Published:Updated:

`கலைஞர் நினைவு நூலகம் கமிஷன் சர்ச்சை முதல் மோடியைத் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ வரை' கழுகார் அப்டேட்ஸ்

கழுகார்
கழுகார்

“செய்திகளை மெசஞ்சரில் அனுப்பியிருக்கிறேன்” என்று குறுந்தகவல் அனுப்பினார் கழுகார்... மெசஞ்சரை ஓப்பன் செய்தால் ஏரியா செய்திகளை அள்ளித் தெளித்திருந்தார்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘‘மோடியைப் புகழ்ந்தாரா... இகழ்ந்தாரா?’’

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்திவருகிறார்கள். பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார் புதுச்சேரியின் கடன்தொகை குறித்துப் பேசும்போது, ‘‘8,000 கோடி ரூபாயில் தனி விமானம் வாங்கத் தெரிந்த பிரதமர் மோடிக்கு, புதுச்சேரியின் 9,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வது ஒரு பெரிய பிரச்னை இல்லை’’

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

என்று கூற, சட்டென முகம் மாறிய முதல்வர் ரங்கசாமி, ‘ஏன்?’ என்பதுபோல அவரை உற்றுப் பார்த்தார். ‘பிரதமரைப் புகழ்கிறாரா... இகழ்கிறாரா?’ என்று குழம்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும், “கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது என்று கூறியவர்தானே இவர்?” என்றபடி தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்!

விழா பூலித்தேவனுக்கா, அழகு முத்துக்கோனுக்கா?
போட்டோவை மாற்றிய நெல்லை தி.மு.க!

ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட மன்னர் பூலித்தேவனின் 306-வது பிறந்த தினத்தையொட்டி, தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவல் கிராமத்திலுள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதேசமயம், நெல்லை தி.மு.க அலுவலகத்தில், மன்னர் பூலித்தேவன் படத்துக்கு பதிலாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரன் அழகு முத்துக்கோன் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் அந்தப் படத்துக்கே மாலை அணிவித்தார்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு, அங்கு வந்த கட்சித் தொண்டர் ஒருவர் படம் மாறியிருப்பது பற்றி அங்கிருந்தவர்களிடம் தெரிவித்த பின்னரே சரியான படம் வைக்கப்பட்டது. ‘‘சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் தெரியாதவர்கள்தான் கட்சி நிர்வாகிகளாக இருக்கிறார்கள்’’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள்

நிர்வாகிக்காகக் காத்திருந்த முன்னாள் அமைச்சர்
அடடே ஆச்சர்யம்!

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஓ.பி.எஸ் கைதுசெய்யப்பட்ட அன்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நாகர்கோவில் பூங்கா முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக மாவட்டச் செயலாளர் அசோகன், முன்னாள் அமைச்சர் பச்சைமால் ஆகியோர் முதலிலேயே வந்துவிட்டார்கள். நாகர்கோவில் மாநகரச் செயலாளர் சந்துரு டவுனுக்கு வெளியே இருந்தார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அவரை ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்த பச்சைமாலும் அசோகனும் அரை மணி நேரத்துக்கும் மேல் அவருக்காகக் காத்திருந்து, மாநகரச் செயலாளர் வந்த பிறகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்போது கீழ்மட்ட நிர்வாகிகளுக்காக யாரும் காத்திருக்க மாட்டார்கள். ஆனால், மாநகரச் செயலாளர் வருவதற்காக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும் பொறுமையாகக் காத்திருந்தது தொண்டர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூண்டோடு பதவி பறிப்பு
மயிலாடுதுறை அ.தி.மு.க உள்குத்து!

மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவான பிறகு, மயிலாடுதுறை அ.தி.மு.க நகரச் செயலாளராக இருந்த செந்தில்நாதனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மூலம் பவுன்ராஜ் தன்வசமாக்கிக்கொண்டார். செந்தில்நாதனுக்கு அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. செந்தில்நாதனை மையமாக வைத்து அதன் பிறகு நடந்தவைதான் அதகளம் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். தற்போது அந்தப் பதவியையும் பறித்து, மணக்குடியைச் சேர்ந்த சங்கருக்கு வழங்கியிருக்கிறார்கள்.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்
அடம்பிடிக்கும் பழனிவேல் தியாகராஜன் முதல் பொருளாளரால் வாடிய தலைவர் வரை! -கழுகார் அப்டேட்ஸ்

இன்னொரு பக்கம் குத்தாலம் ஒன்றியச் செயலாளராக இருந்த செந்தில்நாதனின் உறவினர் ராஜேந்திரன், அவரின் மகன் ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டு கட்சியைவிட்டே நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, செந்தில்நாதனின் ஆதரவாளரான மயிலாடுதுறை நகரச் செயலாளர் நாஞ்சில் கார்த்தியின் பதவியும் பறிக்கப்பட்டு, அ.தி.மு.க-வில் சமீபத்தில் இணைந்த செந்தமிழனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ‘‘பூம்புகார் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பவுன்ராஜ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தான் தோற்றதற்கு, செந்தில்நாதன் தரப்பினர்தான் காரணம் என்று கருதி, பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதையெல்லாம் செய்துவருகிறார்’’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

முன்னாள் அமைச்சர்களுக்காக விதிமீறல்...
இன்னாள் அமைச்சரை கவனித்த அதிகாரி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சார் பதிவாளராகப் பணியாற்றிய முருகக்கடவுளின் பெயரைக்கொண்டவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்குடன் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் ஆசியுடன் முறைகேடு சொத்துகளைப் பதிவுசெய்து கல்லாகட்டி வந்திருக்கிறார்.

பணம்
பணம்

சென்னை முகப்பேரிலுள்ள வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை, கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் கைகாட்டியவர்களுக்கு விதிகளை மீறி பதிவுசெய்து கொடுத்தார். அந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தென் மாவட்ட மாண்புமிகு ஒருவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தெம்புடன் திரும்பியிருக்கிறாராம் அதிகாரி.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்...
கமிஷனுக்காக உயர்த்தப்பட்டதா நிதி?

‘மதுரையில் கலைஞர் நினைவு ஹைடெக் நூலகம் 70 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடம் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், திட்ட மதிப்பீட்டை 70 கோடியிலிருந்து 99 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறது அரசு. வேலை தொடங்கும் முன்பே திட்ட மதிப்பீடு 29 கோடி உயர்ந்திருப்பதற்குக் காரணம் கமிஷன் விவகாரம்தான் என்று கண்சிமிட்டுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

`கலைஞர் நினைவு நூலகம் கமிஷன் சர்ச்சை முதல் மோடியைத் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ வரை' கழுகார் அப்டேட்ஸ்

இடத்தைப் பார்வையிட இனிஷியல் அமைச்சர் மதுரை வந்திருந்தபோது, ‘எலெக்‌ஷனுக்குச் செலவு செய்ததை எடுக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டை உயர்த்துங்கள்’ என்று மதுரை தி.மு.க நிர்வாகிகள் சிலர் கேட்டுக்கொண்டதாலேயே மதிப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டதாம்!

கல்லணையில் கமிஷன் விளையாட்டு!

தஞ்சை மாவட்டத்தில் கல்லணையிலிருந்து பிரியும் காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாயைச் சீரமைக்கும் பணிக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் மத்திய அரசு முதற்கட்டமாக 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கால்வாயில் தரைத்தளம், கரைகளில் கான்கிரீட் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டன.

கல்லணை
கல்லணை
ம.அரவிந்த்

இந்தப் பணியை முன்னாள் உச்ச புள்ளிக்கு நெருக்கமான நிறுவனங்களே டெண்டர் எடுத்திருந்தன. , ‘கல்லணைக் கால்வாய் சீரமைப்புப் பணி தரமில்லாமல் நடைபெறுகிறது. டெண்டர் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்க வேண்டும்’ என விவசாயிகள், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பியிருக்கிறார்கள். ஆனாலும், உள்ளூரில் இது குறித்து குரல் கொடுக்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மூவர், பெறவேண்டியதைப் பெற்றுவிட்டதால் மெளனம் காப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

அமைச்சர் - எம்.எல்.ஏ பனிப்போர்...
ரத்து செய்யப்பட்ட தடுப்பூசி முகாம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும், தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கும் ஏற்கெனவே பனிப்போர் உச்சத்தில் இருக்கிறது. இந்தநிலையில், செப்டம்பர் 1-ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி முகாம்கள் நடத்த தொழிலாளர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக ஏராளமான தொழிலாளர்கள் காத்திருந்த நிலையில், திடீரென நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

தா.மோ.அன்பரசன்
தா.மோ.அன்பரசன்

இந்த விவரம், பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதிக்கும் சொல்லப்படவில்லையாம். இதற்கெல்லாம் காரணம், அன்பரசனுக்கும் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைதான் என்று முணுமுணுக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு