Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: முந்தும் திமுக... முட்டிமோதும் அதிமுக; பாஜக நிலை?! - மதுரை மாநகராட்சிக் கள நிலவரம்

மதுரை மாநகராட்சி

மதுரை ஒரு பாரம்பர்ய நகரம், கோயில் நகரம், பண்பாட்டு நகரம் என்பதால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு விஷயங்களுக்காக இங்கு வருகிறார்கள். அப்படியுள்ள நிலையில் மதுரையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது முக்கியமானது!

உள்ளாட்சி ரேஸ்: முந்தும் திமுக... முட்டிமோதும் அதிமுக; பாஜக நிலை?! - மதுரை மாநகராட்சிக் கள நிலவரம்

மதுரை ஒரு பாரம்பர்ய நகரம், கோயில் நகரம், பண்பாட்டு நகரம் என்பதால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு விஷயங்களுக்காக இங்கு வருகிறார்கள். அப்படியுள்ள நிலையில் மதுரையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது முக்கியமானது!

Published:Updated:
மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி - 1971 முதல் 2011 வரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலால் தமிழகமே பரபரப்பாகியுள்ள நிலையில், மதுரை மாநகராட்சித் தேர்தல் களம், அதைவிட சூடாக தகிக்கிறது.

ஐயாயிரம் ஆண்டுகள் வரலாறுகொண்ட உலகிலுள்ள, புரதான நகரங்களில் மதுரையும் ஒன்று. கோயிலில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மனே மதுரையை ஆள்வதாக ஆன்மிக மக்கள் நம்புகிறார்கள்.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்

மன்னர் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் தமிழ் மொழியை சங்கம் வைத்து வளர்த்துவரும் நகரம். பண்பாடு காக்கும் நகரம். தொன்மை, புதுமை, ஆன்மிகம், கலை, இலக்கியம், வீரம், அன்பு, வம்பு, அரசியல், வணிகம் என அனைத்துக்கும் மையமாக திகழுகிற மதுரை, 1971-ல்தான் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நகரை ஊடறுத்து வைகை ஆறு செல்வதால், வடகரை, தென்கரை என இரண்டு பக்கமும் நகரம் விரிவடைந்துகொண்டேயிருக்கிறது. 147 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 100 வார்டுகளைக்கொண்ட தமிழகத்தின் 2-வது மாநகராட்சியாக உருவாகியிருந்தாலும், மதுரை இன்னும் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமை பெறாத மாநகராட்சியாகவே உள்ளது. மதுரையின் புறநகர்ப் பகுதி விரிவடைந்துகொண்டே போனாலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள்.

திமுக பிரசாரம்
திமுக பிரசாரம்

மாநகராட்சியின் முதல் மேயராக 1971-ல் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட மதுரை எஸ்.முத்து, 1980 வரை பொறுப்பில் இருந்தார். அதன் பின்பு, அதிமுக-வைச் சேர்ந்த எஸ்.கே.பாலகிருஷ்ணன், பட்டுராஜன் என மேயர்கள் பொறுப்புக்கு வந்தனர். 1984-க்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகர மேயராக திமுக-வைச் சேர்ந்த குழந்தைவேலு பொறுப்பேற்றார். அவருக்கு அடுத்து சி.ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன் என வரிசையாக திமுக-வினரே பொறுப்புக்கு வந்த நிலையில், 2011-ல் அதிமுக-வைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா மேயர் ஆனார். 2016-உடன் அவர் பதவி முடிவடைய அடுத்து தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போடப்பட்டது.

மாநகரப் பிரச்னைகளும் சவால்களும்!

மதுரை மாநகராட்சி பிரச்னைகள் தொடர்பாக மக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பேசுகையில், ``20 லட்சம் மக்கள் வாழும் மதுரை மாநகராட்சியின் வார்டுகள் தற்போது சீரமைக்கப்பட்டு 100 வார்டுகளாக்கப்பட்டுள்ளன. இதுவரை பொறுப்புக்கு வந்த மேயர்கள் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாதது ஒருபக்கமென்றால் அவர்களுடன் சேர்ந்து, ஆணையாளர்கள், அலுவலர்கள் செய்த முறைகேடுகள் செய்தது இன்னொரு பக்கம். அதனால்தான் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி முழுமையாகப் பயன்படுத்தாமல், பலரின் தனிப்பட்ட கஜானாவுக்குச் சென்று மாநகரம் அரைகுறையாக காட்சியளிக்கிறது.

பாஜக பிரசாரம்
பாஜக பிரசாரம்

அப்படியே சிறப்பாகச் செயல்படுகிற ஆணையர்கள் வந்தாலும், ஆளுங்கட்சியினர் அவர்களைச் சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கிவிடுகிறார்கள்.

ஆண்டுக்கு 586 கோடி ரூபாய் வரி வருவாய் வந்தாலும், நிதிப் பற்றாக்குறையுடன்தான் மாநகராட்சி செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை ஊழியர்களின் ஊதியத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையைச் சேர்த்து அதன் மூலம் நகரை அழகுபடுத்தவும், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் மக்களுக்குக் கூடுதல் வசதிகளைச் செய்து கொடுக்கவும் பல திட்டங்களையும் கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் பெரியார் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. ஆறு தளங்கள்கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுவருகிறது. பூங்காக்கள், சுற்றுலா வருகிறவர்களைக் கவரும் வகையில் புதிய கட்டடங்கள், வாகன நிறுத்தம் என்று அமைத்தாலும் எதுவுமே திருப்திகரமாக இல்லை, எல்லாவற்றிலும் அரைகுறைத் தன்மையுடன் காட்சியளிக்கிறது.

ம.நீ.ம வேட்பாளர்
ம.நீ.ம வேட்பாளர்

ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய ஆயிரம் கோடி நிதியில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக மக்கள் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு புகார் தெரிவித்தார்கள்.

அந்த லட்சணத்தில்தான் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடந்துள்ளன. ஆனால், தற்போது அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

மதுரையின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் விரகனூர் முதல் பரவை வரை வைகைக் கரையோரம் இருபுறம் அமைக்கப்பட்ட சாலைப் பணிகள் முடிக்கப்படாமல் அப்படியே இழுத்துக்கொண்டு போகின்றன. இன்னும் பல வார்டுகளில் குடிநீர் விநியோகம் என்பது முறைப்படுத்தப்படாமல் உள்ளது. அரசியல்வாதிகள், மாநகராட்சி அலுவலர்களின் பினாமிகள் பெயரில் ஓடும் தண்ணீர் லாரிகள் பயனடையும் வகையில் குடிநீர் விநியோகத்தைச் சரிபடுத்தாமல் வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 24 வார்டுகளில் எந்தவ்ப்ப்ர் அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தூய்மை பணியாளர் பற்றாக்குறையும் இருக்கிறது.

பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்

மதுரை நகருக்குள் அனைத்துச் சாலைகளும் பல வருடங்களாகச் சேதமாகிக் காட்சியளிக்கின்றன. சாலை அமைக்க அரசு 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தரமில்லாமல் சாலைகள் அமைக்கப்பட்டுவருவதாகப் புகார் வந்துகொண்டிருக்கிறது.

வரி நிலுவைகளை வசூலிப்பதில் பிரபல கல்வி நிலையங்கள், நிறுவனங்கள், அதிகாரமிக்கவர்களின் வணிக வளாகங்களில் சலுகை காட்டப்படுவதாகவும், சாதாரண மனிதர்களிடம் கறாராக நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

மதுரையின் முக்கியப் பிரச்னை போக்குவரத்து நெருக்கடிதான். மாட்டுத்தாவணியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்ல வாகன ஓட்டிகளுக்கு ஒரு மணி நேரம் ஆகும். இதுபோல அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி. முக்கியமாக கோரிப்பாளையம் சிக்னலில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை அப்படியே கிடப்பில் உள்ளது. மெட்ரோ ரயில் கோரிக்கை இப்போதுதான் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.

ஸ்மார்ட் சிட்டி பணிகள்
ஸ்மார்ட் சிட்டி பணிகள்

சவால்கள்:

மதுரை ஒரு பாரம்பர்ய நகரம், கோயில் நகரம், பண்பாட்டு நகரம் என்பதால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு விஷயங்களுக்காக இங்கு வருகிறார்கள். அப்படியுள்ள நிலையில் மதுரையை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துவது முக்கியமானது.

விமான நிலையத்திலிருந்து மதுரை நகருக்குள் வருகிற அவனியாபுரம், வில்லாபுரம் சாலை நெரிசலாகவும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியுடனும் உள்ளது. அதுபோல் கோரிப்பாளையம், சிம்மக்கல், கீழவாசல், நெல்பேட்டை, முனிச்சாலை சந்திப்பு, பீபி குளம், ஆத்திகுளம், நரிமேடு, மாட்டுத்தாவணி, தெப்பக்குளம் பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியால் தினமும் பாதிக்கப்படுகின்றன. இதைச் சரிசெய்ய வேண்டும்.

திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாகச் சொல்லப்படும் மெட்ரோ ரயிலை விரைந்து கொண்டுவர வேண்டும். மதுரை மாநகரில் நெருக்கடியைக் குறைக்க, கூடல் நகர் ரயில் நிலையத்தை மற்றொரு ரயில் முனையமாக செயல்படுத்த வேண்டும். மக்களுக்குத் தேவையான அனைத்து அலுவலகங்களும் எளிதில் அணுகும்விதமாக அனைத்து மக்களுக்கும் இன்னும் நெருக்கமாக கொண்டுவர வேண்டும்.

அதிமுக தேர்தல் பிரசாரம்
அதிமுக தேர்தல் பிரசாரம்

லாரி செட்டுகள், வெங்காய மார்க்கெட், கரிமேடு மீன் மார்க்கெட், இரும்புக்கம்பி, தகர விற்பனைக் கடைகளை மாட்டுத்தாவணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது... இவற்றைத் தீர்க்கக்கூடியவர்களே மக்களின் சாய்ஸாக இருப்பார்கள். ஆனால், இது நடக்காமலும் போகலாம்.

திமுக:

பிரதான கட்சிகளான திமுக - அதிமுக-வில் போட்டியிடுவோரில் மேயர் வேட்பாளர்கள் எனச் சொல்லப்படுவர்கள் ஒருசிலர்தான். காரணம், பெரிய அளவில் வாரிசுகளை இரண்டு கட்சிகளிலும் நிறுத்தவில்லை.

திமுக வேட்பாளர் ஹரிணி
திமுக வேட்பாளர் ஹரிணி

திமுக அதிகமான இடங்கள் வெற்றிபெற்றால், வடக்கு மாநகர மாவட்டப் பொறுப்பாளர் பொன்முத்துராமலிங்கத்தின் மகன் பொன்.சேதுவின் மனைவி விஜய மௌசிமிதான் மேயர் வேட்பாளர் என்கிறார்கள். இவரை வெற்றி பெறவைக்க பொன் முத்துராமலிங்கம் 85 வயதிலும் கடுமையாக உழைக்கிறாராம். அவரை ஆதரிக்கும் வகையிலேயே மற்ற வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்கள்.

அதேநேரம், உதயநிதி, அன்பில் மகேஷ், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு என முக்கியப் புள்ளிகள் மூலம் மேயராகிவிடலாம் என்ற நம்பிக்கையில் சிலர் காய்நகர்த்திவருகிறார்கள். அதில் தங்கம் தென்னரசுவின் ஆதரவு பெற்ற ரோகினி பொம்மதேவன், உதயநிதி, அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவு பெற்ற முன்னாள் கவுன்சிலர் சசிகுமாரின் மனைவி வாசுகி, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவு பெற்ற இந்திராணி பொன் வசந்த், மிசா பாண்டியனின் மனைவி ஆகியோரும் மேயர் ரேஸில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் விஜய மௌசிமி
திமுக வேட்பாளர் விஜய மௌசிமி

அதேபோல் துணை மேயர் பதவிக்கு ஆரப்பாளையம் ஜெயராமன், எஸ்ஸார் கோபி தம்பி போஸ் முத்தையா, வி.கே.குருசாமி உறவினர் முகேஷ் ஷர்மா உள்ளிட்ட சிலர் காய்நகர்த்திவருகிறார்களாம்.

அதிமுக:

அதிமுக-வில் முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி ரேஸில் முதல் இடத்தில் உள்ளார். இவர் செல்லூர் ராஜூவின் தீவிரமான ஆதரவாளர். அடுத்த இடத்தில் முன்னாள் கவுன்சிலர் சுகந்தி அசோக், ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர் சண்முகப்ரியா ஹோசிமின் ஆகியோருக்கு வாய்ப்பு அமையும் என்கிறார்கள்.

திமுக வேட்பாளர் வாசுகி
திமுக வேட்பாளர் வாசுகி

துணை மேயர் பதவிக்கு செல்லூர் ராஜூவின் ஆதரவாளர் சோலை ராஜா, ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர் ஜெயவேல், ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர் சாலை முத்துவுக்கு வாய்ப்பு அமையும் என்கிறார்கள்.

80-க்கும் மேற்பட்ட வார்டுகளில் போட்டியிட்டாலும் பாஜக ஐந்து இடங்களில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என மாநகரத் தலைவர் டாக்டர் சரவணன் கடுமையாக வேலை பார்க்கிறார். ஆனால், கூட்டணி பலம் இல்லாததால் அது மைனாஸாகவே தெரிகிறது. அது தெரிந்ததாலோ, என்னவோ, பாஜக-வில் மேயர் கனவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலர் இந்தமுறை சீட் கேட்கக்கூட இல்லையாம். இதுவே போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்முகவள்ளி-சுகந்தி-சண்முகப்ரியா
சண்முகவள்ளி-சுகந்தி-சண்முகப்ரியா

அதுபோலத்தான் நாம் தமிழர், தேமுதிக, அமமுக, மநீம,பா.ம.க., ச.ம.க., எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளின் நிலைமை.

இதில் அழகிரி ஆதரவாளர்களான முபாராக் மந்திரி தன் மனைவியை 47-வது வார்டிலும், இசக்கிமுத்து தன் மனைவியை 14-வது வார்டிலும் சுயேச்சையாக நிறுத்தியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உட்கட்சி பிரச்னைகள், உள்குத்துகள் அனைத்துக் கட்சிகளிலும் இருந்தாலும், வைட்டமின் `ப’ கணக்கும் பார்க்கப்படுகிறது.

இதில் திமுக-வும், அதிமுக-வும் வார்டுகளில் வைட்டமின்களை இறக்க தொடங்கிவிட்டனவாம். பிரசார வேகம், ஆளுங்கட்சி என்ற ப்ளஸ் என எப்படியும் 70 சதவிகித இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும் என்பதே தற்போதைய கள நிலவரமாக இருக்கிறதாம். தேர்தல் நெருங்க நெருங்க, வைட்டமின்களாலும், பிரசார வியூகத்தினாலும் இதில் சில மாற்றங்கள் இருக்கலாம்!

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

100 வார்டுகளைக்கொண்ட மதுரை மாநகராட்சியில் அதிமுக 20 வார்டுகள் வரையிலும், பாஜக மூன்று வார்டுகள் வரையிலும் முன்னிலையில் வர வாய்ப்பு இருக்கிறது. சுயேச்சைகள் சில இடங்களிலும் வர வாய்ப்புள்ளது. ஆனால், இறுதியில் அனைத்தையும் வைட்டமின்கள் மாற்றிவிட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை!