Published:Updated:

காமராஜர், நரசிம்ம ராவ், நிஜலிங்கப்பா.... காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த தென்னிந்தியர்கள்!

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
News
காங்கிரஸ் தலைவர் தேர்தல்

10-வது முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப்போகும் தென்னிந்தியர்! - இதற்கு முன்பு இந்தப் பதவி வகித்த தென்னிந்தியர்கள் யார் யார்?

காமராஜர், நரசிம்ம ராவ், நிஜலிங்கப்பா.... காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த தென்னிந்தியர்கள்!

10-வது முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப்போகும் தென்னிந்தியர்! - இதற்கு முன்பு இந்தப் பதவி வகித்த தென்னிந்தியர்கள் யார் யார்?

Published:Updated:
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
News
காங்கிரஸ் தலைவர் தேர்தல்

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. காங்கிரஸின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கேவும், சசி தரூரும் நேரடியாக மோதிக்கொள்கின்றனர். இருவருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கப்படவேண்டிய செய்தி. இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த தென்னிந்தியர்கள் குறித்து இங்கே அலசுவோம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒரு தென்னிந்தியர் பதவிவகித்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக 1992 முதல் 1996 வரை தென்னிந்தியாவைச் சேர்ந்த பி.வி.நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். ராகுல் காந்தியின் `பாரத் ஜோடோ யாத்திரை' எனும் நடைப்பயணத்துக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், தென்மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒருவர் தலைவராகவிருக்கிறார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இதுவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பதவி வகித்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு பதவி வகித்தவர்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவிவகித்த தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் நபர் பனப்பாக்கம் அனந்தசார்லு என்பவர். 1890-ம் ஆண்டு தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்தவர். அதற்கு பிறகு கேரளத்தைச் சேர்ந்த சங்கரன் நாயர், 1897-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்‌. இப்போது வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒரே மலையாளி இவர் மட்டுமே.

மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்த சி.விஜயராகவாச்சாரி, 1920-ம் ஆண்டு கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். `காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய கட்சி அரசியல் நோக்கோடு மட்டுமில்லாமல் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பங்காற்ற வேண்டும்' என இவர் எண்ணினார். காங்கிரஸ் கட்சிக்கான சட்டதிட்டங்களை வடிவமைத்ததில் இவரின் பங்கு முக்கியமானது. சுதந்திரத்துக்கு முன்பு காங்கிரஸ் தலைவராக பதவிவகித்த கடைசி தென்னிந்தியர் ஸ்ரீனிவாச ஐயங்கார். மெட்ராஸ் பிரசிடென்சியைச் சேர்ந்த இவர், 1926-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

இந்தியா‌ சுதந்திரம் பெற்ற பிறகு, காங்கிரஸ் தலைவரான முதல் தென்னிந்தியர் பட்டாபி சீதாராமையா. 1948-ம் ஆண்டு நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்ற பட்டாபி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு மருத்துவரும்கூட. இவருக்கு முன்பு தென்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவர்கள் அனைவருமே வழக்கறிஞர்களாகவே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. `காங்கிரஸின் வரலாறு' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் பட்டாபி சீதாராமையா. மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேலை உள்ளடக்கிய JVP கமிட்டியில் பட்டாபியும் ஓர் உறுப்பினர்‌.

அதையடுத்து, காங்கிரஸ் தலைவராக இருந்த தென்னிந்தியர் ஆந்திராவைச் சேர்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டி. இவர் மக்களவை சபாநாயகராகவும், மத்திய அமைச்சராகவும் பதவிவகித்தார். 1977-ம் ஆண்டு, ஜனதா கட்சியில் சேர்ந்தவர், அதே ஆண்டில் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

காமராஜர்
காமராஜர்

தென்னிந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவிவகித்தவர்களில் மிக முக்கியமானவர் காமராஜர். தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிவகித்த காமராஜர், 1963-ம் ஆண்டு தானே சுயமாகத் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். `கே-பிளான்' அதாவது `காமராஜ் பிளான்' என அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் தங்களது ஆட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சிக்காகப் பணி செய்ய அழைப்பு விடுத்தார் காமராஜர். அவரின் அழைப்பை ஏற்று பல மூத்த தலைவர்கள், காமராஜரைப் பின்பற்றி தங்களுடைய அரசுப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சிப் பணி செய்ய களமிறங்கினர். 1964-ம் ஆண்டு காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். `கிங் மேக்கர்' எனப் புகழப்பட்ட காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் இந்திய பிரதமராவற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த நிஜலிங்கப்பா 1968-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவரானர். இரு முறை கர்நாடகத்தின் முதலமைச்சராகப் பதவிவகித்த இவர், தன்னுடைய பதவிக் காலத்தில்தான் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிய நேர்ந்தது. இந்திரா காந்தி தலைமையில் ஓர் அணியும், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய், காமராஜர் போன்ற தலைவர்கள் மற்றோர் அணியாகவும் செயல்பட்டனர்.

தென்னிந்தியாவிலிருந்து கடைசியாக காங்கிரஸ் தலைவராக இருந்தவர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ். இவர் தற்போதைய தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில், பொருளாதாரரீதியில் பல வளர்ச்சிகளைச் செய்ததில் நரசிம்ம ராவ்வின் பங்கு முக்கியமானது. அரசியலில் அனுபவ அறிவு குறைவாக இருந்த மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக நரசிம்மராவ் நியமித்தபோது பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், பிற்காலத்தில் நரசிம்ம ராவ் `நவீன சாணக்கியர்’ என்றும், `உட்கட்சிப்பூசல்களைக் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தவர்’ என்றும் புகழப்பட்டார்.

தரூர் Vs கார்கே!
தரூர் Vs கார்கே!
காங்கிரஸ் கட்சியின் 135 ஆண்டுக்கால வரலாற்றில், 10-வது முறையாக ஒரு தென்னிந்தியர், அகில இந்திய காங்கிரஸின் தலைவராகப்போவது உறுதி. ஆனால், அது கார்கேவா அல்லது தரூரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!