Published:Updated:

`செல்போன் நம்பரை வச்சுக்கோங்க; எந்த நேரத்திலும் பேசுங்கள்!'- மாரியம்மாளின் பிள்ளைகளிடம் கண்கலங்கிய கனிமொழி

பி.ஆண்டனிராஜ்
எல்.ராஜேந்திரன்

நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தக் கொலைகளின் மூலம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பது தெரியவருகிறது என்றார், கனிமொழி.

கொலை செய்யப்பட்ட  மாரியம்மாள் வீட்டில் கனிமொழி
கொலை செய்யப்பட்ட மாரியம்மாள் வீட்டில் கனிமொழி

நெல்லையில் கடந்த 23-ம் தேதி தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குக் காரணமான நபர்களைக் கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றன. நகை, பணத்துக்காக இந்தக் கொலை நடந்ததா அல்லது கொடுக்கல்- வாங்கல் தொடர்பான பிரச்னையில் நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

உமா மகேஸ்வரி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி
உமா மகேஸ்வரி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நெல்லை, சங்கரன்கோவில், தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நூற்றுக்கும் அதிகமான நபர்களிடம் விசாரணை நடத்தியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கொலையானவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று நெல்லை வந்தார். உமா மகேஸ்வரி இல்லத்துக்குச் சென்ற அவர், உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருகசங்கரன் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், உமா மகேஸ்வரின் வீட்டில் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவியான பணிப்பெண் மாரியம்மாளின் வீட்டுக்குச் சென்றார். மாரியம்மாளின் மரணத்தால் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் நிர்க்கதியாக உள்ள மூன்று பெண் குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டதற்கு மாரியம்மாள் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மாரியம்மாளின் குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்தபோது கண்கலங்கிய கனிமொழி, தனது செல்போன் எண்ணைக் கொடுத்து, எந்த நேரத்திலும் என்னவிதமான உதவிகள் தேவை என்றாலும் தொடர்புகொண்டு பேசுங்கள்’ என்று சிறுமிகளிடம் தெரிவித்தார்.

மாரியம்மாள் குழந்தைகளிடம் ஆறுதல் தெரிவித்த கனிமொழி
மாரியம்மாள் குழந்தைகளிடம் ஆறுதல் தெரிவித்த கனிமொழி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ``முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அனைவரிடமும் இனிமையாகப் பழகக் கூடியவர் . கட்சிப் பணிகளில் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்ட அந்தச் சகோதரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை இந்த வழக்கில் போலீஸார் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. இதுவரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை அனைவருக்கும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காரணமே தெரியாமல் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையால் அந்த வீட்டில் பணியாற்றிய சகோதரியின் மூன்று குழந்தைகளும் அநாதையாக்கப்பட்டுள்ளார்கள் . இந்தக் கொலைகளுக்கான பின்புலம் என்ன என்பதை போலீஸார் விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் கொலையைச் செய்தவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.

`தனித்தனி ரூம்; தலையில் வெட்டு' - நெல்லையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட முன்னாள் பெண் மேயர்!

இந்தக் கொலையில் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மாரியம்மாளின் குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார்