Published:Updated:

மகாராஷ்டிரா: `சமூக வலைதளங்களைக் கையாள ரூ.6 கோடி?!’ -கடும் எதிர்ப்பால் கைவிட்ட துணை முதல்வர்

அஜித் பவார்
அஜித் பவார்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது சமூக வலைதளங்களைக் கையாள தனியார் ஏஜென்சி ஒன்றை நியமித்து, அதற்கு ரூ.6 கோடி செலவிட திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சமூக வலைதளங்களைக் கையாள, ஏற்கெனவே தனியார் ஏஜென்சி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஏஜென்சிதான் முதல்வரின் அறிவிப்பு உட்பட அனைத்து விவரங்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும். அது போன்ற ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தனது சமூக வலைதளங்களைக் கையாள துணை முதல்வர் அஜித் பவார் முடிவு செய்திருந்தார். இது தொடர்பாக பொது நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி புதிதாக நியமிக்கப்படும் தனியார் ஏஜென்சி துணை முதல்வர் அஜித் பவாரின் ஃபேஸ்புக், பிளாக்கர், யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைக் கையாளும். இதற்காக ரூ.6 கோடி செலவிட திட்டமிடப்பட்டது. தனியார் ஏஜென்சி துணை முதல்வர் அஜித் பவாரின் செயலாளரிடம் கலந்து ஆலோசித்த பிறகு நியமனம் செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அஜித் பவார்
அஜித் பவார்

தற்போது அரசுத் துறையில் இது போன்ற சமூக வலைதளங்களைக் கையாள போதுமான தொழில்நுட்ப நிபுணர்கள் இல்லை. எனவேதான் வெளியிலிருந்து தனியார் ஏஜென்சியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. புதிதாக நியமிக்கப்படும் ஏஜென்சி, துணை முதல்வரின் சமூக வலைதளங்களில் துணை முதல்வரின் முக்கிய முடிவுகள் மற்றும் தகவல்களைப் பதிவேற்றம் செய்யும். ஏற்கெனவே அரசுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஏஜென்சிகளில் ஒன்றிலிருந்து இந்த ஏஜென்சி தேர்வு செய்யப்படும். முதல்வரின் சமூக வலைதளங்களைக் கையாளும் ஏஜென்சியே இந்தப் பணியையும் சேர்த்து செய்வதாக இருந்தால், அந்த நிறுவனத்துக்குக் கூடுதல் கட்டணம் கொடுக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், `பொது தகவல்துறைக்கு ஆண்டுக்கு 150 கோடி செலவிடப்படுகிறது. தேவையான ஊழியர்களும் இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது தனி ஏஜென்சி எதற்கு?’ என்று பொது தகவல்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஏற்கெனவே மகாராஷ்டிரா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அப்படியிருக்கும்போது இந்தச் செலவு தேவையா என்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜக எம்.எல்.ஏ ராம் கதமும் அரசின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடுமையான விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து துணை முதல்வர் அஜித் பவார் தனது சமூக வலைதளங்களைக் கையாள தனியார் ஏஜென்சியை நியமிக்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளார். `கொரோனா ஒழிப்பில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தேவையில்லாமல் இது போன்ற பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டாம்’ என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அஜித் பவார்  - உத்தவ் தாக்கரே
அஜித் பவார் - உத்தவ் தாக்கரே

சரத் பவாரின் உறவினரான அஜித் பவார், கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திடீரென பா.ஜ.க-வின் தேவேந்திர பட்நாவிஸுடன் இணைந்து அதிகாலையில் ஆட்சி அமைத்தார். ஆனால் அந்த ஆட்சி ஓரிரு நாள்கள் மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு