`8 ஆண்டுகளுக்கு ரூ.1,65,814 கோடி?!’ - அதிர்ச்சியூட்டும் தமிழக அரசின் கடனுக்கான வட்டிக் கணக்கு

கொரோனா பேரிடர் காலமான 2020-21 நிதியாண்டில் செலுத்த வேண்டிய ரூ. 36,311.47 கோடி வட்டியில், கடந்த நவம்பர் மாதம் வரை ரூ14,181.51 கோடி மட்டும்தான் வட்டி செலுத்தப்பட்டிருக்கிறது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. கடந்த பொங்கலுக்கு இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசப் பொருள்களுடன் ரூ 2,500 வழங்கி மக்களை மகிழ்ச்சியடையவைத்தது.
கொரோனா பேரிடர் காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மூன்று தவணைகளாக நிதியும், விலையில்லாமல் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கியது தமிழக அரசு. சமீபத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாதம்தோறும் 2-ஜிபி டேட்டா இலவசமாக வழங்க உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் வருவதற்குள் இன்னும் பல சலுகைகளை மக்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அரசின் வருவாய்ப் பெருக்கத்துக்கு எந்தத் திட்டத்தையும் உருவாக்காமல், தேவையான, தேவையில்லாத திட்டங்களுக்கு வாங்கிக் குவிக்கும் கடனுக்கு பெரும் தொகையை வட்டியாக, தமிழக அரசு செலுத்திவருகிறது.

தமிழக அரசின் கடன் மற்றும் வட்டி பற்றி மத்திய தலைமை நிதி தணிக்கையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம், ``மத்திய தலைமை நிதி தணிக்கை குழு, ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேசங்களின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை ஆய்வுசெய்து தனது இணையதளத்தில் வெளியிட்டுவருகிறது. இதை அனைவரும் பார்க்கலாம்.
இதில் தமிழக அரசின் வரவு செலவு விவரத்தைப் பார்த்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், இதில் தமிழக அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் வாங்கிய கடன்களுக்கு வட்டியாக மட்டும் 1,65,814.52 கோடி ரூபாய் செலுத்தியிருக்கிறது. வட்டியே இவ்வளவு என்றால் வாங்கிய கடன் எவ்வளவு இருக்கும்?'' என்றவர் தொடர்ந்து பேசும்போது,
``பல்வேறு கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டித்தொகை 2012-13-ல் 13,030.53 கோடியிலிருந்து 2020-21 நிதியாண்டில் 278 சதவிகிதம் உயர்ந்து 36,311.47 கோடியாக மாறியிருக்கிறது. அரசு பெறும் கடனுக்குக் குறைந்த அளவு வட்டியே வசூலிக்கப்பட்டாலும் இந்த அளவிலான வட்டித் தொகை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கொரோனா பேரிடர் காலமான 2020-21 நிதியாண்டில் செலுத்த வேண்டிய ரூ. 36,311.47 கோடி வட்டியில், கடந்த நவம்பர் மாதம் வரை ரூ14,181.51 கோடி மட்டும்தான் வட்டி செலுத்தப்பட்டிருக்கிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் ரூ. 22,129.96 கோடி வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது.
பொங்கலுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ 2,500 வழங்க அரசு மொத்தம் 5,60,484 கோடி ரூபாய் ஒதுக்கியது. அப்படிக் கணக்கு பார்த்தால், பல்வேறு கடன்களுக்கு அரசு செலுத்திய வட்டித் தொகையைவைத்து ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ 73,972 வழங்கலாம்.

2019-20 நிதியாண்டில் தமிழகத்தில் மக்கள்நலத் திட்டங்களுக்கு செலவிட்ட தொகை ரூ.20,146.77 கோடி. ஆனால், அதே ஆண்டில் கடனுக்குச் செலுத்திய வட்டி மட்டும் ரூ31,980.19 கோடி. இப்படித் திட்டங்களுக்கு செலவு செய்வதைவிட வட்டிக்குச் செலவிடுவதுதான் அதிகமாக இருக்கிறது. இப்படியே போனால் தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகும். மக்கள் நலத்திட்டச் செலவைவிட கடனுக்குச் செலுத்தும் வட்டி பலமடங்காக இருக்கும் நிலையில் `வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்று விளம்பரம் செய்துவருகிறது தமிழக அரசு'' என்றார் காட்டமாக.