Published:Updated:

ஜூ.வி கவர் ஸ்டோரி எதிரொலி... “ஊருக்குள் ஒரு குட்கா பாக்கெட் கிடைக்கக்கூடாது!” - அதிரடி காட்டிய மா.சு

மா.சு
பிரீமியம் ஸ்டோரி
மா.சு

தமிழகம் முழுவதும் 2013 ஜூன் முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 17,11,736 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது

ஜூ.வி கவர் ஸ்டோரி எதிரொலி... “ஊருக்குள் ஒரு குட்கா பாக்கெட் கிடைக்கக்கூடாது!” - அதிரடி காட்டிய மா.சு

தமிழகம் முழுவதும் 2013 ஜூன் முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 17,11,736 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது

Published:Updated:
மா.சு
பிரீமியம் ஸ்டோரி
மா.சு

கடந்த 2016-ம் ஆண்டு, சென்னை செங்குன்றம் அருகேயுள்ள குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை அள்ளிய விவகாரத்தில், அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை சிக்கியது தொடங்கி, தொடர்ச்சியாக குட்கா விவகாரங்களை ஜூ.வி-யில் கவர் செய்துவருகிறோம். கடந்த ஆட்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குட்கா விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி, ‘குட்கா வேண்டுமா முதல்வரே?’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், தற்போதைய ஆட்சியிலும் குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றுவரவே, ‘குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!’ என்ற தலைப்பில் கடந்த ஜூ.வி இதழில் கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தோம்.

ஜூ.வி கவர் ஸ்டோரி எதிரொலி... “ஊருக்குள் ஒரு குட்கா பாக்கெட் கிடைக்கக்கூடாது!” - அதிரடி காட்டிய மா.சு

கவர் ஸ்டோரியைத் தாங்கிய ஜூ.வி இதழ் கடைகளுக்கு வந்த ஜூன் 21-ம் தேதி அன்று, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கடுமையாக வறுத்தெடுத்திருக்கிறார் முதல்வர். அன்று காலையிலேயே நம்மைத் தொடர்புகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஏரியாவிலுள்ள இல்லத்துக்கு வரச் சொன்னார். இரவு 8:30 மணியளவில் அவரைச் சந்தித்தபோது, ‘‘உங்களிடம் இருக்கும் கூடுதல் தகவல்களைச் சொல்லுங்கள்...” என்றவர், நாம் சொன்ன தகவல்களைக் கவனமாகக் கேட்டுக் குறித்துக்கொண்டார். ‘‘நாளை (ஜூலை 22) மாலை 3:30 மணிக்கு ஓமந்தூரர் அரசு பல்நோக்கு மருத்துவமனை கூட்ட அரங்கில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. தமிழகம் முழுவதுமுள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், வியாபாரிகள் சங்கத்தினர், போலீஸ் உயரதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரும் வரவிருக்கிறார்கள். அங்கே முக்கிய முடிவுகளை எடுக்கவிருக்கிறோம். அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும்’’ என்றார்.

மேலும், ‘‘தமிழகம் முழுவதும் 2013 ஜூன் முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 17,11,736 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இதில் 1,70,870 கடைகளில் தடைசெய்யப்பட்ட உணவுப்பொருள்களை விற்பது தெரியவந்து, சுமார் 29.96 கோடி ரூபாய் மதிப்புள்ள 800 டன் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும்கூட, சட்டவிரோதமாக குட்கா பொருள்கள் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இதை அடியோடு ஒழித்துக்கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்போகிறோம்’’ என்றார் அமைச்சர்.

மறுநாள்... ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தோம். முதலில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘‘வருங்காலத்தில் எக்காரணம் கொண்டும் மார்க்கெட்டில் குட்கா இருக்கவே கூடாது. அதற்கான நல்ல யோசனைகளை வழங்குங்கள்’’ என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

அடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘நேற்று மட்டும் என்னுடைய செல்போனுக்கு குட்கா நெட்வொர்க்கைப் பற்றி 20-க்கும் அதிகமான தகவல்கள் வந்தன. அவற்றை போலீஸ் உயரதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். குட்காவுக்குச் சங்கேத மொழியில் ‘தலையணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்களாம். அதுபோல பல வடமொழி வார்த்தைகளையும் குட்கா புள்ளிகள் பயன்படுத்துகிறார்களாம்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, நான் உட்பட 21 எம்.எல்.ஏ-க்கள், ‘குட்கா தாராளமாகக் கிடைக்கிறது’ என்பதைப் புரியவைப்பதற்காகச் சட்டசபையில் காண்பித்தோம். அதனால், பல பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது. சட்டங்களின் மூலம் குட்கா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது இன்னும் தொடர்கிறது என்பதை நேற்று வாரப் பத்திரிகையில் (ஜூ.வி) செய்தியாகப் போட்டிருந்தார்கள். இனி, குட்கா விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கலாம். ஓரிரு மாதங்களில் தமிழகத்தைவிட்டே குட்காவை விரட்டுவோம்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்தான் குட்காவை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் எண்ணத்தை மாற்றும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களை மாவட்டவாரியாக அதிகாரிகள் நடத்த வேண்டும். நூறு சதவிகிதம் குட்காவை ஒழித்த மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு, புகையிலை ஒழிப்பு நாளன்று முதல்வர் கையால் பாராட்டுப் பத்திரம் வழங்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, ‘‘எடுத்த எடுப்பிலேயே கடைகளை சீல் வைக்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னார். அவரிடம் ஒரு வேண்டுகோள். முதலில் எச்சரிக்கை. அடுத்து, அபராதம். மூன்றாவதாக, கடைக்கு சீல் வைக்க உத்தரவிடுங்கள். தமிழகத்துக்கு அடுத்துள்ள மாநிலங்களில் குட்கா பொருள்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. அதன் ஆணிவேரைக் கண்டறிந்து அதை நிறுத்த வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஜூ.வி கவர் ஸ்டோரி எதிரொலி... “ஊருக்குள் ஒரு குட்கா பாக்கெட் கிடைக்கக்கூடாது!” - அதிரடி காட்டிய மா.சு
Jerome

திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத் தலைவர் சேப்பாக்கம் வி.பி.மணி, ‘‘என் கண்ணெதிரே நடந்ததைச் சொல்கிறேன். கடந்த ஆட்சியில் 200 மூட்டை குட்காவை போலீஸார் பிடித்தார்கள். அதில் வெறும் ஐந்து மூட்டைகளை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, மீதி மூட்டைகளைச் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கே திரும்பி அனுப்பினார் ஓர் உயரதிகாரி’’ என்று பேசியபோது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறுக்கிட்டார்.

‘‘கடந்த ஆட்சியில் நடந்தது வாஸ்தவம்தான். தி.மு.க ஆட்சியில் அப்படியெல்லாம் நடக்காது. உற்பத்தி செய்யுமிடம், விற்பனை செய்யுமிடம் இரண்டையும் கண்காணித்து அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று உறுதியளித்தவர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை நோக்கி, ‘‘உங்களுக்கு இரண்டு மாதங்கள்தான் டைம். ஊருக்குள் ஒரு குட்கா பாக்கெட் கிடைக்கக் கூடாது. நீங்கள், போலீஸார், உள்ளாட்சிதுறையினர் ஒருங்கிணைந்து குட்காவை முழுவதுமாக ஒழித்துக்கட்டுங்கள். ஊருக்குச் சென்றவுடனே களத்தில் இறங்குங்கள்’’ என்று கண்டிப்புடன் சொன்னார்.

சொல், செயலாகுமென்று நம்புகிறோம்!