Published:Updated:

``ஒவ்வொரு பூத்துலயும் தி.மு.க-வை ஓடவிடணும்” - சீறிய எடப்பாடி; முழுபலத்தில் களமிறங்கும் அ.தி.மு.க!

`கூட்டணிப் பங்கீட்டை நாங்க பார்த்துக்குறோம். 15 மாநகராட்சிகளிலும் நாம போட்டியிடறதா நினைச்சுகிட்டு வேலையை ஆரம்பிங்க’ என்று கட்சியினரை உற்சாகப்படுத்தி அனுப்பியுள்ளார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். இதன் தொடர்ச்சியாக, வரும் நவம்பர் 24-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறும் என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து நகரும் இந்நிகழ்வுகளால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொள்ள, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம்.

அ.தி.மு.க. அலுவலகம்
அ.தி.மு.க. அலுவலகம்

``நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு சில அமைச்சர்களும் கட்சியின் சீனியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவை எம்.பி-யும், ஐவர் குழு உறுப்பினருமான வைத்திலிங்கம், `இப்போதைய சூழல்ல உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது நல்ல யோசனையா இருக்காது. இரண்டு இடைத்தேர்தல்ல கிடைச்ச வெற்றியை மட்டும் வச்சு நாம எடைபோடக் கூடாது. மக்களோட மனநிலையையும் வைச்சு நாம முடிவு எடுக்கணும்’ என்றார். இதே கருத்தை சில அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தெரிவித்தனர். ஆனால், எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் இக்கருத்தை ஏற்கவில்லை.

எடப்பாடி பழனிசாமியைத் தெரியும்... அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா?

`இடைத்தேர்தல்ல இரண்டு தொகுதியில ஜெயிச்சு, நம்ம பலத்தை நிரூபிச்சு இருக்கோம். கூட்டணிக் கட்சிகளும் நமக்கு ஆதரவான மனநிலையிலதான் இருக்காங்க. சூட்டோட சூடா இப்பவே உள்ளாட்சித் தேர்தலை நடத்தினாதான், அடுத்த 5 வருஷத்துக்கு நம்ம கையில அதிகாரம் நிக்கும்’ என்று எடப்பாடி பழனிசாமி, தன் வாதத்தை முன்வைக்க, அதைப் பலரும் ஆமோதித்தனர். `கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவாகாத சூழலில், எப்படித் தேர்தல் வேலையை ஆரம்பிப்பது?’ எனக் கொங்கு மண்டல மாவட்டச் செயலாளர் கேள்வி எழுப்பியதற்கு, `கூட்டணிப் பங்கீட்டை நாங்க பார்த்துக்குறோம். 15 மாநகராட்சிகளிலும் நாம போட்டியிடறதா நினைச்சுகிட்டு வேலையை ஆரம்பிங்க’ என்று உற்சாகப்படுத்தி அனுப்பினார்" என்றனர். சங்கீதா உணவகத்திலிருந்து வந்த முந்திரி பக்கோடா, சமோசா, காபியை சுவைத்தபடியே நிர்வாகிகளும் ஊர் திரும்பியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னதாக சீனியர்களிடம் தனியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி,``நம்மகிட்ட கூட்டணிக் கட்சிகள் சுமுகமா இருக்குறப்பவே உள்ளாட்சித் தேர்தலை நடத்துறதுதான் புத்திசாலித்தனம். தேர்தல் ஆறு கட்டமா நடந்தா நமக்குப் பெரிய லாபம். ஒவ்வொரு பூத்துலயும் தி.மு.க-காரர்களை ஓடவிடணும். எட்டு வருஷமா பதவி அதிகாரம் இல்லாம தி.மு.க-காரங்க வெறி ஏறியிருப்பாங்க. கண்டிப்பா ஜெயிக்குறதுக்கு எந்த நிலைக்கும் போவாங்க. நாமளும் எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். இந்தத் தேர்தல்ல தி.மு.க-வுக்கு விழப்போற அடி, அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு அவங்க எந்திரிக்கவே கூடாது. 10 மாநகராட்சிகளை நாம பிடிச்சுட்டாலே தி.மு.க-வோட பல்ஸ் குறைஞ்சிடும்" என்றாராம். முதல்வரின் உற்சாக பூஸ்ட்டால் அ.தி.மு.க முழு பலத்துடன் உள்ளாட்சிக் களத்தில் குதித்துள்ளது.

வேலூர், ஆவடி மாநகராட்சிகளை பா.ம.க-வும், மதுரை, திருச்சி அல்லது தூத்துக்குடியைத் தே.மு.தி.க-வும், தஞ்சாவூரை த.மா.கா-வும், கோயம்புத்தூர், நாகர்கோவில், சென்னை மாநகராட்சிகளை பா.ஜ.க-வும் கேட்கிறார்களாம்.

எடப்பாடி பழனிசாமியைத் தெரியும்... அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா?

கூட்டணிக் கட்சிகளுக்கு ஐந்து மாநகராட்சிக்கு மேல் ஒதுக்கக் கூடாது என்பதில் முடிவாக இருக்கும் எடப்பாடி, கூட்டணிக் கட்சிகள் கேட்டு கிடைக்காத மாநகராட்சிகளில், மண்டல சேர்மன் பதவியளித்து சமாதானப்படுத்த முடிவெடுத்துள்ளாராம். தேர்தலை நடத்துவது என அ.தி.மு.க தலைமை உறுதியாக இருப்பதால், இம்மாத இறுதியிலேயே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.