Published:Updated:

கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு குடியரசு தின அணிவகுப்பில் இடமில்லை... ஏன்?

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த 4 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு குடியரசு தின அணி வகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

அரசியலில் பல கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து வேறுபாடுகளை முன்வைத்து, அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பேதமை காட்டுவதாக பாரதிய ஜனதா அரசு மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி, டெல்லியில் குடியரசு தின அணி வகுப்பு பிரமாண்டமாக நடத்தப்படும். ராணுவத்தின் பல அம்சங்கள் இந்த அணிவகுப்பில் இடம் பெறுவது வழக்கம். மாநிலங்களின் கலாசாரங்கள் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் கலந்துகொள்ளும்.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்குகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், கோவா, குஜராத், இமாசலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமாக மாறியுள்ள ஜம்மு - காஷ்மீருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 மாநிலங்கள் பாரதிய ஜனதா கட்சியின் நேரடி அல்லது கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்கள். மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. மூன்று மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன.

சி.ஏ.ஏ. மற்றும் என். ஆர்.சி சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நான்கு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு குடியரசு தின அணி வகுப்பில் கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் மேற்கு வங்க அரசின் அலங்கார ஊர்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கொதித்து எழுந்த மேற்குவங்க முதல்வர் மம்தா, ``என்.ஆர்.சி சட்டத்துக்கு மேற்கு வங்கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், எங்கள் மக்களை அவமதிக்கும் வகையில் குடியரசு தின அணி வகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மேற்கு வங்கத்தை பழிவாங்குகிறது '' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து தருவதாக கூறி, பாரதிய ஜனதா கட்சி ஏமாற்றியது
ராஷ்ட்ரிய ஜனதா தளம்

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சியில் உள்ளார். எனினும், நிதிஷ்குமார் என் ஆர்.சி சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், பீகார் மாநிலத்துக்கும் குடியரசு தின அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் செய்தி தொடர்பாளர் மிர்த்யூன்ஜன் திவாரி கூறுகையில், ``முதலில் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்தது. பிறகு, அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டது. தற்போது, குடியரசு தின அணிவகுப்பில் எங்கள் மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது எங்கள் மக்களை அவமதிக்கும் செயல். மத்திய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது'' என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கும் குடியரசு தின அணி வகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. மகாராஷ்டிரத்தில் பாரதிய ஜனதா கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரியா சுலே பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

``மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் உள்ளது'' என்றும் சுப்ரியா குற்றம்சாட்டியுள்ளார்.

அணி வகுப்பில் பீரங்கிகள்
அணி வகுப்பில் பீரங்கிகள்

மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்துக்கும் குடியரசு தின அணி வகுப்பில் அலங்கார ஊர்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச்சட்டம் மற்றும் என்.ஆர்.சி சட்டங்களை கேரளத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்கமாக அறிவித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்தச் சட்டங்களை நீக்க வலியுறுத்தியும் கேரள சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, சிறுபிள்ளைபோல செயல்படுவதாக கேரளத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் , ``எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. மாநிலங்கள் அனுப்பிய விண்ணப்பங்களை கவனத்தில் கொண்டு தரமானவற்றுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பு என்பதற்கு புதிய விளக்கம் தருகிறதோ மத்திய அரசு?