Published:Updated:

`வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான வழியை உறுதிப்படுத்துங்கள்!’- சட்ட அமைச்சர்

போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 1,123 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது

ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் என்ன வழிமுறைகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்துமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற வளாக கட்டடத் திறப்பு விழாவில் பேசியவர், ``நாட்டில் பெண்கள் வேதனையிலும் துயரத்திலும் உள்ளனர். அவர்கள் நீதிக்காக அழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தவறிழைத்தால் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்பதை நாட்டு மக்களுக்குப் புரிய வைக்க வேண்டியுள்ளது. சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு பெருமைமிக்க நாடாக இந்தியாவின் அந்தஸ்தை விரைவாக மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

கொடூரமான குற்றங்களுக்கும் மற்ற பிற குற்றங்களுக்கும் 704 விரைவு நீதிமன்றங்கள் இந்தியாவில் இருக்கின்றன. போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 1,123 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.

மேலும், ``பெண்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளில், மரண தண்டனை மற்றும் இரண்டு மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து தண்டனை வழங்குவது உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கும் வழிமுறைகளையும் சட்டத்தில் கொண்டு வந்துள்ளோம்" என்று கூறினார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்திய நீதித்துறையான உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்களும் சட்டத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தி வந்தாலும், துணை நீதிமன்றகள் மேலும் திறமைகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக இந்த நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் திறமைமிக்கவர்களாக இருக்க வேண்டும். தங்களுடைய திறமைகளை பிரதிபலித்தால் மட்டுமே நீதித்துறையையும் உயர்ந்த இடமாக உருவாக்க முடியும்" என்றார்

ஐதராபாத் கால்நடை மருத்துவர் கொலையில் தெலங்கானா போலீஸார் தற்காப்பு நடவடிக்கையாக அந்த வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து தெலங்கானா போலீஸாரின் இந்த நடவடிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு போலீஸாரின் நடவடிக்கை ஒரு முன் மாதிரியானவை என்று சுட்டிக் காட்டியும் வருகின்றனர். இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர்பிரசாத் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.