Published:Updated:

மகாராஷ்டிரா: 'போலிச் சாதிச் சான்றிதழ் விவகாரம்; பெண் எம்.பி-க்கு ரூ.2 லட்சம் அபராதம்!'

நவ்நீத் கௌர்
நவ்நீத் கௌர்

மக்களவைத் தேர்தலில் போலிச் சாதிச்சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண் எம்.பி-க்கு மும்பை உயர் நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அதோடு அவரது பதவியும் பறிபோகவிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நவ்நீத் கௌர் ராணா. அமராவதி மக்களவைத் தொகுதி ரிசர்வ் தொகுதி. தன்னைப் பிற்படுத்தப்பட்டவர் என்று கூறி அதற்கான சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவர் போலியான சாதிச் சான்றிழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டிருப்பதாகக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நவ்நீத் கௌர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். பஞ்சாப்பில் உள்ள லபானா என்ற சாதியைச் சேர்ந்தவர். அந்தச் சாதி மகாராஷ்டிராவில் எஸ்.இ பிரிவில் வராது. ஆனால் சாதி சரிபார்ப்பு கமிட்டியில் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து தனது சாதிச் சான்றிதழுக்கு அங்கீகாரம் வாங்கிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

நவ்நீத் கௌர்
நவ்நீத் கௌர்

இதை ஆய்வு செய்த கோர்ட் நவ்நீத் கௌர் தாக்கல் செய்த சாதிச் சான்றிதழ் போலியானது என்று கண்டுபிடித்தது. இதையடுத்து அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலிச் சாதிச் சான்றிதழ் கொடுத்து ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டிருப்பதால் நவ்நீத் கௌர் பதவியும் பறிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இனி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து அங்கு உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வாங்கினால் மட்டுமே எம்.பி-யாகத் தொடர முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடிகையான நவ்நீத் கௌர் கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சிவசேனா எம்.பி அர்விந்த் சாவந்த் தன்னை பாராளுமன்ற வளாகத்தில், தன்னை சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டியதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

`இதற்கு முன்பும் எனக்கு சிவசேனா லெட்டர்ஹெட்டில் கொலை மிரட்டல் மற்றும் ஆசிட் வீசப்படும் என்று கூறி மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. என்னை அர்விந்த் சாவந்த் அவமானப்படுத்தியது இந்த நாட்டுப் பெண்கள் அனைவரையும் அவமானப்படுத்தியதற்குச் சமமாகும். எனவே, அர்விந்த் சாவந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரினார். நவ்நீத் கௌரின் கணவர் ரவி ராணாவும் அமராவதி மாவட்டத்தில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு