உயர்ந்த பதவிகளுக்கு வரும் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு சரியாக வரக்கூடிய அலுவலர்களை அருகில் வைத்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சர்ச்சைக்குரிய அலுவலர் ஒருவரே, தனக்குச் சரியாக வருவார் என நினைத்து, மேயரைத் தேர்வுசெய்திருக்கிறார் என்பதுதான் மதுரையில் மாநகராட்சியில் அனலைக் கிளப்பியிருக்கும் விவாதமாக மாறியிருக்கிறது.

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த் தேர்வாகியுள்ளதால் முக்கிய தி.மு.க நிர்வாகிகள் பேரதிர்ச்சி அடைந்துள்ளதை அவர்களிடம் பேசியபோது அறிந்துகொள்ள முடிந்தது.
நம்மிடம் பேசிய மதுரை மாநகர் தி.மு.க பிரமுகர்கள் சிலர், "மதுரை மாநகர மேயர் பதவியைக் குறிவைத்து, கடந்த ஒரு மாதமாக முக்கிய நிர்வாகிகள் பலரும் காய்நகர்த்திவந்தனர். இந்த நிலையில், மேயர் ரேஸில் பட்டும்படாமல் ஒட்டிக்கொண்டிருந்த இந்திராணி பொன்வசந்த்துக்கு மேயர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகம்பத்தை பூர்வீகமாகக்கொண்ட இந்திராணி, முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். முதன்முறையாக வெற்றிபெற்றுள்ளார். கணவர் பொன் வசந்த் ஆரப்பாளையம் பகுதி தி.மு.க செயலாளராக இருந்துவருகிறார். அவருக்குப் பூர்வீகம் உசிலம்பட்டி அருகேயுள்ள ஆரியப்பட்டி. வழக்கறிஞரான அவர் ஆரம்ப காலத்தில் மாணவர் அணி, வழக்கறிஞர் அணியில் நிர்வாகியாக இருந்து, கடந்த 2013 முதல் பகுதிச் செயலாளராக இருந்துவருகிறார்.

அதேநேரம், அரசு மற்றும் மாநகராட்சி ஒப்பந்த வேலைகளை எடுத்துச் செய்துவருகிறார். கணவருக்குத் துணையாக பொன்வசந்த்தும் இருக்கிறார். இது ஒருபுறமிருக்க, மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோரால் குற்றம்சாட்டப்பட்ட மாநகராட்சி அதிகாரி ஒருவர்தான், இந்திராணி பொன் வசந்த் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த மாநகராட்சி அதிகாரி, பொன் வசந்த்துக்கு நெருங்கிய உறவினர். அவர்மீது விஜிலன்ஸ் பதிவுசெய்த வழக்கும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கின்றன. குற்றச்சாட்டுகளால் இடையில் பதவி இறக்கம் செய்யப்பட்டு, சென்னைக்கு மாற்றப்பட்டார் அந்த அதிகாரி. பிறகு, சில அமைச்சர்களைப் பிடித்து மீண்டும் மதுரைக்கு வந்து, அதே பதவியில் அமர்ந்தார். இந்நிலையில்தான், எந்த ஊழல் விசாரணையிலும் தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, தன் உறவினரான இந்திராணி பொன் வசந்த்தை மேயராக்க தி.மு.க தலைமையில் தனக்கிருந்த தொடர்புகள் மூலம் முயற்சி செய்து வெற்றிபெற்றுள்ளார் அந்த அதிகாரி.

இந்தச் சூழலில், தன் ஆதரவாளர் பாமா முருகனை சிபாரிசு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எதற்கும் சொல்லி வைப்போமே என்று தன் தொகுதிக்குள் உள்ள வார்டில் வெற்றிபெற்றுள்ள இந்திராணி பொன்வசந்த் பெயரையும் சிபாரிசு செய்திருக்கிறார். அதேநேரம், அமைச்சர் பின்னால் பாதுகாவலர்போலச் சென்றுகொண்டிருக்கும் மிசா பாண்டியன் மனைவி பெயரை சிபாரிசு செய்யவில்லை. பழனிவேல் தியாகராஜன் சிபாரிசும், ஏற்கெனவே மாநகராட்சி அதிகாரி ஏற்பாடு செய்திருந்த லாபியும், மதுரை மாவட்ட தி.மு.க-வில் பிரமலைக்கள்ளர் சமூகத்துக்கு உரிய வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற குறையைத் தீர்க்கும் வகையிலும், இந்திராணி பொன் வசந்த்தை மேயர் வேட்பாளராக அறிவித்துவிட்டது தி.மு.க தலைமை.
முன்னாள் அமைச்சரும், மாநகரச் செயலாளருமான பொன் முத்துராமலிங்கம் தன் மருமகள் விஜயமௌசுமிக்காகவும், அகமுடையார் சமூக பிரதிநிதித்துவத்துக்காகவும் முயன்று பார்த்தார். அமைச்சர் பி.மூர்த்தி வேறு வழியில்லாமல் யாதவர் சமூகத்தைச் சேர்ந்த வாசுகிக்காக முயன்றார். மற்றொரு மாநகர செயலாளர் கோ.தளபதி நாயுடு சமூகத்தைச் சேர்ந்த இந்திரா காந்திக்காக கட்சித் தலைமையிடம் முயன்றார். இந்த முயற்சிகளுக்கு எந்தப் பலனுமில்லை. மறவர் சமூகத்தைச் சேர்ந்த ரோஹினிக்காக, அவருடைய உறவினர் அமைச்சர் தங்கம் தென்னரசு சிபாரிசு செய்தும் பலனில்லை.

அதுபோல் துணை மேயர் பதவியை சி.பி.எம் கட்சி அழுத்திக் கேட்காத நிலையில், அதிக வாக்குகள் வாங்கி வெற்றிபெற்ற தி.மு.க மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயராமுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிடும் சூழல் நிலவியது. இது பிடிக்காத சில அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் திட்டமிட்டு எட்டு வார்டுகளில் போட்டியிட்டு 4-ல் மட்டும் வெற்றிபெற்ற சி.பி.எம்-க்கு துணை மேயர் பதவியை ஒதுக்கிவிட்டனர். இதில் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பினர் சிலர், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜன் மீது மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்ததாக ஜெய்ஹிந்த்புரம் பகுதி மக்கள் சிலர் ஏற்கெனவே அனுப்பிய புகாரை தற்போது தி.மு.க., சி.பி.எம் தலைமைக்கு புகாராக அனுப்பிவருகிறார்கள்.
அதேநேரம், ஐந்து வார்டுகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு துணை மேயர் பதவியை வழங்கியிருக்கலாம் என்று புலம்பிவருகிறார்கள். தற்போது பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பல திட்டங்கள் மதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவ்வளவு சர்ச்சைகளுடன் மேயர், துணை மேயர் தேர்வு நடைபெற்றிருக்கிறது" என்றனர்.
இந்தக் களேபரங்களுக்கு இடையே, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசு செய்தவர்தான் மதுரை மேயராக பொறுப்பேற்றிருப்பதால், பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, பொன்.முத்துராமலிங்கம், மணிமாறன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள் விவரமறிந்த கட்சி வட்டாரத்தினர்.