Published:Updated:

அடித்துவிடுகிறாரா எடப்பாடி முதல் மணல் கொள்ளையில் சிக்கிய தி.மு.க புள்ளிவரை..! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``மெரினா பீச் வரை செல்கிறேன். மெயிலை செக் செய்யும்...” என்று மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார்.

தி.மு.க-வுக்கு ரூட் போட்ட நாஞ்சில் முருகேசன்!

சிறார் வதை வழக்கில் 2019, ஜூலை 29-ம் தேதி கைதுசெய்யப்பட்ட நாகர்கோவில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். அ.தி.மு.க-வில் இனி இடம் கிடைக்காது என்பதால், மீண்டும் அ.ம.மு.க-வுக்குச் செல்லும் திட்டத்துடன், சசிகலா உடல்நலம் பெறவேண்டி நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஜனவரி 22-ம் தேதி குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார்.

நாஞ்சில் முருகேசன்
நாஞ்சில் முருகேசன்

ஆனால், அ.ம.மு.க-வினர் யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. சசிகலா ரூட்டும் பாழானதால் நொந்துபோன முருகேசன், ஜனவரி 23-ம் தேதி இரவு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரைச் சந்தித்துப் பேசினாராம். `அண்ணே, என்னை தி.மு.க-வுல எப்படியாச்சும் சேர்த்துவிட்டுருங்க’ என்று முருகேசன் போட்ட பிட்டைப் பார்த்து ஆடிப்போன அந்த எம்.எல்.ஏ., `ஏம்ப்பா, மறுபடியும் சீட் கேட்கலாம்னு நினைக்குறேன். முதலுக்கே வேட்டுவெச்சிடுவ போலயே..’ என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

ஆடுன ஆட்டம் என்ன..!

`மணல் திருட்டைக் கட்டுப்படுத்துங்கள்!’
சிரிப்பு மூட்டிய தி.மு.க போஸ்டர்

தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக சமீபத்தில் நெல்லை கனிமவளத்துறை பெண் அதிகாரி ஒருவர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். மேற்கண்ட அதிகாரியுடன் தொடர்பிலிருந்த முகமது சமீர் என்பவரை நெல்லை போலீஸார் சென்னையில்வைத்துக் கைதுசெய்திருக்கிறார்கள். கைதான முகமது சமீர், சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சி. அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க-வில் சிறுபான்மைப் பிரிவில் பொறுப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அப்துல் வஹாப்
அப்துல் வஹாப்

மணல் கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு இணையாக, மத்திய மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவருக்கும் பங்கு போயிருக்கிறதாம். இதை முகமது சமீர் கச்சிதமாக முடித்துக் கொடுத்ததால், அதற்கு பிரதிபலனாகக் கட்சிப் பொறுப்பு அளிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்த உடன்பிறப்புகள். உண்மை இப்படியிருக்க... மணல் கொள்ளைக்கு எதிராக நெல்லை மாநகரம் முழுவதும் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். இந்த போஸ்டர்களைப் பார்த்து தி.மு.க-வினரே நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

அடுத்து, `அண்ணனின் நூறாவது மணல் கொள்ளை’ என்று போஸ்டர் அடிப்பாங்களோ!

தொடரும் தற்கொலை மிரட்டல்கள்...
திணறும் கட்சித் தலைமைகள்!

சமீப நாள்களாக கட்சிக் கரைவேட்டிகளின் தற்கொலை மிரட்டல் கோஷம் அதிகரித்துவருகிறது. ஏற்கெனவே, முதல்வர் எடப்பாடியிடம் ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்திருந்தார் என்று தகவல்கள் கசிந்தன. தொடர்ந்து, புதுச்சேரியில் பொதுக்கூட்ட மேடையிலேயே ஜெகத்ரட்சகன், தற்கொலை செய்துகொள்வதாக `சின்னப்பிள்ளை’போலக் கண்ணைக் கசக்கினார். இப்போது திருவள்ளூர் மாவட்டத்தின் ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரும் தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறாராம். அந்த மாவட்டத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போதுதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவருகின்றனர்.

திருவேற்காடு நகரத்தில் நீண்டகாலமாக முக்கியப் பதவியிலிருக்கும் ஒருவர், உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக வீட்டைவிட்டு அதிகம் வெளிவராமல் இருந்தார். அவர் ஆக்டிவ் அரசியலில் இல்லாததால், தேர்தலையொட்டி அவரை மாற்றிவிட்டு, வேறொருவரை நியமிக்கலாம் என்று மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் முடிவு செய்திருக்கின்றனர். இதைக் கேள்விப்பட்ட அந்தப் புள்ளி, `பதவியிலிருந்து என்னை மாற்றினால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டுவதால், மாவட்ட அ.தி.மு.க கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது.

விட்டா, `செத்து செத்து விளையாடலாமா’ன்னு கேட்பாங்கபோல!

ஐ.பி.எஸ் அதிகாரியிடமே
ஜகா வாங்கிய மைக்செட்!

குடியரசு தின விழாவில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேடைக்கு அருகே சவுண்ட் ஸ்பீக்கர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. வழக்கமான ஒலி அளவைவிடக் கூடுதலாக வைக்கப்பட்டிருந்ததால், பல அதிகாரிகளும் சத்தம் தாங்க முடியாமல் தவித்திருக்கிறார்கள். சில அதிகாரிகள், ‘சவுண்டைக் குறைச்சு வையுங்கப்பா’ என்று கேட்டுக்கொண்ட பிறகும், மைக் செட் அமைத்திருந்தவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

குடியரசு தின விழா
குடியரசு தின விழா

இதில் டென்ஷன் ஆன மாநிலத்தையே மிரட்டும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், மைக் செட்காரரைச் சத்தம் போட்டுக் கூப்பிட, திரும்பிப் பார்த்த அந்த நபர், சைகையிலேயே `முடியாது... முடியாது’ என்று சொல்லி அமைச்சர் ஒருவரைக் கைகாட்டினாராம். விழிபிதுங்கிப்போன ஐ.பி.எஸ் அண்ட் கோ வேறுவழியின்றி சத்தத்தைத் தாங்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறது.

சவுண்ட் விட்டும் சவுண்ட் குறையலையே!

அமைச்சர் பெயரில் மோசடி!
ஆட்டம் காணும் `பெஞ்சு’...

சமீபத்தில் பூந்தமல்லி நகராட்சியின் முக்கிய அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டில் சிக்கினார். அவரிடம் அள்ளிவந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதில், அமைச்சரின் பெயரைச் சொல்லி இரண்டு பிளாட்டுகளை வாங்கி, தன் பினாமி பெயரில் பத்திரப்பதிவு செய்திருக்கும் விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஊழல்
ஊழல்
Representational Image

இதற்கிடையே அரசு மருத்துவமனையின் முக்கியப் பதவியில் இருக்கும் அந்த அதிகாரியின் மனைவி, கணவரைக் காப்பாற்ற சில டீல்களை முடித்திருக்கிறாராம். இன்னொரு பக்கம், தேர்தல் நேரத்தில் அமைச்சரின் பெயர் அடிபடுவதால், தான் அமர்ந்திருக்கும் `பெஞ்சு’க்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதால் அமைச்சர் தரப்பிலிருந்தும் அமைதி காக்கிறார்களாம்.

திருடனுக்கு தேள் கொட்டுன கதையாயில்ல இருக்கு!

கமென்ட் அடித்தாரா பிரதமர்?
இல்லை, அடித்துவிடுகிறாரா எடப்பாடி?

`சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை’ என்கிற முதல்வரின் தடலாடி அறிவிப்பு, அ.தி.மு.க கட்சிக்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வரிடம் சில நிர்வாகிகள், `சசிகலாவைப் புறக்கணித்தால், தென்மாவட்டங்களில் கட்சிக்கு பாதிப்பு வருமே?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி

அதற்கு எடப்பாடி, ``நானாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பிரதமரைச் சந்தித்தபோது, அவர்தான், `டோன்ட் இன்க்ளூட் தட் லேடி இன் ஏடிஎம்கே’ என்று ஆங்கிலத்தில் சொன்னார். அதைத்தான் நானும் வெளியே சொன்னேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பை நடத்திவிடத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் டீம், பிரதமர் இப்படிச் சொல்ல வாய்ப்பில்லை என்று உறுதியாகச் சொல்லிவருகிறது.

துரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது!

ராகுலைப் புறக்கணித்த சிதம்பரம்!

ராகுல் காந்தியின் கொங்கு மண்டலப் பிரசாரத்தின்போது, ப.சிதம்பரம் தமிழகத்தில்தான் இருந்தார். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மீதிருக்கும் வருத்தத்தால், ராகுல் நிகழ்ச்சிகளை சிதம்பரம் புறக்கணித்துவிட்டார் என்கிறார்கள் கதர் வேட்டிகள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சில நாள்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற கார்த்தி சிதம்பரத்தை கேஸ்.எஸ்.அழகிரி சரியாக மதிக்கவில்லையாம். அந்த வருத்தத்தில் அவரும் ராகுல் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே திரும்பிவிட்டார் என்கிறார்கள். விரைவில் கட்சி மேலிடத்தில் இதைப் புகாராக கொண்டுசெல்லவிருக்கிறதாம் கார்த்தி சிதம்பரம் தரப்பு.

'பப்பு' வேகுமா?!

கனிமொழியின் ஆட்டோ பாசம்!

முதல்வர் பழனிசாமி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்வரை பிரமாண்டமான பிரசார வாகனங்களில் சென்று பிரசாரம் செய்துவரும் நிலையில், தி.மு.க மகளிரணித் தலைவரான கனிமொழியோ, பல இடங்களில் `பொசுக் பொசுக்’கென்று ஆட்டோவில் ஏறிச் சென்று பிரசாரப் பகுதிகளுக்குச் சென்றுவிடுகிறாராம்.

கனிமொழி
கனிமொழி

சமீபத்தில் நெல்லை பாளையங்கோட்டை பகுதிக்கு `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசாரத்துக்காகச் சென்றவர், குறிப்பிட்ட பிரசார பாயின்ட்டுக்குச் செல்வதற்காக அங்கு நின்றுகொண்டிருந்த பெண் டிரைவரின் ஆட்டோவில் ஏறிப் பிரசாரத்துக்கு சென்றார். தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் ஆட்டோ பயணம் மேற்கொண்டவர், பெண் ஆட்டோ டிரைவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

இதை முன்வைத்துப் பேசும் ஆளுங்கட்சியினர் சிலர், ``தேர்தல் நேரத்தில் ஸ்டன்ட் அடிக்கிறார் கனிமொழி” என்று விமர்சனங்களை வைக்க... அதற்கு பதிலடி தரும் கனிமொழியின் ஆதரவாளர்களோ, ``தேர்தலுக்காக அவர் இப்படிச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோதே பல நேரங்களில் அவர் திடுதிப்பென்று ஆட்டோவில் ஏறிச் சென்றுவிடுவார். அப்படித்தான் ஒருமுறை வீட்டிலிருந்து வெளியே வந்தவர், கார் வாசலில் நிற்காததைக் கண்டு, எதிரே ஸ்டாண்டிலிருந்த ஆட்டோ டிரைவரைக் கூப்பிட்டு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் பள்ளியில் நடந்த விழாவுக்குச் சென்றார்” என்கிறார்கள்.

மீட்டருக்கு மேலே கிடைக்குமா ஓட்டு!

பா.ம.க-வுக்கு எதிராக தி.மு.க...
திருமாவுக்கு எதிராக அ.தி.மு.க!

பா.ம.க-வுக்கு எதிராக இருக்கும் வன்னியர் அமைப்புகளின் தலைவர்களிடம் தி.மு.க தலைமை, `நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், வன்னிய மக்களின் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்று வாக்குறுதி அளித்துவருகிறதாம்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

ராமதாஸ் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, வன்னிய சமூகத்தின் ஓட்டுகளைப் பிரிப்பதற்கு தி.மு.க இப்படித் திட்டமிடுகிறது என்றால், எதிரணியில் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளைப் பிரிக்கத் தயாராகிவருகிறது அ.தி.மு.க. அம்பேத்கர் இயக்கத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை அ.தி.மு.க தொடங்கியிருக்கிறது. அதன் முதற்கட்டமாக செ.கு.தமிழரசனை முன்னிலைப்படுத்தி ஒரு அசைன்மென்ட் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். தமிழரசனும் சில சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.

ஓட்டைப் பிரிக்குறது இருக்கட்டும்... நோட்டைப் பிரிச்சாங்களா!

அடுத்த கட்டுரைக்கு