Published:Updated:

மகாராஷ்டிர அரசை விடாமல் துரத்தும் பதவி மோதல்!- உத்தவ் தாக்கரேவுக்குப் புதிய தலைவலி

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்துள்ள மூன்று கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி தொடர்பான புதிய மோதல் உருவாகியுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடந்த நீண்ட அரசியல் பிரச்னை மற்றும் சர்ச்சைகளைத் தாண்டி இந்த மூன்று கட்சிகளும் இணைந்தன. தாங்கள் இணையும் போது, யாராலும் தங்கள் கூட்டணியை அசைக்கமுடியாது, என்ன நடந்தாலும் தாங்கள் முழுமையாக ஐந்து ஆண்டுகள் மகாராஷ்டிராவை ஆட்சி செய்வோம்’ என உறுதியாக அறிவித்தனர். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் தற்போது இந்தக் கூட்டணிக்குள் விரிசல் விழத்தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா கூட்டணி
மகாராஷ்டிரா கூட்டணி

கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் அங்குள்ள மொத்தம் 36 இலாகாக்களுக்கும் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவரும் ஒரே நாளில் பதவியேற்றுக்கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். என்னதான் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டாலும் அவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை இதில்தான் மூன்று கட்சிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

`40 : 60 ஃபார்முலா; ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்!'- மகாராஷ்டிர அரசியலில் என்ன நடக்கிறது?

முதன் முதலாக சிவசேனாவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே துறை ஒதுக்குவது தொடர்பாகப் போட்டி எழுந்தது. இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கும் போதே மறுபுறம், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில அமைச்சர்களுக்குத் துறை தொடர்பான போட்டி நடந்துள்ளது. இதனால் மூன்று கட்சித் தலைவர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். ஆட்சி தொடர்பான பிரச்னைகள் முடிந்து அனைத்தும் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும் போது தற்போது கூட்டணியில் மீண்டும் பெரிய பிரச்னை உருவாகி, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித்பவாருக்கு நிதி அல்லது உள்துறை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் துறைகள் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் காங்கிரஸின் பாலசாகேப் தோரட் ஆகியோருக்கு வழங்கப்படும் என முன்னதாக மூன்று கட்சிகளும் பேசி முடிவெடுத்துள்ளனர். தற்போது அதே துறையை என்.சி.பியும் கேட்பதால் சர்ச்சையாகியுள்ளது. மேலும், காங்கிரஸாருக்கு முன்னதாகப் பிற இரு கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி துறை ஒதுக்காததால் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

நள்ளிரவு மீட்டிங்; எம்.எல்.ஏ கடத்தல்?- உச்சக்கட்ட பரபரப்பில் மகாராஷ்டிரா அரசியல்

இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ சங்க்ராம் தோபாட்டின் ஆதரவாளர்கள் மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தைச் சூறையாடினர். பிரனிதி ஷிண்டே என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ தன் ரத்தத்தால் ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதிப் பரபரப்பை அதிகரித்தார். இலாகாக்கள் ஒதுக்குவதில் தொடர் மோதல் நடந்துவருகிறது. மேலும் அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு வெளியாவதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இது தொடர்பாகப் பேசியுள்ள என்.சி.பியின் மூத்த நிர்வாகி ஒருவர், ``மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் மற்றும் தாமதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக சிவசேனா- பா.ஜ.க இடையே மோதல் உருவானது. பிறகு சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அமைய பெரும் தாமதமானது. தொடர்ந்து முதல்வர் பதவியேற்பு, பிற அமைச்சர்கள் பதவியேற்பிலும் தாமதமானது. தற்போது அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்குவதிலும் தாமதம் நிலவுகிறது. முதலில் டிசம்பர் மாதமே இலாகாக்கள் ஒதுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. பின்னர், அது தாமதமாகி ஜனவரி 1-ம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. 1-ம் தேதியும் கடந்துவிட்டது. தற்போது மகாராஷ்டிராவின் அமைச்சரவை தொடர்பாக அறிவிப்பு எப்போது வெளியாகும் என அந்தக் கடவுளுக்கு மட்டுமே தெரியும்” என்று பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் பிரச்னை ஓய்ந்து கூட்டணிக்குள் புதிய பிரச்னை கிளம்பியுள்ளதால் மக்களும் கட்சித் தொண்டர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையில் தன் கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸையும் காங்கிரஸையும் சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ள விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு