்ள அவங்கபட்ட பாடு அவங்களுக்குதானே தெரியும் ஜி!

ஸ்டாலினுக்கு `மந்திரக் கயிறு’ முதல் பொங்கலுக்கு சசிகலா வரை கழுகார் அப்டேட்ஸ்...
பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு!

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவருமான ஓ.வி.அழகேசனின் நினைவுநாள் ஜனவரி 3-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதற்காக நினைவுநாள் பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஓ.வி.அழகேசனின் புகைப்படத்துக்கு பதிலாக, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் படத்தைப் போட்டு பதிவிட்டுவிட்டார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

இதையடுத்து கே.எஸ்.அழகிரியின் ட்வீட்டை எடுத்து கிண்டலடித்திருக்கும் பா.ஜ.க-வின் கலைப் பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராம், `அழகேசனின் முகம் நினைவுக்கு வரவில்லையா அல்லது அழகேசன் யார் என்பதே கே.எஸ்.அழகிரிக்கு தெரியவில்லையா?’ என்று கேள்வியால் குடைந்தெடுத்திருக்கிறார். இரு தலைவர்களின் முகமும் ஏறக்குறைய ஒரே சாயலில் இருப்பதால், அழகேசனுக்கு பதிலாக மொரார்ஜி தேசாயின் படத்தைப் பதிவிட்டுவிட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் அசடுவழிகிறார்கள்.

அமித் ஷா பர்த் டேவுக்கு சந்தான பாரதிக்கு வாழ்த்து தெரிவிப்பாரோ!

கனிமொழி பிறந்தநாள்
சந்தேகம் குறையாத கிச்சன் கேபினெட்

தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழியின் 52-வது பிறந்தநாள் விழா, ஜனவரி 5-ம் தேதி கொண்டாடப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல், தமிழகம் முழுக்கவிருந்தும் வந்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் சி.ஐ.டி காலனியையே திணறடித்துவிட்டனர்.

கனிமொழி - ஸ்டாலின்
கனிமொழி - ஸ்டாலின்

கனிமொழி செல்லும் பிரசாரங்களுக்குக் கூட்டம் கூடுவதை ஆள்விட்டு நோட்டம் பார்த்த தி.மு.க-வின் கிச்சன் கேபினெட், கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யார் யாரெல்லாம் வந்தார்கள், எவ்வளவு கூட்டம் வருகிறது என்று தீவிரமாகத் தகவல்களைத் திரட்டியதாம். அன்றைய தினம், ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி, தலைமைக்கு எதிராகத் தான் இல்லை என்பதை மறைமுகமாக சிக்னல் அனுப்பினாலும், கிச்சன் கேபினெட்டின் சந்தேகம் மட்டுமே தீரவில்லை என்கிறது தி.மு.க வட்டாரம்.

கிச்சனுக்கு அழகு சமையல்... சந்தேகம் அல்ல!

அடுத்த கட்டுரைக்கு