Published:Updated:

`மீண்டும் துணை முதல்வர்; அமைச்சர் ஆதித்ய தாக்கரே!’ - விரிவாக்கம் செய்யப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சரவை

தாக்கரே - அஜித் பவார்
தாக்கரே - அஜித் பவார்

மகாராஷ்டிராவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அமைச்சரவையில் அஜித் பவார் துணை முதல்வராகவும், ஆதித்ய தாக்கரே அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கு நடந்த அரசியல் மாற்றம், பிரச்னை போன்றவற்றை அறிந்திராதவர்கள் யாரும் இருக்க முடியாது. அங்கு பா.ஜ.க - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற, அடுத்ததாக அவர்களுக்குள் பதவி மோதல் தொடங்கியது. இருவரும் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என நினைத்தனர். அதனால் மகாராஷ்டிராவின் அரசியலே தலைகீழானது.

பா.ஜ.க பதவியேற்பு
பா.ஜ.க பதவியேற்பு

பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது. இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைவதற்குள் முந்திக்கொண்ட என்.சி.பி-யின் சட்டமன்றத் தலைவராக இருந்த அஜித் பவார், தன்னிடமிருந்த எம்.எல்.ஏ-க்கள் கடிதத்தைக் காட்டி பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்தார். மீண்டும் ஒரே இரவில் அனைத்தும் மாறி, விடிவதற்குள் பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியும் ஏற்றுக்கொண்டனர்.

மீண்டும் துணை முதல்வராகும் அஜித் பவார்? - நிர்வாகிகளிடம் முணுமுணுத்த சரத்பவார்

அஜித் பவாரின் செய்கை சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியது. பின்னர் இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து தற்போது மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பணியாற்றி வருகிறார். கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட அஜித் பவார் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரிடமிருந்த சட்டமன்றத் தலைவர் பதவி மட்டும் பறிக்கப்பட்டது.

சரத் - அஜித் ப்வார்
சரத் - அஜித் ப்வார்

இந்த நிலையில் இன்று, சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் ஒரு முறை துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார் அஜித் பவார். கடந்த மாதம் 28-ம் தேதி மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டார், அவருடன் 6 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றுக்கொண்டனர். அங்கு சிவசேனா ஆட்சி தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் இன்று மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில்தான் அஜித் பவார் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரைத் தவிர்த்து முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றுள்ள முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 29 வயதான ஆதித்ய தாக்கரேவும் இன்று அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். இவருடன் சேர்த்து மொத்தம் 36 அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி. நிதி, உள்துறை போன்ற முக்கியப் பதவிகள் தேசியவாத காங்கிரஸுக்கும், சபாநாயகர் பதவி காங்கிரஸுக்கும் ஆதித்ய தாக்கரேவுக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

இன்று பதவியேற்றுள்ள 36 அமைச்சர்களில் 26 பேருக்கு துறை ரீதியிலான பொறுப்பும் 10 பேர் இணை அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் 3 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் என்.சி.பி எம்.பி சுனில் தட்கரேவின் மகள் அதிதி தட்கரே. இவரும் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு