Published:Updated:

``பழைய பாசத்தை மாறாமல் காட்டிய விஜயகாந்த்... என் கண்களில் கண்ணீர்" - மாஃபா பாண்டியராஜன்

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

மேடைதோறும் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துக்கொண்டிருப்பவர்களிடம், 'அரசியல் தவிர்த்து, நீங்கள் கேள்வி கேட்க விரும்பும் தலைவருக்கான ஒரு கேள்வி என்ன...' என்று கேட்க நினைத்தோம்

வி.சி.க எம்.பி ரவிக்குமார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்கவிரும்பும் கேள்வி

''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர் நீங்கள். அரசியல் சூழ்நிலைகளால் இடம் மாறிவிட்ட பிறகும்கூட, மறக்கமுடியாத விஜயகாந்துடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?'

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில்:

"ஜனவரி 31-ம் தேதி விஜயகாந்த் - பிரேமலதா கல்யாண நாள். அதற்கு அடுத்த பிப்ரவரி 1-ம் தேதி எங்களுடைய கல்யாண நாள். எனவே, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 31-ம் தேதியன்று நான், என் மனைவி, மகள், மகன் எனக் குடும்பத்தோடு அனைவரும் விஜயகாந்த் சார் வீட்டுக்குச் செல்வோம். விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிக்கான ஒரு பரிசுப் பொருளையும் வாங்கிச் செல்வோம். அதேமாதிரி, எங்களுக்கான பரிசுப் பொருளையும் அவர்கள் ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பார்கள்.

ஜனவரி 31-ம் தேதியன்று இரவு, இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாகச் சந்தித்து, இரண்டு கல்யாண நாள்களையும் ஒன்றாகக் கொண்டாடி, டின்னர் சாப்பிட்டு மகிழ்வோம். எங்கள் எல்லோரிடமும் ரொம்பவும் பாசமாகப் பழகுவார் விஜயகாந்த். என் மகள், திருமணத்தை அவரது தலைமையில் நடத்திவைப்பதாகவும் பாசமாகச் சொல்லிக்கொண்டிருப்பார். இப்படித்தான் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் எங்கள் கல்யாணக் கொண்டாட்டம் இருந்துவந்தது. இதெல்லாம் பழைய ஃப்ளாஷ்பேக்.

2013-ம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் சூழ்நிலைகளால், அவரைப் பிரிந்து வந்தபிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக நான் அவரைப் பார்க்கவே இல்லை.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இந்நிலையில், நானும் அவரும் நேருக்குநேர் சந்தித்துக்கொண்டது கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போதுதான். அந்தச் சந்திப்பு, பழைய ஃப்ளாஷ் பேக்கையெல்லாம் கண்முன்னே கொண்டுவந்து ரொம்பவே நெகிழவைத்துவிட்டது.

அவரால் முன்புபோல், தெளிவாகப் பேச முடியவில்லை. சின்னச்சின்ன வார்த்தைகள் மூலமாகவும் சைகைகள் மூலமாகவும்தான் என்னோடு பேசினார். குறிப்பாக என் மகளைப் பற்றி நலம் விசாரித்தார். மறக்காமல், மகளுக்குத் திருமணம் எப்போது என்று கேட்டார்.

2020 மே மாதம் 11-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததைச் சொன்னேன். அவரும் ரொம்பவே சந்தோஷப்பட்டு, 'நான் வந்து திருமணத்தை நடத்திவைப்பேன்' என்றார். நீண்டநாள் பிரிவுக்குப் பிறகும்கூட பழைய பாசம் மாறாமல், அவர் பேசிய உணர்வுபூர்வமான அந்தத் தருணம் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் பிரசாரம் செய்துகொண்டே, என்னிடமும் தனிப்பட்ட முறையில் அவர் கலந்துபேசியது எனக்குப் பழைய நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டது. அவரோடு தேர்தல் பிரசாரப் பணியில் நான் இருந்த பழைய நினைவுகள் அவை.

பதிலுக்குப் பதில் கேள்வி! https://bit.ly/2OrrPAY

இந்த வருடம் மே மாதம் கொரோனா காலகட்டமாகிப்போனதால், என் மகள் திருமணத் தேதியைத் தள்ளிவைத்திருக்கிறோம். தற்போது அவரது உடல்நிலையும் நல்லமுறையில் தேறிவருகிறது. மீண்டும் அவரை, என் மகள் திருமணத்தின்போது சந்திப்போம்!'' என்றார்.

- மேடைதோறும் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துக்கொண்டிருப்பவர்களிடம், 'அரசியல் தவிர்த்து, நீங்கள் கேள்வி கேட்க விரும்பும் தலைவருக்கான ஒரு கேள்வி என்ன...' என்று கேட்க நினைத்தோம்.

> மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கான கேள்வி: "அரசியலில் ஒரு விஷயம் ஆகும், ஆகாது என்று எந்த நிலையிலிருந்தாலும் சிரித்த முகத்துடன் பதிலளிப்பதில் கெட்டிக்காரர் நீங்கள்... அதிலும் நீங்கள் சொல்லும் பழமொழிகள் மிகவும் பிரபலம். எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள் இந்த வித்தையை?''

``பழைய பாசத்தை மாறாமல் காட்டிய விஜயகாந்த்... என் கண்களில் கண்ணீர்" - மாஃபா பாண்டியராஜன்

> தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்கான அமைச்சர் ஜெயக்குமாரின் கேள்வி: "அரசியலில் இறுக்கமான சூழலையும்கூட கலகலப்பாக்கிவிடும் திறமை அண்ணன் துரைமுருகனுக்கு உண்டு. அவரது இந்த சுபாவம் எப்படி வந்தது? எந்தச் சூழ்நிலையிலாவது நிலைமையை சமாளிக்க முடியாமல் அவரே திணறிய அனுபவம் உண்டா?''

> துரைமுருகன், பா.ஜ.க மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்க விரும்பும் கேள்வி: "அரசியலில், எவ்வளவு காரசாரமாக நான் திட்டியிருந்தாலும்கூட, மறுநாள் நேரில் என்னைப் பார்க்கும்போது அன்பொழுகப் பேசுபவர் பொன்.ராதாகிருஷ்ணன். மென்மையான இந்தப் பண்பை மற்றும் எளிமையை அவர் யாரிடமிருந்து கற்றுக்கொண்டார் என்று தெரியவேண்டும்?''

> பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசனிடம் கேட்க விரும்பும் கேள்வி: "தமிழ் மொழி, மரபு, மண் சார்ந்து அதீத பற்றுடன் இயங்கிவரும், சு.வெங்கடேசன் கம்யூனிசத்தின்பால் ஈடுபாடு கொண்டது எப்படி?''

> சு.வெங்கடேசன் எம்.பி, பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் கேட்க விரும்பும் கேள்வி: "தமிழகத்திலோ அல்லது அகில இந்திய அளவிலோ உங்கள் கட்சி சார்ந்த ஒருவர் விவாத அரங்குகளில் பெண்களை இழிவாக நடத்தும்போது, கட்சிக்காரர் என்பதையும் தாண்டி, ஒரு பெண்ணாக உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?''

> வானதி சீனிவாசன், வி.சி.க எம்.பி ரவிக்குமாரிடம் கேட்க விரும்பும் கேள்வி: ''தமிழ், தமிழர் தொன்மை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டிவரும் தாங்கள், கோவில், சிற்பக் கலை மற்றும் இசை உள்ளிட்ட விஷயங்களில், என்னவிதமான பார்வை கொண்டுள்ளீர்கள்?''

> மாஃபா பாண்டியராஜன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்க விரும்பும் கேள்வி: "கட்சி அரசியலிலேயே நீங்கள் எட்டவேண்டிய உயரம் இன்னும் இருக்கும்போது, திடீரென கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு மாநில ஆளுநராகப் பதவியேற்றது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?''

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மேற்குறிப்பிட்ட தலைவர்கள் அளித்த விரிவான பதில்களை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > பதிலுக்குப் பதில் கேள்வி! https://bit.ly/2OrrPAY

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு