Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: விருப்ப மனு விநியோகத்தில் முந்திய பாஜக! - ஸ்கெட்ச் அதிமுக-வுக்கா?!

உள்ளாட்சித் தேர்தலில் பாக்கியிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் டிசம்பர், ஜனவரியில் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே பாஜக முதல் கட்சியாக விருப்ப மனுக்களை விநியோகிக்கத் தொடங்கியது.

`ஊருக்கு முந்தி’ என்றொரு சொல்லாடல் கிராமப் பகுதிகளில் பரிச்சயம். அதாவது, ஊரிலுள்ளவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்கும் முன்பே, அதைச் செய்துவிடுவது. அப்படித்தான், அரசியல் கட்சிகள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, தமிழக பாஜக செய்துவிட்டது. அதாவது, உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் பாக்கியிருப்பது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல். அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எப்போது தேர்தல் நடத்தலாம் என்று முடிவெடுக்கும் இடத்தில் ஆளும் திமுக இருக்கிறது. எனினும், அந்தக் கட்சிகூட விருப்ப மனு குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், முந்திக்கொண்டு தமிழக பா.ஜ.க ஒரு வாரத்துக்கு முன்பாகவே நகராட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை விநியோகிக்கத் தொடங்கிவிட்டது.

கமலாலயம்
கமலாலயம்

இப்படி முன்னரே விருப்ப மனுக்களை விநியோகிக்கக் காரணம் என்ன... அதிமுக-வுக்கு குடைச்சல் கொடுக்கவா? என்று கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம். ``சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நான்கு எம்.எல்.ஏ-க்களைப் பெற்றிருப்பதும், இளைஞரான அண்ணாமலை தலைவராகக் கிடைக்கப் பெற்றிருப்பதும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, வெறும் ஒன்பது மாவட்டங்கள் என்பதால் அசால்ட்டாக விட்டுவிட்டோம்.

எனினும், கொடுக்கப்பட்ட இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலின்போது முருகன் தலைவராக இருந்தார், கட் அண்ட் ரைட்டாகப் பேசி, தொகுதிகளை வாங்கி, நான்கு தொகுதிகளை வென்றும் கொடுத்துவிட்டார். இப்போதைய தலைவர் சிறுவயது நபர், அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அதனால்தான், அதிமுக-வை முந்தி அதிரடியாக விருப்ப மனுக்களை விநியோகிக்க உத்தரவிட்டார்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்

எங்களுக்கென்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. ஒருவேளை நாங்கள் குறிவைத்திருக்கும் பேரூராட்சி, நகராட்சி இடங்களை அ.தி.மு.க-வினர் கைப்பற்றிவிட்டால்? அதனால்தான், முன்னரே விருப்ப மனுக்களைக் கொடுத்துவருகிறோம். எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மனுக்கள் வருகின்றன என்பதைப் பார்ப்போம். அதைக் குறித்துவைத்துக்கொண்டு, எங்களுக்குத் தோதான இடங்களையும் குறித்து வைத்துக்கொண்டு கூட்டணிப் பேச்சுவார்த்தைத் தொடங்கும்போது எடுத்து நீட்டுவோம்.

தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை!
நரேஷ்

கூட்டணி தொடருவது உறுதி என்றால் 30 சதவிகித இடங்களைக் கேட்டுப் பெறுவோம். தற்போது வரை மேயர் பதவி மறைமுகத் தேர்தலாகத்தான் சட்டம் உள்ளது. சட்டப்பேரவையைக் கூட்டியோ, அவசர சட்டம் மூலமோ மேயர் பதவியை நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டம் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. இதேநிலை தொடருமேயானால், எங்களால் மேயர் பதவி என்று கேட்டு வாங்க முடியாது. அதற்கு பதிலாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மறைமுகத் தேர்தலில் மேயர் பதவியைப் பெறும் வகையில் அதிக இடங்களைக் கேட்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுக விரும்பும் சில இடங்களில் எங்களுக்குச் செல்வாக்கு இருப்பின், அதையும் கேட்போம். இதுமட்டுமின்றி, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021 விடுபட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் எனத் தொடர்ச்சியாக நான்கு தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறோம். இப்போதும் கூட்டணி வலுவாகத்தான் இருக்கிறது. எனினும், நகராட்சித் தேர்தலிலாவது தனித்துப் போட்டியிட்டால் எங்களது பலத்தை சோதனை செய்து பார்த்த மாதிரி இருக்கும் என்று சீனியர்கள் தரப்பில் சொல்கிறார்கள். அதற்கு அண்ணாமலை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும், தன்னிச்சையாகப் பலரையும் முந்திக்கொண்டு விருப்ப மனுக்களைக் கொடுக்க இதுவும் ஒரு காரணம். எங்கு நாங்கள் தனித்துக் களம் கண்டுவிடுவோமோ, ஒருசில மாவட்டங்களில் எங்களது கூட்டணி இல்லாமல் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சும் அ.தி.மு.க., கூடுதல் இடங்களை ஒதுக்க முன்வரும். அதனால், விருப்ப மனுவை முன்பே கொடுத்ததற்கு இது போன்ற சில ஸ்ட்ராட்டஜிகள் இருக்கின்றன” என்று முடித்தனர்.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

பா.ஜ.க-வின் செயல்பாடுகளுக்கு அ.தி.மு.க-வின் பதில் என்ன? என்று அறிவதற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். ``நகராட்சித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாஜக முன்னரே விருப்ப மனுக்களை விநியோகிப்பது அக்கட்சியின் உரிமை. தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால், தலைமை இருக்கும்போது இடப் பங்கீடு குறித்து நான் கருத்து சொல்லக் கூடாது. 2421 வந்தாலும் தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளின் முதுகில்தான் சவாரி செய்திட வேண்டும். `நாங்கதான் வெயிட்டு, நாங்க கேட்பதைக் கொடுத்தாக வேண்டும்’ என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், கொடுக்கும் இடத்தில் அ.தி.மு.க-தான் இருக்கிறது. கொடுப்பதைத்தான் பா.ஜ.க பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு