Published:Updated:

மஹாராஷ்டிரா: பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் - ராஜ் தாக்கரேவுடன் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை!

சந்திரகாந்த் பாட்டீல்
சந்திரகாந்த் பாட்டீல்

மஹாராஷ்டிராவில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து நவநிர்மாண் சேனாவுடன் மஹாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மஹாராஷ்டிராவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலத்தில் பெரும்பாலான மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இம்முறை சிவசேனாவிடமிருந்து மும்பையைப் பறித்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இவ்வளவு நாளும் சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி வைத்திருந்தன.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

இப்போது இரு கட்சிகளும் தனித்தனியாகப் பிரிந்துள்ளன. சிவசேனா அணியில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் பாஜகவிடம் இப்போது சொல்லிக்கொள்ளும்படியான கட்சிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இதனால் கூட்டணியில் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை சேர்க்கலாமா என்பது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஒரு முறை நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனாலும் ராஜ்தாக்கரே வட இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். மும்பையில் வட இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனர். எனவே ராஜ்தாக்கரே இவ்விவகாரத்தில் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இது குறித்து மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மும்பையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ராஜ்தாக்கரே கட்சியை சேர்ந்த சிலரும் இடம் பெற்று இருந்தனர்.

Vikatan

இச்சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த சந்திரகாந்த் பாட்டீல்," அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் பாஜகவும் நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இல்லை. அது போன்ற ஒரு திட்டமும் இல்லை. ராஜ்தாக்கரே வேலை வாய்ப்புக்களில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார். அதோடு தான் உத்தரப்பிரதேசம் மற்றும் வேறு சில மாநிலங்களுக்கு சென்றாலும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என சொல்வேன் என்று என்னிடம் தெரிவித்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வட இந்தியர்களுக்கு எதிராக அவர் சில கருத்துக்களைன் இதற்கு முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் என்னிடம் பேசிய பிறகு இனி மராத்தியர்களுக்காக மட்டுமே குரல் கொடுப்பேன் என்றும், வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசமாட்டேன் என்று தெரிவித்தார்" என்றார். ராஜ்தாக்கரேவுக்கு மகாராஷ்டிராவில் நகரங்களில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ராஜ்தாக்கரேயின் தயவு பாஜகவிற்கு தேவையாக இருக்கிறது. எனவேதான் பாஜக இப்போது ராஜ்தாக்கரேயிடம் இறங்கி வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவிற்கு பெரிய அளவில் மகாராஷ்டிராவில் செல்வாக்கு கிடையாது. சிவசேனாவின் முதுகில்தான் ஏறி சவாரி செய்து கொண்டிருந்தது. இப்போது சிவசேனா இறக்கிவிட்டு விட்டதால் சவாரிக்கு பாஜக வேறு ஆள் தேடிக்கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு