Published:Updated:

மகாராஷ்டிரா: 'அமைச்சர்கள் பலர் தங்களை முதல்வர்களாக நினைத்துக்கொள்கின்றனர் !’ - தேவேந்திர பட்னாவிஸ்!

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் அமைச்சர்கள் பலர் தங்களை முதல்வர்களாக நினைத்துக்கொள்கின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 18 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்படுவதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் விஜய் வடேதிவார் தெரிவித்தார். இதனால் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. தொடர்ந்து கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் தொற்று குறையவில்லை என்றும், அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு காரணம் முக்கிய முடிவுகளை யார் அறிவிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பமேயாகும். இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா எதிர்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், "மாநிலத்தில் ஒரு முதல்வர்தான் இருக்கிறார். ஆனால் முக்கிய முடிவுகளை அறிக்கக்கூடிய சூப்பர் முதல்வர்கள் பலர் இருக்கின்றனர்.

Fadnavis
Fadnavis

அமைச்சர் விஜய் அறிவித்த கட்டுப்பாடுகள் நீக்கம் தொடர்பான அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர்கள் பலர் தங்களை முதல்வர்களாக நினைத்துக்கொண்டு முக்கிய முடிவுகளை அறிவித்து விடுகின்றனர். எந்த ஒரு அரசிலும் கொள்கை முடிவுகளை முதல்வர் எடுப்பார். அல்லது முக்கிய முடிவுகளை தெரிவிக்க அமைச்சர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் இந்த அரசியில் முதல்வர் ஒரு திட்டம் குறித்து அறிக்கை வெளியிடும் முன்பாக அமைச்சர்களே அதனை அறிவித்து விடுகின்றனர். அமைச்சர்கள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். 'மகா விகாஸ் அகாடி' ஆட்சியில் இது போன்று நடப்பது இது முதல் முறையல்ல. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுபோன்று நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சம் ஏற்படுவதைத் தடுக்க முக்கியமான முடிவுகளை அறிவிக்கும்போது தெளிவாக அறிவிக்கவேண்டும். கொரோனாவால் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் மூடி மறைக்கப்படுகிறது. வேறு நோய் காரணமாக உயிரிழந்ததாக கூறி மறைத்து விடுகின்றனர். 40 சதவீத கொரோனா உயிரிழப்புகள் இது போன்று மறைக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் மற்ற நோய் மூலம் ஒரு சதவீதம் பேர் மட்டுமே உயீரிழந்ததாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிராவில் மட்டும் 40 சதவீதம் பிற நோயால் உயிரிழந்ததாக கணக்கு காட்டப்படுகிறது. நகரங்களில் கொரோனா இறப்புகள் மறைக்கப்படுகிறது. கிராமங்களில் அதை விட நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. கிராமங்களில் கொரோனா சோதனையே நடத்தப்படுவதில்லை" என்று குற்றம் சாட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு