Published:Updated:

மகாராஷ்டிரா: சமரச முயற்சி தோல்வி; அரசு இல்லத்தை காலி செய்த முதல்வர் உத்தவ் தாக்கரே!

உத்தவ் பெட்டிகள் எடுத்துச்செல்லப்படுகின்றன

மகாராஷ்டிரா அரசியலில் நடக்கும் குழப்பங்களுக்கு இடையே முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அரசு இல்லத்தை காலிசெய்துவிட்டு, சொந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

மகாராஷ்டிரா: சமரச முயற்சி தோல்வி; அரசு இல்லத்தை காலி செய்த முதல்வர் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா அரசியலில் நடக்கும் குழப்பங்களுக்கு இடையே முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அரசு இல்லத்தை காலிசெய்துவிட்டு, சொந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

Published:Updated:
உத்தவ் பெட்டிகள் எடுத்துச்செல்லப்படுகின்றன

மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சிவசேனாவிலிருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேயுடன் உத்தவ் தாக்கரே நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அரசு எந்நேரமும் கவிழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு ஃபேஸ்புக் லைவ் மூலம் உத்தவ் தாக்கரே உணர்ச்சிபூர்வமாக மக்களுக்கு உரையாற்றினார். இதில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது அரசு இல்லமான வர்ஷாவிலிருந்து நேற்று இரவே குடும்பத்தோடு காலி செய்துவிட்டு பாந்த்ராவிலுள்ள சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லத்துக்குச் சென்றுவிட்டார். பெரிய பெரிய பெட்டிகள் வர்ஷா இல்லத்திலிருந்து காருக்கு எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. உத்தவ் தாக்கரேயின் பாந்த்ரா வீட்டுக்கு வெளியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் காத்திருந்து உத்தவ் தாக்கரேயை வரவேற்றனர். உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் இரவோடு இரவாக அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு சொந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா ஆளுநரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஏக்நாத் ஷிண்டே தனக்கு 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி கடிதம் அனுப்பியிருக்கிறார். அவர்களில் 30 பேர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். நேற்று இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேயைச் சந்தித்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தார். இதில் ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணிவைக்கக் கூடாது என்று ஏக்நாத் ஷிண்டே கூறுவதால் இந்தத் திட்டம் சாத்தியமில்லை என முடிவு செய்யப்பட்டு கைவிடப்பட்டது. இதற்கு முன்பு சிவசேனாவிலிருந்து தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சகன் புஜ்பால், ராஜ் தாக்கரே, மத்திய அமைச்சர் நாராயண் ராணே ஆகியோர் விலகியிருக்கின்றனர். இதில் ராஜ் தாக்கரே விலகும்போது மட்டும் சிவசேனா தொண்டர்கள் சிலர் ராஜ் தாக்கரே பக்கம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism