Published:Updated:

`15 நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும்!’ - ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என நாங்குநேரியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அ.தி.மு.க பொதுக்கூட்டம்
அ.தி.மு.க பொதுக்கூட்டம் ( எல்.ராஜேந்திரன் )

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் நாராயணன் வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டம் நாங்குநேரியில் நடைபெற்றது. 12 அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு
வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு

அப்போது பேசிய அவர், ``சமுதாய சீர்திருத்தத்துக்காகத் தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயம் முன்னேற வேண்டும் என அண்ணாவும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக எம்.ஜி.ஆரும் பாடுபட்டனர். அந்த மூன்று தலைவர்களையும் ஒருங்கே பெற்று அன்பு, அறிவு, ஆற்றலுடன் செயல்பட்டவர், ஜெயலலிதா.

நாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை! -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி

ஜெயலலிதா எத்தனையோ சோதனைகளைச் சந்தித்து மக்களுக்காக 18 ஆண்டுகள் முதல்வராக இருந்து பாடுபட்டுள்ளார். அவரது வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் சாதனைகளுக்கு நீங்கள் தந்திருக்கும் வெற்றி அடையாளமாக உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டதால், இனி இவர்கள் ஜெயிக்கமாட்டார்கள் என்று அ.தி.மு.க-வையும் ஆட்சியையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் குறைகூறிக் கொண்டிருந்தார். ஆனால், நீங்கள் எங்களுக்கு வெற்றியைக் கொடுத்து ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்துள்ளீர்கள். அதனால் இந்தத் தொகுதியின் வாக்காளர்களுக்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம்.

`உள்ளாட்சி இல்லாவிட்டால் எம்.எல்.ஏ-வுக்குப் போட்டியிடுவேன்!'- பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி

நாங்குநேரி தொகுதியை நாங்கள் சொர்க்கபுரியாக மாற்றுவோம். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஊருக்கும் வந்து சேரும். உங்களுடைய தேவைகளை இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நாராயணனிடம் தெரிவித்தால் உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்பார் என்று நான் உறுதி கொடுக்கிறேன்.

நாங்குநேரியில் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டம்
நாங்குநேரியில் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டம்

இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் அ.தி.மு.க-வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் இந்த வெற்றி தொடரும்’’ எனப் பேசினார். விழாவில் 12 அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.