மதுரை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இந்திராணி பொன் வசந்த் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

காலை 10 மணிக்கு மேயராகத் தேர்வு செய்யப்பட்டவர், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வந்த பிறகு, மதியம் 12 மணிக்கு மதுரை மாநகராட்சி மேயராகப் பதவி ஏற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பாரம்பர்ய நகரமான மதுரை, 1971-ல் மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. அப்போது நகர்மன்றத் தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதைத் தொடர்ந்து ஆறு பேர் மேயர் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்திராணி பொன் வசந்த் பொறுப்பேற்றுள்ளார்.

மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் இந்திராணிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து மேயருக்கான வெள்ளிச் செங்கோலை வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேயர் இந்திராணிக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி சு.வெங்கடேசன், மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன், மாமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ``16 வருடங்கள் தாமதமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இருந்த நிதிநிலை நிர்வாகம் உள்ளிட்டவற்றை ஒன்பது மாதங்களில் சீர்திருத்தம் செய்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படவில்லை. கட்டமைப்புகளை மேம்படுத்துவதே முதல் இலக்கு. மதுரை மாநகராட்சியின் வரலாற்றில் புதிய ஆரம்பம் இன்று. வரும் ஐந்து ஆண்டுக்காலம் இதுவரை அடையாத வளர்ச்சியைக் கொண்டுவர புதிய மேயர் நடவடிக்கை எடுப்பார்.
முன்பு தவறான திசையில் சென்ற திமுக-வின் பிம்பம் இன்று மாறியுள்ளது. எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் தேர்தல் நடைபெற்று பதவிகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
மேயர் இந்திராணி, ``முதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சியில் சிறப்பாகச் செயல்படுவேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி" என்றார்.

மேயர், துணை மேயர் வேட்பாளர் தேர்வில் தாங்கள் சிபாரிசு செய்த நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், பதவியேற்பு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்தின் மற்றோர் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி, மணிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மதியம் நடந்த துணை மேயர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கோ.தளபதி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.