Published:Updated:

`அண்ணே உங்களுக்கு 86 வயசு மாதிரியே தெரியல'- ஸ்டாலின் வாழ்த்தால் உருகிய எல்.ஜி!

பொதுவாக கிராமங்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் தனித் தனி சுடுகாடு இருக்கும். எங்க ஊரிலும் அப்படி இருந்தது. அதை ஒழித்து சமத்துவ மயானத்தை உருவாக்கி எல்லாச் சாதியினரையும் ஒரே இடத்தில் இறுதிச் சடங்கைச் செய்ய வைத்தார்.

மனைவியுடன் எல்.ஜி
மனைவியுடன் எல்.ஜி

தஞ்சாவூர் தி.மு.கவைச் சேர்ந்த எல்.ஜி ஒரத்தநாடு அருகே உள்ள தனது சொந்த ஊரில் 45 ஆண்டுக்காலம் தொடர்ந்து ஊராட்சிமன்றத் தலைவருக்குப் போட்டியில்லாமல் அன்னபோஸ்டாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். ஆனால், இந்த முறை உடல்நிலை சரியில்லாததால் அவரால் போட்டியிட முடியவில்லை.

மனைவியுடன் எல்.ஜி
மனைவியுடன் எல்.ஜி

ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்.ஜி என அழைக்கபடும் எல்.கணேசன். தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் வசித்து வரும் எல்.ஜி தி.மு.கவில் தலைமைத் தேர்தல் பணி குழுத் தலைவராக இருக்கிறார். எல்.ஜி தனது சொந்த ஊரான கண்ணந்தங்குடி கீழையூர் ஊராட்சியில் கிட்டத்தட்ட 45 ஆண்டுக்காலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து சொந்த ஊரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தலைவராகப் பதவி வகித்துவிட்டால் அவர்களை ஒன்று அவர் சார்ந்த ஊர் மக்களே தோற்கடிப்பார்கள் இல்லையென்றால் அந்த நபர்களே தேர்தலில் போட்டியிடாமல் விலகி விடுவார்கள். ஆனால், இரண்டுமுறை தவிர்த்து மற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்திலும் தேர்தலே இல்லாமல் ஊர் மக்களால் எல்.ஜி அன்ன போஸ்டாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதை நினைத்து எல்.ஜி குடும்பத்தினரும் ஊர் மக்களும் நெகிழ்கின்றனர். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் உடல் நிலை சரியில்லாததால் ஊர் மக்கள் கேட்டும் அவரால் போட்டியிட முடியவில்லை.

மன்மோகன் சிங்குடன் எல்.ஜி
மன்மோகன் சிங்குடன் எல்.ஜி

இது குறித்து எல்.ஜி மனைவி கமலாவிடம் பேசினோம், ``தி.மு.கவில் தீவிரமாகச் செயல்பட்ட காலத்தில் 1968-ம் ஆண்டு கண்ணந்தங்குடி கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவராக எல்.ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து ஊரின் வளர்ச்சிக்குப் பல வகையில் உழைத்தார். அரசு உயர்நிலைப் பள்ளி கொண்டு வந்தார். கிராமத்திற்குள்ளேயே ரிங் சாலை அமைத்தார். தி.மு.கவில் இருந்தாலும் ஊருக்குள் மட்டும் கட்சி பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவானவராக இருப்பார். அதனால் ஊரே இவர் பின்னாடி நிற்கும்.

முதல் முறையாகப் பொறுப்பேற்றபோதே நல்ல முறையில் மக்கள் பணியாற்றியதால் அடுத்தடுத்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் இவரை ஊராட்சி மன்றத் தலைவராக அன்ன போஸ்டாகத் தேர்ந்தெடுத்தனர் மக்கள். பொதுவாகக் கிராமங்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் தனித் தனி சுடுகாடு இருக்கும். எங்க ஊரிலும் அப்படி இருந்தது. அதை ஒழித்து சமத்துவ மயானத்தை உருவாக்கி எல்லாச் சாதியினரையும் ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு செய்ய வைத்தார். அதே போல் ஊரிலிருந்த ஒரே குளத்தை எல்லாச் சாதியினரும் பயன்படுத்த வைத்தார். இவையெல்லாம் அவருடைய சாதனையின் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

கமலா
கமலா

45 ஆண்டுகள் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்தலே இல்லாமல் ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது அவரின் செயல்பாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. இதில் அவர் போட்டியிட்ட போது ஒரு முறை மட்டும் எதிர்த்து ஒருவர் போட்டியிட்டார். கிராமத்தில் எல்லோரும் அந்த நபரை எதிர்த்தனர். ஆனால், இதுதான் ஜனநாயகம் நிற்கட்டும் விடுங்கள் எனத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். கடந்த தேர்தலில் அவர் நிற்க முடியாத சூழல் உடனே என்னைப் போட்டியிட வைத்து ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்க வைத்தார்.

இந்த நிலையில் இப்போது நடைபெற இருக்கிற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் எங்க கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவரை போட்டியிட வலியுறுத்தினர். ஆனால் எனக்கு 86 வயசு ஆகிவிட்டது. தற்போது உடல் நிலை சரியில்லை. உடம்பு இப்ப இருக்கிற சூழ்நிலையில் என்னால் முழுமையாக மக்கள் பணிகள் செய்ய முடியாது. அதனால் நீங்கள் வேறு ஒருவரைத் தேர்தல் இல்லாமலேயே தேர்ந்தெடுங்கள் என்றார். இதைக்கேட்டு சிலர் வருத்தப்பட்டனர். தற்போது ஊரில் போட்டி இருப்பதால் இந்த முறை தேர்தல் நடைபெறுகிறது.

மனைவியுடன் எல்.ஜி
மனைவியுடன் எல்.ஜி

கடந்த மாதம் தலைவர் ஸ்டாலின் எல்.ஜியைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்தார். ஸ்டாலினைப் பார்த்ததும் உடல் நிலையை மறந்து உற்சாகமடைந்த அவர் ஸ்டாலினுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஸ்டாலின் `அண்ணே உங்களுக்கு 86 வயசு மாதிரியே தெரியல. இளமையாக இருக்கீங்க' எனக் கூறினார். தளபதி வந்து பார்த்து விட்டுச் சென்றதே நான் மக்கள் பணி செய்ததற்கு அடையாளம். இது எனக்குப் புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது என்றார். ஒரு பைசா கூட அவர் பொதுப்பணத்தைச் சாப்பிட்டதில்லை சம்பாதிக்கவும் நினைத்ததில்லை. அதனால் தான் 50 வருடம் தொடர்ந்து ஊருக்கு உழைப்பதற்கு கண்ணந்தங்குடி மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர்" என்றார்.