Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: `ராமர் பெயரில் மோசடி சக்திகள் பணம் வசூலிக்கின்றன!’- உத்தவ் தாக்கரே காட்டம்

சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செய்யும் உத்தவ் தாக்கரே
சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செய்யும் உத்தவ் தாக்கரே

மோசடி சக்திகள் ராமர் பெயரில் பணம் வசூலிப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, இந்து அமைப்புகள் நாடு முழுவதும் ராமர் கோயில்கட்ட நிதி வசூலித்துவருகின்றன. இது தவிர அயோத்தி ராமர் கோயில் டிரஸ்ட், ஆன்லைன் மூலமும் பணம் வசூலித்துவருகிறது. பா.ஜ.க-வினர் வீடு வீடாகச் சென்று பணம் வசூலித்துவருகின்றனர். இது பல்வேறு மட்டங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ்தாக்கரே தனது கட்சியினரை எச்சரித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பேசுகையில் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். ``ராமர் பெயரில் மோசடி சக்திகள் பணம் வசூலித்துக்கொண்டிருக்கின்றன.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனா தொண்டர்கள், மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்று பா.ஜ.க-வை உத்தவ் தாக்கரே மறைமுகமாகச் சாடினார். ``பிரச்னைகளைச் சந்திக்கும் சாமானிய மக்கள் சிவசேனாவிடம் வருகின்றனர். கட்சிக்கும் பொதுமக்களுக்கும் உள்ள உறவைப் பராமரிப்பது அவசியம். சிவசேனா கூட்டணி அரசின் சாதனைகள் குறித்து கட்சித் தொண்டர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து அரசிடம் தெரிவிக்க வேண்டும். கட்சியை வளர்க்க சிவசேனா சார்பில் வரும் 22-27-ம் தேதி வரை மக்களைச் சென்றடையும் `சிவ் சம்பர்க்’ பிரசாரம் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார். வரும் 1-ம் தேதி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களைப் பகுதிவாரியாகச் சந்தித்துவருகிறார். உத்தவ் தாக்கரே, அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களின் குறைகள், தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்துக் கேட்டுவருகிறார்.

குஜராத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சிவசேனாவுக்குச் சவால்விடத் துணிந்துவிட்டார்! - உத்தவ் தாக்கரே

சிவசேனாவும், பா.ஜ.க-வும் கடந்த 2019-ம் ஆண்டு வரை கூட்டணிக் கட்சிகளாகத்தான் இருந்தன. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணி உடைந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் துணையோடு சிவசேனா ஆட்சியமைத்திருக்கிறது. சிவசேனாவின் ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்காத காரணத்தால் தற்போது பா.ஜ.க அமைதியாக இருக்கிறது.

பா.ஜ.க கொடி
பா.ஜ.க கொடி

தற்போது ஒவ்வொரு வீடாகச் சென்று ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவதன் மூலம் மக்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற திட்டத்துடன் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டிவருகிறது. மார்க்கெட்டுகளில் ராமர் படத்துடன், `கோயில் கட்ட நிதி கொடுங்கள்’ என்று கூறிக்கொண்டு ஏராளமானோர் வந்துகொண்டிருக்கின்றனர். ராமர் கோயிலுக்கு நிதி கேட்டு கொடுக்காதவர்கள் வீடுகளில் பிரத்யேக எழுத்துகளை எழுதிவைத்துச் செல்வதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு