Published:Updated:

மும்பை: ராகுல் காந்தி கூட்டத்துக்கு அனுமதி இல்லை?! - கூட்டணியில் இருந்தும் செக் வைக்கும் சிவசேனா

ராகுல் காந்தி
News
ராகுல் காந்தி

மும்பையில் ராகுல் காந்தியின் கூட்டத்துக்கு அனுமதி அளிக்காத உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக காங்கிரஸ், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மும்பையில் அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது. எனவே, வரும் 28-ம் தேதி தாதர் சிவாஜி பார்க்கில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் கூட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகமும், போலீஸாரும் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு மாநில அரசும், சிவசேனா ஆளும் மும்பை மாநகராட்சியும் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துவருகின்றன. இதனால் பொதுக்கூட்டத்துக்கான வேலைகளை உடனே தொடங்க முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதையடுத்து மும்பை காங்கிரஸ் கட்சி மாநில அரசுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு அக்டோபர் மாதமே மனு கொடுக்கப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்துக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை. எனவே, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப் இது குறித்துக் கூறுகையில், ``கூட்டத்துக்கு என்ன காரணத்துக்காக அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. கொரோனா விதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்போம் என்று உத்தரவாதம் அளித்துள்ளோம். அப்படியிருந்தும் இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை. கூட்ட ஏற்பாடுகளை கவனிக்க நேரம் இல்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்று தெரிவித்தார். பாய் ஜக்தாப் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் பிரதீப் தோரடிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ``காங்கிரஸ் கட்சி, சிவாஜி பார்க் மைதானத்தை வரும் 22-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டிருக்கிறது. காங்கிரஸ் தொடக்க நாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடத்த இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மும்பை உயர் நீதிமன்றம்
மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ``பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதா, வேண்டாமா என்பது குறித்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பிவிட்டோம். மாநில அரசுதான் இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். மாநில நிதியமைச்சரும், துணை முதல்வருமான அஜித் பவார் இது குறித்துக் கூறுகையில், ``கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்” என்று குறிப்பிட்டார். இதனால் காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.