Published:Updated:

ம.பி: `பா.ஜ.க-வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!’ - தொடரும் அரசியல் குழப்பம்

பா.ஜ.க-வில் இணைந்த பிரதியும்னா சிங்
பா.ஜ.க-வில் இணைந்த பிரதியும்னா சிங்

``பிரதியும்னா சிங், தனது ராஜினாமா கடிதத்தை சனிக்கிழமை சமர்பித்தார். இதுதொடர்பாக அவரை மீண்டும் ஆலோசிக்க அறிவுறுத்தினேன். அவசரமாக முடிவெடுக்க வேண்டாம் என்றும் கூறினேன்.”

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும்கட்சியான காங்கிரஸில் உள்கட்சிப் பிரச்னைகள் கடந்த சில தினங்களாக தீவிரமாகியுள்ளது. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு இடையே கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பா.ஜ.க, காங்கிரஸ் ஆட்சியை அம்மாநிலத்தில் கவிழ்க்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

சச்சின் பைலட், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க-வில் இணைய இருப்பதாகவும் இதற்கு சச்சின் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனிடையே, காங்கிரஸ் தலைமை இந்தப் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதியும்னா சிங்
பிரதியும்னா சிங்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள படா மல்ஹெரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பிரதியும்னா சிங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். பிரதியும்னா தற்போது தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததோடு, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, பா.ஜ.க-வில் உறுப்பினராக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் இணைந்துள்ளார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேறு ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து வெளியேறுவதற்கான காரணங்கள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

ராஜஸ்தான்:`காங்கிரஸில் வலுக்கும் மோதல்!’ - டெல்லியில் முகாமிட்ட சச்சின் பைலட்

பிரதியும்னா சிங்கின் ராஜினாமா தொடர்பாக மத்தியப் பிரதேச சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ்வர் சர்மா பேசும்போது, ``பிரதியும்னா சிங், தனது ராஜினாமா கடிதத்தை சனிக்கிழமை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக அவரை மீண்டும் ஆலோசிக்க அறிவுறுத்தினேன். அவசரமாக முடிவெடுக்க வேண்டாம் என்றும் கூறினேன். ஆனால், மீண்டும் அவர் என்னை சந்தித்து ராஜினாமாவை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார். எனவே, அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறியுள்ளார். பிரதியும்னா சிங் அவரது தொகுதியில் அதிக ஆதரவு பெற்ற ஒருவராகக் கருதப்படுவதால் அவரது ராஜினாமா மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பும் அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் 91 உறுப்பினர்கள் தற்போது சட்டமன்றத்தில் உள்ளனர்.

முன்னதாக, காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் தலைமையில் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி நடைபெற்றபோது, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் கமல்நாத்துக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஜோதிராதித்யா தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க-வில் இணைந்தார். இதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த மார்ச் மாதம் மத்தியப் பிரதேசத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து, பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது.

பிரதியும்னா சிங்
பிரதியும்னா சிங்

பாரதிய ஜனதாவின் சூழ்ச்சியால்தான் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல, தற்போது ராஜஸ்தானிலும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு இடையிலான பிரச்னையைப் பயன்படுத்தி பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக கோடிக்கணக்கில் பேரம் பேசியதாகவும் பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் என இரு மாநிலங்களிலும் பிரச்னைகள் அதிகமானதால் காங்கிரஸ் கட்சியில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது எனலாம். உள்கட்சி பிரச்னை தொடர்பாக காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பா.ஜ.க-வில் இணைந்த  காங்கிரஸ் `கடத்தல்' புள்ளி! -அதிர்ச்சியில் தொண்டர்கள்
அடுத்த கட்டுரைக்கு