Published:Updated:

``பாஜக அரசு ஒரு யூ டர்ன் அரசு!” - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா
News
மஹுவா மொய்த்ரா

``2021-க்குள் வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு கூறியது. ஆனால், இன்றுவரை வயது வந்தோர் மக்கள்தொகையில் 48% பேருக்கு மட்டும்தான் இந்த அரசு தடுப்பூசி செலுத்தியுள்ளது. அதாவது 50% கூட இல்லை.”

நேற்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் கொரோனா தொடர்பாகப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, ``இந்திய அரசு யூ டர்ன் அரசாக மாறிவிட்டது. நாங்கள் இரும்பைப் போன்றவர்கள் என்றவர்கள், இப்போது யூ டர்ன் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனியும் அமைதியாக இருந்தால் மூழ்கிவிடுவோம் என்ற கட்டத்தை எட்டிய பிறகுதான் நீச்சலடிக்கலாம் என்ற எண்ணத்துக்கே இந்த அரசு வந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 4.7 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள் என அரசு கூறுகிறது. ஆனால், உண்மைநிலை இதைவிட 10 மடங்கு அதிகம். 40 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

விவசாய மரணங்கள் குறித்துத் தங்களிடம் எந்தத் தரவும் இல்லை என நேற்று இந்த அரசு கூறியது. இதற்கு முன்பு தங்களிடம் புலம்பெயர் தொழிலாளர் மரணம் குறித்துத் தரவுகள் இல்லை என்று கூறியிருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த தகவல்களும் இல்லை எனக் கூறியிருக்கிறது. அதனால், அரசு சொல்லும் எண்ணிக்கையை நாம் எடுத்துக்கொள்வதைவிட அதிகாரபூர்வமற்ற எண்ணிக்கையையே நாம் எடுத்துக்கொள்ளலாம்” என்றவர் தொடர்ந்து, ``கொரோனாவின் தொடக்க காலத்தில் இந்த அரசு தட்டுகளைத் தட்ட சொன்னது, விளக்குகளை ஏற்றச் சொன்னது. ஆனால், தடுப்பூசி விஷயத்தில் செய்யவேண்டியதைச் செய்யத் தவறியது.

90 கோடி மக்கள்கொண்ட இந்தியாவுக்கு 200 கோடி தடுப்பூசிகள் தேவை. ஆனால், இதை இந்த அரசு உணரவே இல்லை. உற்பத்தியைத் தொடங்க தாமதம் செய்தது. 2020 மத்தியில் டிசம்பருக்குள் 90 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்துவிடுவோம் என அரசு கூறியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தங்களால் 50 கோடி தடுப்பூசிகளை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நூறு கோடி மக்களுக்கு இந்த அரசு தடுப்பூசி செலுத்தியுள்ளது. சந்தோஷம்தான். ஆனால், இது யாரால் சாத்தியமானது... இந்த அரசாங்கத்தாலா? இல்லை… நிச்சயம் இல்லை. கோவிஷீல்டு, தனது உற்பத்தியை அதிகப்படுத்தியது. மாதத்துக்கு 24 கோடி குப்பிகளை அவர்கள் தயாரித்தனர். அதனால்தான் இது சாத்தியமானது.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

2021-க்குள் வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு கூறியது. ஆனால், இன்றுவரை வயது வந்தோர் மக்கள்தொகையில் 48% பேருக்கு மட்டும்தான் இந்த அரசு தடுப்பூசி செலுத்தியிருக்கிறது. அதாவது 50%கூட இல்லை.

முதல் தவணை தடுப்பூசி வயது வந்தோர் மக்கள்தொகையில் 81% பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் இலக்கை அடைய நாள் ஒன்றுக்கு 18 முதல் 19 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால். 9 மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது” என்று கூறினார்.

மேலும் அவர், ``தடுப்பூசிக் கொள்கையில் மட்டும் இந்த அரசு இதுவரை மூன்று முறை யூ டர்ன் அடித்திருக்கிறது” என்றார்.

``பாஜக அரசு ஒரு யூ டர்ன் அரசு!” - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா

மேலும், ``45 வயதுக்குக் கீழ் உள்ளோர் தடுப்பூசிக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று முதலில் கூறியது. ஆனால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டவுடன் இதிலிருந்து பின்வாங்கியது. பின்னர், தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி கட்டணங்களை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்றது. பின்னர் பின்வாங்கியது. தடுப்பூசிக்கு மத்திய அரசைவிட மாநில அரசே அதிகமாக நிதி கொடுக்க வேண்டும் என்றது. அதிலிருந்தும் பின்வாங்கியது” என்றார்.

``கொரொனா பரவலுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அரசை மட்டுமே குற்றம்சாட்ட முடியாது. ஆனால், இதற்கு முன் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாகுறை ஏற்பட்டதில்லை. 700 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர். இரண்டாம் அலையின்போது பிரதமர் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் இருந்தார். உத்தராகண்ட்டில் கும்பமேளா நடைபெற்றுக்கொண்டிருந்தது“ என்றார் மஹுவா.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

மேலும், ``2021 தொடக்கத்தில் இந்திய் பிரதமர் டாவோஸில் பேசியபோது `இந்தியா வெற்றிகரமாக கொரோனாவை கட்டுப்படுத்தியது’ என்றார். பிப்ரவரியில் பா.ஜ.க கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காகப் பிரதமரை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், என்ன நடந்தது?” எனக் கேள்வி எழுப்பினார் மஹுவா மொய்த்ரா.

மஹுவா பேசிக் கொண்டிருக்கும்போதே அவைக்குத் தலைமை தாங்கிய ராஜேந்திர அகர்வால் குறுக்கிட்டு, நேரம் கருதி உரையை முடிக்கச் சொன்னார். ஆனால், மஹூவா தொடர்ந்து பேச முயன்றார். இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது!