Published:Updated:

ராஜ்ய சபா: மகாராஷ்டிராவில் பாஜக சக்சஸ்; சிவசேனா ஷாக்... கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா நிலவரம் என்ன?

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

ராஜ்ய சபா: மகாராஷ்டிராவில் பாஜக சக்சஸ்; சிவசேனா ஷாக்... கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா நிலவரம் என்ன?

மகாராஷ்டிராவில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா

நாடு முழுவதும் காலியான ராஜ்ய சபா இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள ஆறு இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜக மூன்று வேட்பாளர்களையும், சிவசேனா இரண்டு வேட்பாளர்களையும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு வேட்பாளரையும் நிறுத்தியிருந்தன. தேர்தலின்போது எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி ஓட்டுப் போட்டதாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியான பாஜக-வும் புகார் செய்தன. ஆளுங்கட்சி தரப்பில் போடப்பட்ட இரண்டு வாக்குகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் மூன்று வாக்குகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரின.

அதோடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனிடம் கேட்டுக்கொண்டனர். இதனால் வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் எட்டு மணி நேரம் தாமதமாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக மூன்று இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக தரப்பில் மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த தனஞ்சே மகாதிக் சிவசேனாவின் சஞ்சய் பவாரைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளருக்கு எதிர்பாராதவிதமாக 10 வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. இது தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியின் இம்ரான், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பாஜக சார்பில் பியூஸ் கோயல், அனில் போண்டே ஆகியோர் வெற்றிபெற்றனர்.

அஜய் மகான்
அஜய் மகான்

இந்தத் தேர்தல் முடிவு சிவசேனா கூட்டணிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. வரும் 20-ம் தேதி அந்த மாநிலத்தில் சட்டமேலவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலிலும் பாஜக கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. ராஜ்ய சபா தேர்தலுக்கு எம்.எல்.ஏ-க்களை நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைத்திருந்தும்கூட கட்சி மாறி பாஜக-வுக்கு வாக்களித்துள்ளனர் சிலர். சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் அதிக அளவில் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

கர்நாடகா

கர்நாடகாவில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றிபெற்றிருக்கின்றன. கர்நாடகாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட மூன்று பேர் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் வெற்றிபெற்றார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றனர். பாஜக தரப்பில் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றார். ஜீ டி.வி உரிமையாளர் சுபாஷ் சந்திரா பாஜக துணையோடு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஹரியானா

ஹரியானாவிலும் உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. பல மணி நேர தாமதத்துக்குப் பிறகு நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் மகான் வெற்றிபெற்றதாக காங்கிரஸ் சார்பாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஓட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக துணையோடு சுயேச்சையாகப் போட்டியிட்ட கார்திகேய சர்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது இடத்திலும் பாஜக-வே வெற்றிபெற்றது. நாடு முழுவதும் 57 ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவிகள் காலியாகின. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 11 இடங்கள் காலியாகின. இதில் 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய இடங்களுக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism