Published:Updated:

சீனியர்களைப் புறக்கணித்த ஸ்டாலின் முதல் அழகிரி பிறந்தநாளுக்கு பா.ஜ.க-வின் மூவ் வரை-கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

`பெங்களூரில் இருக்கிறேன்... சசிகலா உடல்நிலை அப்டேட்ஸ் திங்கள்கிழமை தருகிறேன். இப்போது மெயில் செக் செய்யவும்.’ - மெசேஜ் அனுப்பினார் கழுகார்.

தி.மு.க பேச்சாளர் பட்டியலில்
இறந்துபோனவர் பெயர்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் விதமாக தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் தி.மு.க-வில் பொதுக்கூட்டங்களை நடத்துவது வழக்கம். அந்தவகையில் தி.மு.க பொதுக்கூட்டங்களில் பேசும் கட்சிப் பிரமுகர்களின் பட்டியல் ஜனவரி 20-ம் தேதியன்று முரசொலியில் வெளியானது. அதில், குடியாத்தத்தில் பேசுகிறவர்கள் பட்டியலில் மதுரை சலீம் என்ற பேச்சாளரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

அறிவாலயம்
அறிவாலயம்

ஆனால், அவர் உயிருடன் இல்லை. டிசம்பர் 2019-ல், அவரது திருவுருவப் படத்தை மதுரை கோரிப்பாளையத்தில் ஸ்டாலின் திறந்துவைத்திருக்கிறார். அப்படியிருந்தும், இறந்துபோன ஒருவரின் பெயர் எப்படிப் பட்டியலில் இடம்பெற்றது என்று புரியாமல் விழிக்கிறார்கள் கழகப் பேச்சாளர்கள். இதேபோல, வேறு கட்சிக்குச் சென்ற சிலரின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனவாம்.

ஒருவேளை ஆவியா வந்து பேசுவாரோ!

``எப்படி இருந்தவன் நான்!’’
புலம்பும் நீலகிரி அர்ஜுனன்

ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் செல்வாக்காக இருந்தவர் நீலகிரி அர்ஜுனன். மாவட்டச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் என்று எகிறிக்கொண்டிருந்த அவர் செல்வாக்கு, எடப்பாடி பழனிசாமியின் வருகைக்குப் பின்னர் படிப்படியாகச் சரியத் தொடங்கியது.

அர்ஜுனன்
அர்ஜுனன்
கே.அருண்

கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அர்ஜுனன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆக்டிவ்வாக இல்லை. இந்தநிலையில் தற்போது, கூட்டுறவுத்துறையில் பத்து ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த ஆளுங்கட்சி நியமனப் பதவி ஒன்றை முட்டி மோதிப் பெற்றிருக்கிறார் அர்ஜுனன். `எப்படி இருந்தவன் நான். கடைசியில, இப்படி ஒரு கடைநிலைப் பதவிக்கு வரிசையில நிக்கும்படிவெச்சுட்டாங்களே...’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்த்திருக்கிறார் அர்ஜுனன்.

அம்பு விடலைங்களா அர்ஜுனன் சார்!?

பொள்ளாச்சி விவகாரம்...
தி.மு.க-வுக்கு ஸ்கெட்ச் போடும் அ.தி.மு.க!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு மீண்டும் தூசிதட்டப்பட்டிருப்பதால், அப்செட்டில் இருக்கிறது அ.தி.மு.க. அதேநேரத்தில், தி.மு.க மீண்டும் அந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது. ஆனால், தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தொடங்கி, சில தி.மு.க நிர்வாகிகள் ஆர்வக்கோளாறில் சர்ச்சையில் சிக்கிவருகிறார்கள். விவாத நிகழ்ச்சி ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் கூறி தென்றல் செல்வராஜ் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கட்சிக்குள்ளேயே அதற்கு எதிர்ப்பும் எழுந்தது. இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

தென்றல் செல்வராஜ்
தென்றல் செல்வராஜ்

அதேபோல, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனைத் தொடர்புபடுத்தி ஃபேஸ்புக்கில் விமர்சித்த இரண்டு தி.மு.க பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, இந்த விவகாரம் தொடர்பாக, ஊடகங்களில் ஆக்டிவ்வாக பேட்டி அளித்துவரும் தி.மு.க-வினருக்கு ஸ்கெட்ச் போட்டு வருகிறதாம் ஆளும் தரப்பு.

அடுத்த ஆட்சியிலும் விடாதோ பொள்ளாச்சி!

ஒரு மணி நேரத்துக்கு 50 அதிகாரிகள்!
திரிபாதி வீட்டுத் திருமணம்...

தமிழக சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யான திரிபாதியின் மகன் திருமணம் சமீபத்தில் ஜம்முவில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழகத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி-யான ஜெயந்த் முரளி கலந்துகொண்டார். திருமண வரவேற்பு விருந்தை ஜனவரி 22, 23-ம் தேதிகளில் சென்னையில் நடத்தியிருக்கிறார் திரிபாதி.

திரிபாதி
திரிபாதி

சென்னையின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், ஒரு மணி நேரத்துக்கு 50 அதிகாரிகள் வீதம் மட்டும் கலந்துகொள்ளும்படி நிகழ்ச்சி நிரலை அமைத்தாராம். மணமக்களை வாழ்த்திவிட்டு இவர்கள் கிளம்பியதும், அடுத்த 50 அதிகாரிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டதாம். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திரிபாதி எடுத்ததாகக் கூறப்படுகிறது.

சட்டம் தன் கடமையைச் செய்தது!

‘‘அரசின் அஜாக்கிரதை...
தேர்தல் நேரத்தில் திணறப்போகுது போலீஸ்!’’

தேர்தல் நெருக்கிவிட்டாலே மண்டல காவல்துறை ஐ.ஜி-க்கள் பணியிடங்களை கவனமாகத்தான் நிரப்புவார்கள். புதிதாக ஒருவர் பணியமர்த்தப்பட்டால், மாவட்டங்களின் தன்மையைப் புரிந்துகொண்டு சூழலுக்கேற்ப முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், இந்த முன்னேற்பாடு நடவடிக்கை இருக்கும். வடக்கு மண்டல ஐ.ஜி-யான நாகராஜ் வரும் ஜனவரி 31-ம் தேதியுடனும், மேற்கு மண்டல ஐ.ஜி-யான பெரியய்யா இன்னும் இரண்டு மாதங்களிலும் ஓய்வு பெறவிருக்கிறார்கள்.

யாரையும் நம்பாத தினகரன் முதல் நெல்லையிலிருந்து உதயநிதிக்கு ஓலை வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

இது குறித்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் தரப்பில், “இந்த ஐ.ஜி-க்கள் பொறுப்புக்குப் புதிதாக யார் நியமிக்கப்பட்டாலும், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் சிரமம் ஏற்படும். இருவரும் ஓய்வு பெறப்போவது அரசுக்கு முன்கூட்டியே தெரிந்தும், அதற்கேற்ப முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை. இப்போது புதிதாக ஒருவரை ஐ.ஜி-யாக நியமித்து, அவர் பகுதி மக்கள், அரசியல் சூழலைப் புரிந்துகொள்வதற்குள் தேர்தல் வந்து சென்றுவிடும். அரசின் அஜாக்கிரதையால் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் போலீஸ் திணறத்தான்போகிறது’ என்கிறார்கள்.

புது ஐ.ஜி... ஆவோ ஆவோ ஜி!

‘‘ரெளடிகள் கூடாரமாகிறதா பா.ஜ.க?’’
அச்சத்தில் பொதுமக்கள்...

தலைவர்களை அடைமொழியிட்டு அழைப்பது அரசியலில் வழக்கம். இது அந்தந்தத் தலைவர்களின் ஆளுமையை வியந்து, மக்களும் தொண்டர்களும் வழங்குவது. ஆனால், பா.ஜ.க-வில் எல்லாமே உல்டாவாக நடக்கிறது. போலீஸிடம் அடைமொழி பெற்றுக்கொண்ட ரெளடிகளெல்லாம் வரிசையாகக் கட்சியில் இணைகிறார்கள். ‘கல்வெட்டு’ ரவி, ‘கஞ்சா’ அஞ்சலை, சீர்காழி ரெளடி சத்யா என்று பா.ஜ.க-வின் கரத்தை வலுப்படுத்தியவர்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார் எழிலரசி.

பா.ஜ.க-வில் இணைந்த எழிலரசி
பா.ஜ.க-வில் இணைந்த எழிலரசி

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் உள்ளிட்ட பல கொலை வழக்குகளில் சிறை சென்று, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்தான் இந்தக் காரைக்கால் பெண் தாதா எழிலரசி. இவரைக் கட்சியில் இணைத்து ரெளடிகளின் கூடாரத்தை விரிவுப்படுத்தியிருக்கிறது புதுச்சேரி பா.ஜ.க. காரைக்கால் டி.ஆர்.பட்டினம் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் இவர் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

‘தங்கத்தாமரை மகளே...’ என்று வரவேற்பு அளித்திருப்பார்களோ!

அழகிரி - நட்டா சந்திப்பு...
காய்நகர்த்தும் பா.ஜ.க தலைவர்கள்!

ஜனவரி 30, 31-ம் தேதிகளில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா. 234 தொகுதிகளின் பா.ஜ.க அமைப்பாளர்களுடன் அவர் கலந்தாலோசனை நடத்தவும் ஏற்பாடாகிறது. அப்போது, ஜனவரி 30-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் அழகிரியை, நட்டா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவைக்க சில தமிழக பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாக முயல்கிறார்களாம்.

அழகிரி
அழகிரி

இதன் மூலமாக, தி.மு.க தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்க முடியும் என்று டெல்லிக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்களாம். இன்னொருபுறம், ‘அழகிரி குறித்து இனி யாரும் பொதுவெளியில் பேசிக்கொள்ள வேண்டாம்’ என்று சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மா.செ-க்களுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின் பேட்டா... மாறுவாரா ஓட்டா... கொஞ்சம் சிந்தியுங்க நட்டா!

சாதா டி.ஜி.பி...
ஸ்பெஷல் டி.ஜி.பி...

சென்னை மெரினா சாலையிலுள்ள டி.ஜி.பி அலுவலகக் கட்டடத்தில், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதியின் அலுவலகம் அமைந்திருக்கிறது. ஸ்பெஷல் டி.ஜி.பி ராஜேஷ் தாஸும் இங்குதான் இருக்கிறார். இவர்கள் போக ஷகீல் அக்தர், கந்தசாமி என்று இரண்டு டி.ஜி.பி-க்களின் அலுவலகமும் அமைந்திருக்கிறது.

டி.ஜி.பி திரிபாதி
டி.ஜி.பி திரிபாதி

இவர்களைப் பார்க்க வருபவர்களெல்லாம், பொத்தாம் பொதுவாக டி.ஜி.பி-யைப் பார்க்க வேண்டும் என்று கேட்பதாலும், அலுவலர்களிடையே குழப்பம் ஏற்படுவதாலும் அதைத் தவிர்ப்பதற்காக ஷகீல் அக்தர், கந்தசாமி இருவரையும் ராஜேஷ் தாஸுக்கு இணையாக ‘ஸ்பெஷல் டி.ஜி.பி’ என்கிற அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது உள்துறை.

ஸ்பெஷலா கவனிக்கணுமோ!

சீனியர்களை ஒதுக்குவது நியாயமா?
கொந்தளிக்கும் நாமக்கல் தி.மு.க!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலுள்ள பாதரை ஊராட்சியில், சமீபத்தில் தி.மு.க-வின் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக குமாரபாளையம் வந்த ஸ்டாலினுக்கு, வெப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வெப்படை செல்வராஜ் தலைமையில் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். இதற்காகப் பல லட்சங்களை செல்வராஜ் செலவழித்த நிலையில், வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும்போது அவர் பெயரைக்கூட ஸ்டாலின் சொல்லவில்லையாம். இதனால், வெப்படை செல்வராஜின் ஆதரவாளர்கள் நொந்துவிட்டார்கள். பாதரை கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, முன்னாள் மாவட்டச் செயலாளர் ‘பார்’ இளங்கோவின் பெயரையும் எங்குமே குறிப்பிடவில்லையாம். இதுவும் புகைச்சலாகியிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

‘காந்திசெல்வன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, கட்சியின் சீனியர்களைத் தலைவரின் காரில் ஏற்றி உடன் அழைத்துச் செல்வார். இதனால், கட்சி நிர்வாகிகளுக்கும் மனதளவில் ஒரு பூஸ்ட் கிடைக்கும். இந்தமுறை, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான கே.எஸ்.மூர்த்தி, சீனியர்கள் யாரையும் ஸ்டாலின் கார் அருகேகூட அனுமதிக்கவில்லை. இதை ஸ்டாலினும் கண்டுகொள்ளவில்லை. சீனியர்களை இப்படிப் புறந்தள்ளுவது நியாயமா?’ என்று கொந்தளிக்கிறது தி.மு.க தரப்பு.

இப்பவே இப்படி!

பாரதிதாசன் பல்கலைக்கு புது துணைவேந்தர்
முட்டி மோதும் சென்னை புள்ளி...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மணிகண்டனின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. புதிய துணைவேந்தர் பதவிக்கு 143 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். அதில், இறுதிப் பட்டியலை கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறது கமிட்டி. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்களும், சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இருக்கின்றனவாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய கடவுளின் பெயரைக்கொண்ட பேராசிரியர் ஒருவர், அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் மூலம் துணைவேந்தர் பதவியைப் பெற ஸ்வீட் பாக்ஸுடன் முட்டி மோதிவருகிறாராம். இதற்கிடையே துணைவேந்தர் பட்டியலில் இருப்பவர்களின் பின்புலம், அவர்கள் யாருக்காவது பணம் கொடுத்திருக்கிறார்களா என்றெல்லாம் கவர்னர் அலுவலகம் ரகசியமாக விசாரித்துவருகிறதாம்.

வி.சி... கிடைக்காது ஓசி!

அடுத்த கட்டுரைக்கு