Published:Updated:

ரஜினி: `தாமதமாகும் அரசியல் அறிவிப்பு’ ; சமூக வலைதளங்களில் சுற்றும் கடிதம்! - பின்னணி என்ன?

ரஜினி
ரஜினி

`கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் நிஜம். கொஞ்ச நாள்களாகவே, ரஜினி பதற்றத்துடன் இருந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறந்த சம்பவத்துக்குப் பிறகு மிகவும் மனதளவில் நொந்துபோய்விட்டார்!’

ரஜினியின் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, நேற்று இரவு முதல் பெரும் அதிர்ச்சி அலையைக் கிளப்பியிருக்கிறது. அது உண்மையிலேயே ரஜினி எழுதிய கடிதம்தானா அல்லது அவர் எழுதியதாக வெளியான டூப்ளிக்கேட்டா என்கிற குழப்பத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் தவிக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தில் அப்படி என்ன இருந்தது?

`என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

ரஜினி
ரஜினி

இந்த கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.

2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர்பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரிலுள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், ``கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

ரஜினி
ரஜினி

எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துத்தான் கவலை. நான் தொடங்குவதோ புதுக் கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக்கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி, அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.

சொத்து வரி விவகாரம்: `தவறைத் தவிர்த்திருக்கலாம்; அனுபவமே பாடம்!’- ரஜினி

இதை இப்போதே சொல்லக் காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவரும் சூழலில், இந்த கொரோனா பிரச்னை தொடரும்நிலையில், கடைசி நேரத்தில் இந்தக் காரணங்களைக் காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

எனவே, அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, என் உடல்நலத்தில் அக்கறையுள்ள, என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட்டாசு வெடிப்பாரா... படப்பிடிப்புக்குக் கிளம்பிவிடுவாரா? - ரஜினி அரசியல்

கடிதம் பற்றி ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். இரண்டு மாதிரியாக அவர்கள் தகவல் சொன்னார்கள்.

ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறும்போது, ``கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் நிஜம். கொஞ்ச நாள்களாகவே, அவர் பதற்றத்துடன் இருந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறந்த சம்பவத்துக்குப் பிறகு மனதளவில் மிகவும் நொந்துபோய்விட்டார். கொரோனா வரவில்லையென்றால், இந்நேரம் அவரின் நிலைப்பாடு வேறு. கொரோனா பரவல் நீடிப்பதால் கொஞ்சம் யோசிக்கிறார். தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக அவர் சொல்லவில்லை. மக்களிடம் கருத்து கேட்கிறார். மீடியாவில் விவாதித்து முடிவு சொல்லச் சொல்கிறார். அப்படித்தான் நாங்கள் பார்க்கிறோம். கொரோனா பரவல் முடிந்ததும், அவர் அரசியலுக்கு வந்தால் போதும். கடிதத்தை ரஜினி ரெடி பண்ணியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இது பற்றிப் பலரிடமும் விவாதித்துவந்தார். ரஜினியின் நம்பிக்கையைப் பெற்றவர்களில் ஒருவர் ரஜினியின் எண்ண ஒட்டத்தை லீக் செய்திருக்கிறார். அதனால், ரஜினி படு அப்செட்டில் இருக்கிறார். அந்தக் கடிதம் டூப்ளிகேட் என்றால், இந்நேரம் அதை மறுத்து ரஜினி அறிக்கைவிட்டிருப்பார் அல்லவா... இதுவரை வரவில்லை என்பதைவைத்தே அது அவரின் எண்ணத்தில் உதித்த வார்த்தைகள்தான் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்” என்றார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தென்மாவட்ட ரஜினி மன்றப் பிரமுகர் ஒருவர் கூறும்போது, ``முக்கிய எதிர்க்கட்சியின் ஐ.டி விங்தான் ரஜினி பெயரில் கடிதத்தை லீக் செய்திருக்கிறது. அது நிச்சயமாக டூப்ளிகேட்தான். ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதுதான் ஐ.டி விங்கின் திட்டம். இதை நாங்கள் நம்ப மாட்டோம். ரஜினியிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இடத்தில் ரஜினி இருக்கிறார். அவரின் பதில் என்னவோ?

ராகவேந்திரா மண்டபத்திலுள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் தொடர்புகொண்டோம். `இன்னும் அந்தக் கடிதத்தையே பார்க்கவில்லை. ஒருவேளை, ரஜினியிடமிருந்து பதில் வந்தால், உடனே உங்களுக்குச் சொல்கிறோம்’ என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு