Published:Updated:

விசாரணையின்போது பெண்ணுடன் நெருக்கம்; வழக்கறிஞருக்கு வாழ்நாள் தடைவிதிக்க நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை உயர் நீதிமன்றம்
News
சென்னை உயர் நீதிமன்றம்

அப்போது பேசிய நீதிபதி பி.என் பிரகாஷ், ``நீதித்துறைக்கே இந்தச் சம்பவம் மிகப்பெரிய அசிங்கம். வழக்கறிஞரின் இந்தச் செயலால் நான் எனது பதவியையே ராஜினாமா செய்ய நினைத்தேன்" என வேதனையுடன் கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு முதல் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலமாகவே நடைபெற்றுவந்தன. அந்த வகையில், தனி நீதிபதி முன்பாக நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் கேமரா ஆனில் இருந்தது தெரியாமல், அருகிலிருக்கும் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன்
வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன்

நீதிமன்ற விசாரணையின்போது, வழக்கறிஞர் ஒருவர் இப்படி நடந்துகொண்டது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, இந்த விவகாரம் நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, சந்தானகிருஷ்ணனை வழக்கறிஞர் தொழில் செய்வதற்குத் தடைவிதிக்கும்படி பார் கவுன்சிலுக்குப் பரிந்துரைத்தது. மேலும், வைரலான சம்பந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களிருந்து நீக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு, விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், வழக்கறிஞர் பணியை மேற்கொண்டு தொடர இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீதிபதி பி.என்.பிரகாஷ்
நீதிபதி பி.என்.பிரகாஷ்

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று (டிசம்பர் 23) நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி பி.என்.பிரகாஷ், ``நீதித்துறைக்கே இந்தச் சம்பவம் மிகப்பெரிய அசிங்கம். வழக்கறிஞரின் இந்தச் செயலால் நான் என் பதவியையே ராஜினாமா செய்ய நினைத்தேன்" என வேதனையுடன் கூறினார்.

மேலும், வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை வரும் ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.