Published:Updated:

மகாராஷ்டிரா: அரசுக்கு எதிராகத் திரும்பிய அடுத்த போலீஸ் அதிகாரி - கடும் நெருக்கடியில் சிவசேனா அரசு!

மகாராஷ்டிரா பெண் போலீஸ் அதிகாரி ரேஷ்மி சுக்லா, போலீஸாரின் இடமாறுதலில் நடந்த முறைகேடுகளை பொதுவெளியில் குற்றச்சாட்டாகை தெரிவித்திருப்பது சிவசேனா அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தீவிரமாக முயன்றுவருகிறது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை, அதற்கொரு வழியாகப் பார்க்கிறது பா.ஜ.க. பாதுகாப்புக் குளறுபடியைத் தொடர்ந்து மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அடுத்த இரண்டு நாள்களில், மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், போலீஸ் அதிகாரிகளிடம் ஒவ்வொரு மாதமும் ரு.100 கோடி லஞ்சம் வசூலித்துக் கொடுக்கும்படி நிர்பந்தம் செய்ததாகக் கூறி பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதினார்.

இந்தக் குற்றச்சாட்டு மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க நிர்ப்பந்தம் செய்துவருகிறது.

பரம்பீர் சிங்
பரம்பீர் சிங்

முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தலைமையிலான பா.ஜ.க-வினர் மாநில ஆளுநர் கொசாரியாவைச் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில், மாநிலத்தில் புலனாய்வுப் பிரிவில் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த ரேஷ்மா சுக்லா, போலீஸ் அதிகாரிகளின் இடமாறுதலில் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புரோக்கர்களின் தலையீடு இருப்பதாகவும், அதில் பெரிய அளவு பணம் கைமாறுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, புரோக்கர்களும் போலீஸ் அதிகாரிகளும் போனில் பேசிய ரெக்கார்டை உளவு பார்த்துப் பதிவு செய்து ஆதாரமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையை ரேஷ்மி சுக்லா, டி.ஜி.பி ஜெய்ஸ்வாலுக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி அனுப்பிவைத்திருக்கிறார். ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி அந்த அறிக்கையை கூடுதல் உள்துறைச் செயலாளருக்கு அனுப்பிவைத்தார். அந்த அறிக்கை கிடைத்தவுடன் மாநில உள்துறை அமைச்சகம் என்ன காரணத்துக்காக டெலிபோன் உரையாடலைப் பதிவு செய்தீர்கள் என்று விளக்கம் கேட்டு சுக்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ரேஷ்மி சுக்லா
ரேஷ்மி சுக்லா

இதற்கு சுக்லா கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி, சுக்லாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ம் தேதி மிகவும் முக்கியத்துவம் இல்லாத சிவில் டிஃபென்ஸ் துறைக்கு மாற்றியது உள்துறை அமைச்சகம். இதனால் அதிருப்தியடைந்த சுக்லா அந்தப் பதவி பிடிக்காமல் மத்திய பணிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தார். உடனே கடந்த மாதம் 8-ம் தேதி சுக்லா மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இப்போது பரம்பீர் சிங் உள்துறை அமைச்சகம் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து சுக்லாவும் தனது புகார் குறித்துப் பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் புகார் பா.ஜ.க-வுக்கு வசதியாகப்போய்விட்டது. சுக்லா கொடுத்த அறிக்கை மீது முதல்வர் உத்தவ் தாக்கரே எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிவசேனா கட்சியின் நாளிதழான சாம்னாவில், வெளியாகியிருக்கும் தலையங்கத்தில்,`போலீஸ் அதிகாரிகள் பரம்பீர் சிங், ரேஷ்மி சுக்லா ஆகியோரைப் பயன்படுத்தி சிவசேனா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயன்றுவருகிறது. பா.ஜ.க எதற்காக இதையெல்லாம் செய்கிறது என்று மக்களுக்கு தெரியும். பரம்பீர் சிங் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே இது போன்ற ஒரு புகாரை மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சுமத்தியிருக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: ரூ 100 கோடி லஞ்சப் புகார்; தப்பித்த உள்துறை அமைச்சர் - ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சி

பரம்பீர் சிங் புகாரில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுக்க அழுத்தம் கொடுத்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். இதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் தெரிவித்துவிட்டனர். இதனால் பரம்பீர் சிங்குக்கும், பா.ஜ.க-வுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு