Published:Updated:

`போட்டியிட வாய்ப்பும் கிடைக்கல; பதவியும் கிடைக்கல!'- ஜெயலலிதா சமாதியில் கொந்தளித்த மைத்ரேயன்

பிரேம் குமார் எஸ்.கே.

`ஜெயலலிதா ஆட்சி தற்போது நடக்கிறதா என்று கேள்வி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை தமிழக மக்கள் தக்க நேரத்தில் தெரிவிப்பார்கள்.'

ஜெயலலிதா சமாதியில் மைத்ரேயன்
ஜெயலலிதா சமாதியில் மைத்ரேயன்

மூன்று முறை ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த மைத்ரேயனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. மாநிலங்களவையில் அவர் உருக்கமாகப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், அவர் டெல்லியிலிருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.

மாநிலங்களவையில் கண்கலங்கி பேசிய மைத்ரேயன்
மாநிலங்களவையில் கண்கலங்கி பேசிய மைத்ரேயன்

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் இன்று அஞ்சலி செலுத்திய மைத்ரேயன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``கடந்த 14 ஆண்டுகளாக டெல்லியில் ஜெயலலிதாவின் குரலாக ஒலித்தேன். டெல்லியில், ஜெயலலிதா சொல்லும் பணிகளை சிறப்பாகச் செய்தேன்.

தமிழக எம்.பி-க்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. டெல்லியில் எங்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அதை முடித்துக்கொண்டு நேற்று இரவே சென்னை திரும்பினேன். முதல் வேலையாக எனக்கு வாய்ப்புகள் தந்து என்னை உயர்த்திப் பிடித்த ஜெயலலிதாவுக்கு எனது நன்றியை காணிக்கையாக்க வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்தேன்.

`போட்டியிட வாய்ப்பும் கிடைக்கல; பதவியும் கிடைக்கல!'- ஜெயலலிதா சமாதியில் கொந்தளித்த மைத்ரேயன்

இலங்கை பிரச்னையில் இரங்கல் தெரிவிக்காத நாடாளுமன்றத்தில், எனது மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்க கூடாது என்று திடீரென சொல்லவில்லை. 2009-ம் ஆண்டில் இருந்தே தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறேன். அங்கு போர் முடிவுக்கு வந்த பிறகுகூட தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். நேற்று கடைசி உரை என்பதால் மீண்டும் ஒருமுறை அதைச் சொன்னேன்” என்றார்.

`நேற்று நீங்கள் பேசும்போது மாநில அரசியலில் எனக்கு சூரியோதையம் இருக்கும் என்றீர்கள். இது நீங்கள் தி.மு.க-வில் இணைப்போவதாக யூகங்களைக் கிளப்பியுள்ளது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்' என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைத்ரேயன், ``யூகங்கள் யூகங்களாகவே இருக்கட்டும். நேற்று ஓய்வுபெற்று சென்னை வந்திருக்கிறேன். ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தியிருக்கிறேன். கழகத்தின் செயல்பாட்டை கருத்தில் கொள்வேன்” என்றார்.

ஜெயலலிதா சமாதியில் மைத்ரேயன்
ஜெயலலிதா சமாதியில் மைத்ரேயன்

`உங்களின் எதிர்கால அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ``களத்தில் இருந்து தொடர்ந்து போராடுவேன்” என்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் உங்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்தவர், ``இது குறித்து நான் இப்போது பேச விரும்பவில்லை.

`இனி, அவரின் பாடலை மிஸ் பண்ணுவோம்' - மாநிலங்களவையில் கலங்கிய மைத்ரேயன், டி.ராஜா!

மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் நான் போட்டியிட விரும்பினேன். ஆனால், எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ஜெயலலிதாவால் மாநிலங்களவையில் மூன்று பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவன். அதில் ஒரு பதவியாவது கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்கும் நிச்சயமாக இருக்கிறது” என்றார்.

ஜெயலலிதா சமாதியில் மைத்ரேயன்
ஜெயலலிதா சமாதியில் மைத்ரேயன்

தொடர்ந்து, ``ஜெயலலிதா ஆட்சி தற்போது நடக்கிறதா என்று கேள்வி கேட்கிறீர்கள். இதற்கான பதிலை தமிழக மக்கள் தக்க நேரத்தில் தெரிவிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருமே ஜெயலலிதாவின் பிரசாரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்த வகையில் ஜெயலலிதாவின் ஆட்சிதான் நடக்கிறது” என்றார்.

அ.தி.மு.க-வில் இருக்கிறவர்கள் தி.மு.க-வுக்கு வரணும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மைத்ரேயன், ``அது அவரின் நிலைப்பாடு. இதற்கான பதிலை எங்களின் தலைமைதான் சொல்ல வேண்டும்” என்றார்.

``ஒற்றைத் தலைமை இரட்டைத் தலைமை என இரண்டிலும் சாதக பாதகங்கள் இருக்கிறது. இரட்டைத் தலைமை இருந்தாலும் சிறந்த முறையில் செயல்படலாம்.
மைத்ரேயன்

இறுதியாக, ``எனது எம்.பி பணி முடிந்ததையடுத்து சமாதியில் நன்றி காணிக்கை செலுத்த வந்தேன். மற்றதை வேறு ஒருநாள் பேசுவோம். தி.மு.க-வை நான் விமர்சிக்க தயங்கியதே கிடையாது. மாநில அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறேன்” என்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு மைத்ரேயன் சொல்லியிருக்கும் கருத்துகள் அ.தி.மு.க-வுக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan