Published:Updated:

"கொரோனா; உச்ச நீதிமன்றம் தேசிய இணை அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்" - மகாராஷ்டிர காங்கிரஸ் கோரிக்கை

நானா பட்டோலே
நானா பட்டோலே

கொரோனாவைக் கையாள உச்ச நீதிமன்றம், தேசிய இணை அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டுள்ளது. ஆக்ஸிஜனை தேவைப்படும் மாநிலத்துக்கு மத்திய அரசு சரியாகப் பகிர்ந்து கொடுக்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆக்ஸிஜன் விநியோகத்தை நிர்வகிக்க பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற 12 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது.

நானா பட்டோலே
நானா பட்டோலே

ஆனால் மத்திய அரசு அந்த கமிட்டியுடன் ஒத்துழைக்க மறுத்துவருகிறது. மற்றொருபுறம் கொரோனா தடுப்பூசி போதிய அளவு கிடைக்காமல் மாநிலங்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. முதல் ஊசி போட்டவருக்கு இரண்டாவது ஊசிபோட மருந்து இல்லாமல் இருக்கிறது. அதோடு கொரோனா நோயாளிகள் படுக்கை கிடைக்காமலும், கொரோனா சிகிச்சை மருந்து கிடைக்காமலும் திண்டாடிவருகின்றனர். மகாராஷ்டிராவில் தடுப்பூசி பற்றாக்குறையால் 18-44 வயது வரையிலானவர்களுக்குத் தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா அளவும் படிப்படியாகக் குறைந்துவருகிறது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பூசியை வாங்க சர்வதேச அளவில் டெண்டர் அறிவிக்கவிருக்கிறது. மும்பை மட்டுமல்லாமல் பல்வேறு மாநில அரசுகளும் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிப்பதால் அவற்றால் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்ய முடியவில்லை.

இந்தநிலையில் ஆக்ஸிஜன் விநியோகத்தில் தலையிட்டது போன்று கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், மத்தியிலுள்ள நரேந்திர மோடி அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. சுப்ரீம் கோர்ட் ஆக்ஸிஜன் விநியோகத்தை நிர்வகிக்க கமிட்டி அமைத்தது போன்று கொரோனாவைக் கட்டுப்படுத்த, தேசிய இணை அரசை உருவாக்க வேண்டும். அரசியல் சாசனத்தில் அதற்கு இடமிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே உலக நாடுகள் இந்தியா கொரோனாவைக் கையாளும்விதத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில் மகாராஷ்டிரா காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு