Published:Updated:

ஆளுநர் ஆட்டம்... அடுத்தது மகாராஷ்ட்ரா: உத்தவ் தாக்கரே பதவிக்கு ஆபத்தா?

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யேரி தற்போது புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்க முயல்கிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

`ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு’ என அறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்பதில் அவருடைய குரல் முதன்மையானது. அலங்காரப் பதவியான ஆளுநர் பதவி இந்தியாவில் பல நேரங்களில் அரசியல் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. தற்போது அந்த வரிசையில் மகாராஷ்ட்ராவும் இணைந்திருக்கிறது. மற்றொருபுறம் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இடையே வார்த்தைப் போர் அரங்கேறி வருகிறது.

அண்ணா
அண்ணா

ஆளுநர்களால் சமீப காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள்:  

2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதிவியிலிருந்து விலகி, அப்போது அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த சசிகலா முதல்வராகப் பதவியேற்க உள்ளார் என்று முடிவானது. ஆனால், அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் தமிழகத்தில் ஒரு வார காலம் பெரும் அரசியல் நெருக்கடி உருவானது.

2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக வந்த பா.ஜ.க ஆட்சி அமைக்க உரிமைகோரியது. பா.ஜ.க-வை ஆட்சியில் அமர விடாமல் தடுக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். உச்ச நீதிமன்றம் வரை சென்றது இந்தச் சர்ச்சை.

கடந்த 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ஜ.க - சிவசேனா கூட்டணி முறிந்தது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தன. இந்த இழுபறிகளுக்கிடையே திடீரென்று ஒருநாள் அதிகாலையிலே மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யேரி, தேவேந்திர ஃபட்னவிஸை முதல்வராகவும் அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், இரண்டு நாள்களுக்குள் ஃபட்னவிஸ் ராஜினாமா செய்ய, முறைப்படி உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றார்.

ஃபட்னவிஸ் அதிகாலை பதவியேற்பு
ஃபட்னவிஸ் அதிகாலை பதவியேற்பு

இவை மட்டுமல்லாது டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களிலும் துணை ஆளுநர், அரசாங்கம் இடையே தொடர் மோதல் ஏற்பட்டு நீதிமன்றங்கள் வரை சென்றது. கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலும் ஆளுநரின் பங்கு கடும் சர்ச்சைக்குள்ளானது. தற்போது மகாராஷ்ட்ராவில் மீண்டுமொரு புதிய அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் கோஷ்யேரி விதை போடத் தொடங்கியுள்ளார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த நவம்பர் 28-ம் தேதி மகாராஷ்ட்ரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராகவோ, சட்ட மேலவை உறுப்பினராகவோ இல்லை. மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை சட்டமன்றம், சட்ட மேலவை என்கிற இரு அவைகளைக் கொண்டது. அரசியலமைப்புச் சட்டப்படி சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல்வராகவே, அமைச்சராகவோ பதவியேற்க முடியும். அப்படி பதவியேற்ற ஆறு மாதத்துக்குள்ளாக ஏதாவதொரு அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். உத்தவ் தாக்கரே ஏதேனும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலைச் சந்தித்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படலாம், அல்லது சட்டமேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.

அஜித் பவார்  - உத்தவ் தாக்கரே
அஜித் பவார் - உத்தவ் தாக்கரே

மகாராஷ்ட்ரா சட்டமேலவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெறவிருந்தது. உத்தவ் தாக்கரேவை சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கும் முடிவிலிருந்தது சிவசேனா. கொரோனா நெருக்கடியைத் தொடர்ந்து அனைத்து தேர்தல்களும் ஒத்திவைக்கப்பட்டன. மே 28-ம் தேதியோடு உத்தவ் தாக்கரே பொறுப்பேற்று ஆறு மாதங்கள் முடியப்போகிறது. அதற்குள்ளாக அவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். சட்டமேலவை தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது, இடைத்தேர்தலையும் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்பதனால் உத்தவ் தாக்கரேவால் முதல்வராகத் தொடர முடியுமா என்கிற சட்ட சிக்கல் எழுந்தது.

இவை தவிர சட்டமேலவைக்கான நியமன உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கலாம். இரண்டு நியமன உறுப்பினர் பதவிக்காலம் காலியாக உள்ளது. இரண்டு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி-க்கள் ராஜினாமா செய்து பா.ஜ.க-வில் இணைந்தனர். இந்த இரண்டு இடங்களுக்கான பதவிக்காலம் ஜூன் 6-ம் தேதி முடிவடைகிறது.

இதனால் நெருக்கடிகளைத் தவிர்க்க உத்தவ் தாக்கரேவை ஆளுநர் நியமன உறுப்பினராக நியமிக்க வேண்டும் என மகாராஷ்ட்ரா அமைச்சரவை கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஆளுநருக்குப் பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரையின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திவருகிறார். இது மகாராஷ்ட்ராவில் புதிய புயலாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

“உத்தவ் தாக்கரே தேர்தலைச் சந்திக்காமல் காலம் கடத்திவிட்டு தற்போது ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது சரியில்லை” என மகாராஷ்ட்ரா பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். ``ஆளுநரின் பா.ஜ.க தொடர்புகள் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை” எனச் சிவசேனா எம்.பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

கோஷ்யேரி - உத்தவ் தாக்கரே
கோஷ்யேரி - உத்தவ் தாக்கரே

கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்ட்ரா. இத்தகைய நேரத்தில் ஆளுநரும் பா.ஜ.க-வும் மகாராஷ்ட்ரா அரசுக்கு நெருக்கடி தர முயலக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை ஆளுநர் முடிவெடுக்க காலதாமதம் ஏற்பட்டு அரசியல் நெருக்கடி ஏற்படுமானால், அதை எப்படி எதிர்கொள்வது எனவும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் உள்ளன.

மகாராஷ்ட்ரா அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் உரிய நேரத்தில் ஏற்றுக்கொள்வாரா அல்லது புதிய அரசியல் நெருக்கடி உருவாக்கப்படுமா... உத்தவ் தாக்கரேவால் முதல்வராகத் தொடர முடியுமா எனப் பல கேள்விகள் மகாராஷ்ட்ரா அரசியலில் தற்போதே வட்டமடிக்கத் தொடங்கிவிட்டன.

அடுத்த கட்டுரைக்கு