Published:Updated:

உங்களை நம்பி உழைத்தவன் நிலை?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

தலைவரே! சமூக வலைதளங்களில் தி.மு.க அமைச்சரவைப் பட்டியல் என்றொரு பட்டியல் உலாவருகிறது. அது வதந்தியான பட்டியல்தான் என்றாலும்கூட, அந்தப் பட்டியல் எங்களுக்குப் பாடம் நடத்துகிறது

உங்களை நம்பி உழைத்தவன் நிலை?

தலைவரே! சமூக வலைதளங்களில் தி.மு.க அமைச்சரவைப் பட்டியல் என்றொரு பட்டியல் உலாவருகிறது. அது வதந்தியான பட்டியல்தான் என்றாலும்கூட, அந்தப் பட்டியல் எங்களுக்குப் பாடம் நடத்துகிறது

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

அன்புத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடைக்கோடி தொண்டனின் கனிவான வணக்கம்!

1971 சட்டமன்றத் தேர்தலில் தொடங்கிய உங்கள் அரசியல் பயணம் மிசா சிறைவாசம், இளைஞரணிப் பொறுப்பு என்று படிப்படியாக வளர்ந்து, இன்று கட்சியின் தலைவராக ஒரு மகத்தான சாதனையைப் படைத்துள்ளீர்கள். தமிழகத்தில் மதவாத சக்திகளை வென்ற உங்கள் கூட்டணி வியூகங்களைக் கண்டு, அகில இந்தியக் கட்சிகளே வியந்து நிற்கிறார்கள். அதன் பலனாக, இன்னும் சில தினங்களில் தமிழக அரசுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பும் உங்களுக்காகக் காத்திருக்கிறது. 70 வயதில் இந்த இலக்கை அடைந்திருக்கும் உங்களிடம், கழகத்தின் கடைக்கோடி தொண்டனாக நான் சொல்ல நினைக்கும் விஷயங்களை இந்தக் கடிதம் மூலம் சொல்கிறேன். காரணம், உங்களைச் சுற்றி நெருக்கமாக வலம்வரும் யாரும் இதை எப்போதும் உங்களிடம் சொல்லப்போவதில்லை.

தலைவரே! சமூக வலைதளங்களில் தி.மு.க அமைச்சரவைப் பட்டியல் என்றொரு பட்டியல் உலாவருகிறது. அது வதந்தியான பட்டியல்தான் என்றாலும்கூட, அந்தப் பட்டியல் எங்களுக்குப் பாடம் நடத்துகிறது. பல்வேறு காலகட்டங்களில் கழகம் சந்தித்த சிக்கலான நேரங்களிலும், கழகம் நடத்திய போராட்டங்களின்போதும், எதிர்முகாமில் இருந்துகொண்டு பதவி சுகத்தை அனுபவித்தவர்களே இன்று நமது அமைச்சரவையிலும் இடம்பெறப்போகிறார்கள் என வதந்தியாக வரும் செய்திகள்கூட வேதனையாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக உங்களோடு களத்தில் பயணித்த பலரும், இன்றும் அதே இடத்தில் நிற்கிறார்கள் என்பது தெரியமா தலைவரே?

இளைஞரணியில் உங்களுக்குப் பக்கபலமாக இருந்த நிர்வாகிகள் பலரும் இன்று உங்களைவிட்டு வெகுதூரத்தில் இருக்கிறார்கள். ராமநாதபுரம் போஸ், சாயல்குடி ராமர், ராஜபாளையம் அருள்மொழி, புதுக்கோட்டை செந்தில், குத்தாலம் அன்பு, திருவண்ணாமலை ஸ்ரீதர், செய்யாறு அன்பழகன், அன்னியூர் சிவா, விழுப்புரம் ஜனகராஜ் என உங்களோடு 30 ஆண்டுகளுக்கு முன்பாக புறப்பட்ட பலருக்கும் இதுவரை வாய்ப்பே வழங்கவில்லையே... சிவகங்கை மாவட்டத்தில் உங்களுக்கு நம்பிக்கையாக இருந்த ரூசோ மறைந்த பிறகு, பெரியகருப்பன் வைப்பதே அங்கு சட்டமாகிவிட்டது. மதுரையில் மூர்த்தி சொல்வதுதான் வேதவாக்கு. விருதுநகரையே தன் விரல் நுனிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன்.

இன்னொருபுறம் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, ஆற்காடு வீராசாமி ஆகியோரின் மகன்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.பெரியசாமிக்கும் எம்.எல்.ஏ சீட்டு; அவரின் மகனுக்கும் சீட்டு. முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசு மாவட்டச் செயலாளர், மகள் தமிழச்சி எம்.பி எனக் கட்சிக்குள் ஒரு சில குடும்பங்களே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இப்படி ஆதிக்கம் செலுத்தும் குறுநில மன்னர்களும் சில குடும்பங்களும் கைகாட்டும் நபர்களுக்குப் போட்டியிட சீட் வழங்கினால், பல ஆண்டுகளாக உங்களை நம்பி உழைத்தவன் நிலை?

தலைவரே... உங்கள் தந்தையாரைச் சுற்றி அமர்ந்த ஐந்து பேரே, இப்போது உங்களைச் சுற்றியும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு கட்சியினரை நீங்கள் சந்தித்தால், பல உண்மைகள் உங்கள் காதுகளுக்கு வரும். சீட்டும் கிடைக்காமல், மரியாதையும் கிடைக்காமல் போனதால்தான் கரூர் சின்னசாமி, விழுப்புரம் ஏ.ஜி.சம்பத், கள்ளக்குறிச்சி செல்வநாயகம், சிதம்பரம் மாமல்லன் உள்ளிட்டோர் கட்சி மாறிவிட்டார்கள் என்ற செய்தியாவது உங்கள் காதுகளுக்கு எட்டியதா என்று தெரியவில்லை.

உங்களை நம்பி உழைத்தவன் நிலை?

உங்களோடு தோளுக்கு தோள் நின்ற ஜின்னாவுக்கு ஆயிரம் விளக்கு சீட்டை மறுத்துவிட்டு, உங்கள் உறவினரான எழிலனுக்குக் கொடுத்தீர்கள். உங்கள் மைத்துனர் பரிந்துரைத்தார் என்பதற்காக, புதுக்கோட்டை தொகுதிக்கே சம்பந்தமில்லாத முத்துராஜாவுக்கு சீட் வழங்கினீர்கள். இப்படி வசதி படைத்தவர்களுக்கும், தங்கள் வசமானவர்களுக்கும் சீட் என்றால், 40 ஆண்டுகளாக போஸ்டர் ஒட்டிய தொண்டர்களின் நிலை என்ன?

1989-ல் கழகம் ஆட்சிக்கு வந்தபோது, புதியவர்களுக்கு மறைந்த தலைவர் கலைஞர் தன் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கினார். அப்படி அமைச்சரானவர்களின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு... இம்முறையும் அவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு என்றால், புதியவர்களை எப்போதுதான் நீங்கள் அடையாளம் காணப்போகிறீர்கள்? ‘இம்முறை அமைச்சரவைப் பட்டியலில் தலைவர் மறந்துபோய் ஆற்காட்டார் பெயரையும், வீரபாண்டியார், கோ.சி.மணி பெயரையும் சேர்த்துவிடப்போகிறார்’ என்று நம் தொண்டர்களே கமென்ட் அடிக்கும் நிலையில் இருப்பது வருத்தமாக இருக்கிறது.

ஆட்சியில் அமர்ந்த பிறகு, சீனியர்கள் சொல்லும் நபர்களுக்கே வாரியம் முதல் வளமான பதவிகள்வரை நீங்கள் ஒதுக்கினால், அடுத்த பத்தாண்டுகளில் கட்சி கலகலத்துவிடும் தலைவரே. உண்மையான உடன்பிறப்புகளுக்கு புதுவாழ்வு கிடைக்க, முதலில் ஓர் அமைச்சரவைப் பட்டியலை நீங்களே தயார் செய்யுங்கள். வாய்ப்பு மறுக்கப்பட்ட உடன்பிறப்புகளுக்கு வாய்ப்பு வழங்கி கட்சியை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உயிர்த்துடிப்பாக வைத்திருங்கள். அதுவே உங்கள் வாரிசுக்கும் கட்சிக்கும் நீங்கள் செய்யும் விசுவாசமான வழிகாட்டுதலாக இருக்கும்.

இப்படிக்கு,

உங்கள் உடன்பிறப்புகளில் ஒருவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism