அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மேக்கேதாட்டு... “கருணாநிதிபோல ஸ்டாலின் ஏமாந்துவிடக்கூடாது!”

மேக்கேதாட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
மேக்கேதாட்டு

‘‘மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம்... இதைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை’’ என்று சூளுரைக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ‘மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், மத்திய அரசிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குக் கிளம்பியிருக்கிறார் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இதையடுத்து, தமிழ்நாடு - கர்நாடகா - மத்திய அரசு இடையே அணை அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

மேக்கேதாட்டு...  “கருணாநிதிபோல ஸ்டாலின் ஏமாந்துவிடக்கூடாது!”

‘‘மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம்... இதைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை’’ என்று சூளுரைக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இதற்கிடையே, 9,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேக்கேதாட்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ‘‘மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கர்நாடகாவில் வெள்ளமே வந்தாலும்கூட, தமிழ்நாட்டுக்கு உபரிநீர் வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறி, உணவு உற்பத்தியே கேள்விக்குறியாகிவிடும்’’ என்று தமிழக விவசாயிகள் அலறுகிறார்கள்.

‘‘இந்த அணை கட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து, கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்தது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ‘இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் முடிவெடுக்காததாலும், நாங்கள் இதில் தலையிட வேண்டியதில்லை’ எனச் சொல்லி தடையை நீக்கிவிட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் போர்க்குணத்துடன் இதை எதிர்த்தால் மட்டுமே, காவிரி உரிமையைக் காப்பாற்ற முடியும்’’ என்கிறார்கள் காவிரிக்காகப் போராடுபவர்கள்.

மேக்கேதாட்டு...  “கருணாநிதிபோல ஸ்டாலின் ஏமாந்துவிடக்கூடாது!”
மேக்கேதாட்டு...  “கருணாநிதிபோல ஸ்டாலின் ஏமாந்துவிடக்கூடாது!”

மேக்கேதாட்டு மட்டுமன்றி, கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரங்களைப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கவனித்துவருபவர் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். அவர் நம்மிடம், ‘‘1968-ம் ஆண்டு ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியபோது அன்றைய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதி, ‘இது சட்ட விரோதம்; 1924-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட காவிரி ஒப்பந்தத்துக்கும் முரணானது’ என்று எதிர்ப்பு தெரிவித்தும்கூட பலனில்லை. அதன் பிறகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட கருணாநிதி, விவசாயிகளின் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஏற்பாடு செய்தார். காங்கிரஸ் கட்சி அப்போது இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாக உடைந்திருந்த காலகட்டம்; கர்நாடகாவிலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது... இந்திரா காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளரான தேவராஜ் அர்ஸை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காக, ‘ஹேமாவதி, ஹேரங்கி அணைகளுக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்குங்கள். தேர்தல் முடிந்தவுடன் இந்தப் பிரச்னையை நான் தீர்த்துவைக்கிறேன்’ என்று இந்திரா காந்தி அளித்த வாக்குறுதியை நம்பி, கருணாநிதி அந்த வழக்கை வாபஸ் பெறச் செய்தார். கர்நாடகாவில் இந்திரா காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்திரா காந்தி தனது வாக்குறுதியைக் காப்பாற்றாமல் ஏமாற்றிவிட்டார். ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் கட்டப்பட்டன. அடுத்து, கபினி அணையும் கட்டப்பட்டது. அதுபோல ஸ்டாலின் இப்போது ஏமாந்துவிடக் கூடாது.

சட்டப் போராட்டம், அரசியல் அழுத்தம், மக்கள் எழுச்சியின் மூலம் மட்டுமே மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இதில் வேகமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். மேக்கேதாட்டுவில் கட்டுமானப் பணி நடக்கிறதா என அறிந்துகொள்ள, தமிழக அரசு உடனடியாக வல்லுநர்குழுவை அங்கு அனுப்பி ஆய்வுசெய்ய வேண்டும். புதிய அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு கிடப்பில் கிடக்கிறது. அதை உடனடியாக உயிர்ப்பித்து விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை, வனத்துறை இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். அணை கட்டுமானப் பணிக்குத் திட்ட மதிப்பீட்டு அறிக்கை கேட்டு, மத்திய நீர்வளத் துறையினர் கர்நாடகாவுக்குக் கொடுத்த மறைமுக அனுமதியைத் திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும்’’ என்றார் விரிவாக.

மணியரசன், சுந்தர விமலநாதன்
மணியரசன், சுந்தர விமலநாதன்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் ‘‘ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைக் கட்டுவதற்கு முன்பு தமிழ்நாட்டுக்கு 357 டி.எம்.சி காவிரி நீர் கிடைத்தது. பிறகு, படிப்படியாகக் குறைந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்ட 177.25 டி.எம்.சி-யைக்கூட, கர்நாடகம் முழுமையாகத் தருவதில்லை. இந்த அணை கட்டப்பட்டால் நமக்குத் தண்ணீர் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்’’ என்றார் கவலையுடன்!

தமிழக அரசு சார்பில் இந்த அணை கட்டப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் டெல்லி பிரநிதியான ஏ.கே.எஸ்.விஜயனிடம் கேட்டோம். ‘‘மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் உரையிலும் இதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்திலும் தீர்்மானம் நிறைவேற்றப்படும். தமிழக அரசால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன’’ என்றார்.