Published:Updated:

மகாராஷ்டிரா: அஜித் பவார் தொடர்புடைய 1,000 கோடி ரூபாய் சொத்துகள்... செக் வைத்த வருமான வரித்துறை!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

மகாராஷ்டிரா துணை முதல்வராகச் செயல்பட்டுவருபவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருக்கு நெருக்கமான புனேயைச் சேர்ந்த கட்டுமான அலுவலகங்களில் சி.பி.ஐ ஏற்கெனவே ரெய்டு நடத்தியுள்ளது. கடந்த மாதம் 10-ம் தேதி வருமான வரித்துறையினர் அஜித் பவார் சகோதரிகளின் இல்லம், நிறுவனங்களில் ரெய்டு நடத்தினர். மும்பை, புனே, சதாரா, கோவா உட்பட 70 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இவற்றில் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 184 கோடி ரூபாய் அளவுக்குக் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். தன் சகோதரியின் இல்லங்களில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு அஜித் பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அஜித் பவார்
அஜித் பவார்

வருமான வரித்துறையினரின் நடவடிக்கைக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பாஜக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், இதற்கு நாங்கள் பயப்படமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய திருப்பமாக அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இதில் மும்பை நரிமன்பாயின்ட்டில் உள்ள நிர்மல் டவர், கோவாவில் உள்ள ரிசார்ட், டெல்லியில் உள்ள அலுவலகம், வீடு, மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலை உட்பட ஐந்து சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

`நான் வருத்தப்படுவதுபோல் தெரிகிறதா?!’ -செய்தியாளர் சந்திப்பில் கலகலத்த அஜித் பவார்

மேலும் மகாராஷ்டிரா முழுவதும் ரூ.500 கோடி மதிப்புள்ள 27 நிலங்கள் தற்காலிகமாக வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அஜித் பவார், அவரின் உறவினர்களின் பினாமிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர், பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அஜித் பவாரின் பெயரில் இல்லை. அவை அனைத்தும் அஜித் பவாருக்கு வேண்டப்பட்டவர்களின் பெயர்களில் இருந்தன என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் அதே கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சரத் பவாருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. சரத் பவார்தான் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு அமைய காரணமாக இருந்தார். இதனால் அவரின் கட்சியைக் குறிவைத்து மத்திய அரசு செயல்பட்டுவருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு