Published:Updated:

``ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் பதவி" - கோரிக்கையை நிராகரித்த சரத் பவார்

சரத் பவார்

``ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பதவியை ஏற்க முடியாது" என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

``ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் பதவி" - கோரிக்கையை நிராகரித்த சரத் பவார்

``ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பதவியை ஏற்க முடியாது" என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சரத் பவார்

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்துவருவதால், அந்த இடத்தைப் பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் போட்டி போடுகின்றனர். இது தவிர தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மம்தா பானர்ஜி ஒரு புறமும், சந்திரசேகர் ராவ் ஒரு புறமும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசிவருகிறார்கள். இதில் காங்கிரஸ் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு சிவசேனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இதில் சரத் பவார் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு மம்தா பானர்ஜியும் சரத் பவாரைச் சந்தித்து பேசியபோது மூத்த தலைவர் என்ற முறையில் பாஜக-வுக்கு எதிராக உருவாக்கப்படும் அணிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று சரத் பவாரிடம் கேட்டுக்கொண்டார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சோனியா காந்தி தலைவராக இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அணிக்கு தலைமை தாங்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சரத் பவாருக்கு ஆதரவாகத் தீர்மானம்!

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிக் கூட்டத்தில் `சரத் பவார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும்’ என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சரத்பவாரிடம் கேட்டதற்கு, தனக்கு அப்பதவியை ஏற்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ``எங்களது கட்சியின் இளைஞரணியினர் என்னை ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் பதவியேற்கும்படி கூறி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. அப்பதவிக்கு வர விரும்பவில்லை. பொறுப்புக்களை ஏற்க விரும்பவில்லை. பாஜக-வுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க முயன்றால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவும், ஆதரவு கொடுக்கவும், வலு சேர்க்கவும் தயாராக இருக்கிறேன். அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகார மையங்கள் இருக்கலாம். எதிர்க்கட்சிக் கூட்டணி உருவாக்கப்பட்டால் அது காங்கிரஸ் இல்லாமல் உருவாக்க முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸுக்கு பவார் ஆதரவு

காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு கிராமம், மாவட்டம் மற்றும் மாநிலத்தில் தொண்டர்கள் இருக்கின்றனர். எனவே பாஜக-வுக்கு எதிரான அணியை உருவாக்கும்போது காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், நாடு முழுவதும் அதற்கு செல்வாக்கு இருக்கிறது. அதை கவனத்தில்கொண்டு அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால் மாற்று அணியை உருவாக்குவதில் சிக்கல் இருக்காது.

சரத் பவார் - உத்தவ் தாக்கரே
சரத் பவார் - உத்தவ் தாக்கரே

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமானால் உண்மைநிலையைப் புறக்கணிக்க முடியாது. நாட்டில் ஒரே ஒரு கட்சி வலுவானதாக இருந்தால் புதின் போன்ற நிலைதான் ஏற்படும். புதின் மற்றும் சீனா அதிபர்கள் சாகும் வரை தங்களது நாட்டுக்குத் தலைமை தாங்குவார்கள். அது போன்ற ஒருவர் இந்தியாவுக்கு வர மாட்டார் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பதவியை சரத் பவார் ஏற்க மறுத்திருப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் ரவிகாந்த் கூறுகையில், ``எங்கள் தலைவர் முடியாது என்று சொன்னாலும், உங்கள் ஒருவரால் மட்டுமே அனைவரையும் ஒரே அணியில் கொண்டு வர முடியும் என்று கூறி அப்பதவியை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism