Published:Updated:

“ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும்!” - வழிகாட்டிய மகாராஷ்டிரா... பின் தொடரும் தமிழகம்...

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு பரிந்துரைக்கும் ஐந்து பேரின் பெயர்ப் பட்டியலை, ஆளுநருக்கு அனுப்பாமல் மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைத்து மகாராஷ்டிரா அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. இதையடுத்து, `மாநில சுயாட்சியை அழுத்தமாகப் பேசும் தமிழக அரசும் அது போன்ற சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்’ என்ற குரல்கள் தமிழக அரசியல் களத்தில் எழுந்த நிலையில், ஜனவரி 6 அன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், ``பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஒரு மாநிலத்தின் ஆளுநரே அந்த மாநிலத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக இருப்பார். அவரே, தேடுதல் குழுவின் பரிந்துரைகளின்படி, நேரடியாகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பார். இந்த நியமனங்களின்போது, பல மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக, மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இல்லாத மாநிலங்களில் இது பெரும் பிரச்னையாக வெடிக்கும். தமிழகத்திலும் கடந்த 2018-ல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களைக் காவிமயமாக்க வேண்டாம்’ என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

“ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும்!” - வழிகாட்டிய மகாராஷ்டிரா... பின் தொடரும் தமிழகம்...

இந்த நிலையில்தான், கடந்த டிசம்பர் 29-ம் தேதி ‘மகாராஷ்டிரா பொதுப்பல்கலைக்கழகங்கள் சட்டம் 2016’-ஐ திருத்தி, அதில் சில மாற்றங்களையும் கொண்டுவந்திருக்கிறது அந்த மாநில அரசு. அதன்படி, துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு பரிந்துரைக்கும் ஐந்து பேரின் பெயர்ப் பட்டியலை, ஆளுநருக்கு அனுப்பாமல் மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும். அதிலிருந்து இருவரை மாநில அரசு தேர்ந்தெடுத்து, பின்னர் ஆளுநருக்கு அனுப்பும். அந்த இருவரில் ஒருவரைத்தான், ஆளுநர் துணைவேந்தராக நியமிக்க முடியும். இதன் மூலம், துணைவேந்தரைத் தன்னிச்சையாக நியமிக்கும் ஆளுநருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. தவிர, ‘வேந்தருக்கு இணையாக இணைவேந்தர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பொறுப்பு மாநில உயர்கல்வித்துறை அமைச்சருக்கு வழங்கப்படும்; பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்க முடியாத சூழலில், இணைவேந்தர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிரா அரசின் சட்டத் திருத்தத்துக்கு முன்னதாக கடந்த டிசம்பர் மத்தியில், மேற்கு வங்கத்திலும் இது தொடர்பான பிரச்னை எழுந்தபோது, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு, “துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால், பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரையே வேந்தராக அறிவிப்போம்” என்று அதிரடி காட்டினார். கேரளாவிலும் கடந்த டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான வேந்தரின் அதிகாரம் பறிக்கப்பட்டு, முழு அதிகாரமும் மாநில அரசுக்கே மாற்றி சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

“ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும்!” - வழிகாட்டிய மகாராஷ்டிரா... பின் தொடரும் தமிழகம்...

இதையடுத்துத்தான், ‘‘பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரத்தை தி.மு.க மறுவரையறை செய்ய வேண்டும்’’ என்று விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் குரல் உயர்த்தத் தொடங்கின. இந்த நிலையில், ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் `இதற்கான தீர்மானம் வருகிற மார்ச் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்படும்’ என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது பற்றிப் பேசிய ம.நீ.ம மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ‘‘பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அதிகாரம், அரசியல் சாசனத்தின் மூலம் வழங்கப்பட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், மாநில அரசின்கீழ் உள்ள பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி, நாம் வழங்கிய அதிகாரம் அது. மாநில அரசு விரும்பினால் இந்தச் சட்டத்தைத் திருத்தி, ஆளுநரின் அதிகாரத்தை மறுவரையறை செய்யலாம். இதைத்தான் மகாராஷ்டிரா அரசு செய்திருக்கிறது. மாநில சுயாட்சி பேசும் தமிழகம்தான், நாட்டிலேயே முதல் மாநிலமாக இதைச் செய்திருக்க வேண்டும். இப்போது ஸ்டாலினின் அறிவிப்பு தாமதமானதுதான் என்றாலும் வரவேற்கக்கூடியதே. இதேபோல மாநிலத்தின் மற்ற துறைகளில் இருக்கும் ஆளுநரின் அதிகாரத்தையும் மறுவரையறை செய்ய வேண்டும்’’ என்றார்.

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நம்மிடம், ‘‘முதல்வரின் இந்த அறிவிப்பால், நீண்டகாலமாக மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்றுவந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. இனிமேல் மொழி தெரியாத சூரப்பா போன்ற பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்படுவது தடுக்கப்படும். தி.மு.க செய்திருக்கும் வரலாற்றுக் கடமை இது’’ என்றார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘‘கல்வியைத் தொடர்ந்து வியாபாரமாக்கி, ஊழல் செய்து கொழுத்தவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக் கிறார்கள். சமீபத்தில்கூட உயர் நீதிமன்றமே சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்கலைக்கழகங் களில் ஊழல் நடந்திருப்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட அரசுகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும், கட்சியினரையும் பல்கலைக்கழகங்களில் புகுத்தி கொள்ளை அடித்ததைக் கண்கூடாகப் பார்த்தோம். இந்த நிலையில், ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு அதிகாரத்தை மாற்றுவது மேன்மேலும் ஊழல் பெருகுவதற்கே வழிவகுக்கும். இந்த முடிவை பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்றார் கொந்தளிப்புடன்.

செந்தில் ஆறுமுகம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி
செந்தில் ஆறுமுகம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி

கல்வி தொடர்பான விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் ‘அரசியல்’ செய்யாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டால் இது போன்ற விவாதங்களே தேவையில்லை!