Published:Updated:

`குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும்!' - சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி

”விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்கான சட்டத்தை மத்தியரசு இயற்ற வேண்டும்” என சி.பி.எம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவோம் என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பதை முறையாக நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட வேண்டும்.

சி.பி.எம் மாவட்ட மாநாடு
சி.பி.எம் மாவட்ட மாநாடு

விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். நாடெங்கும் அதிக அளவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும். பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்பட அரசு நேரடியாக கொள்முதல் செய்வதைத் தொடர வேண்டும். பெட்ரோல் விலையை குறைப்பதற்காக கூடுதலாக வசூல் செய்யும் கலால் வரி, செஸ் வரி ஆகியவற்றை உடனடியாகக் குறைக்க வேண்டும். மத்திய அரசு கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஜெய்பீம் பட விவகாரத்தில் ’நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு’ என அறிவித்த பா.ம.க நிர்வாகி மற்றும் ’நடிகர் விஜய் சேதுபதியை தாக்குபவர்களுக்கு பரிசு’ என அறிவித்த அர்ஜுன் சம்பத் போன்றோரின் செயல்கள் கண்டிக்கதக்கது. தமிழகத்தில் தரங்கெட்ட அரசியல் இருக்கக்கூடாது. இவ்வாறான தரங்கெட்ட அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

சி.பி.எம் மாவட்ட மாநாடு
சி.பி.எம் மாவட்ட மாநாடு

நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பதற்கு கால்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு போராட வரவேண்டும். தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்குவதற்கும், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வரவேண்டும் என கூட்டணி கட்சி என்ற முறையில் தமிழக அரசிடம் வலியுறுத்தபடும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு