Published:Updated:

`என் அன்பு என்னவென்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும்!’ - கமல்ஹாசன்

கமல்ஹாசன்
கமல்ஹாசன் ( ராகேஷ் பெ )

``நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் இல்லை, பழிவாங்கும் அரசியலும் இல்லை. வழிகாட்டும் அரசியலாக இருக்க வேண்டும் என்று நம்பி நகர்ந்துகொண்டிருக்கிறோம்’’ - கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று தியாகராய நகரிலுள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகள், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்கள்...

``மூன்றாவது அணிக்கான தலைமை என்று கூறுகிறீர்கள். ஆனால், `ஒரே கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி, தற்போதுள்ள சூழலில் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொல்லவில்லை. திராவிடம் என்பது தேசியகீதம் இருக்கும்வரை இருக்கும். கழகங்களுடன் கூட்டணி இல்லை’ என்று கூறியிருக்கிறீர்கள். இப்படி நீங்கள் கருத்துகளை மாற்றி மாற்றி கூறிவருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா?"

``இதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல என்று நான் நினைக்கிறேன். எங்கள் கட்சியின் கட்டமைப்பை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் யாத்திரையின் முன்னேற்றத்தையும் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்கள், விழுக்காடுகளை வைத்துப் பார்க்கையில், நாங்கள்தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி."

``மூன்றாவது அணி அமைக்கப்போகிறீர்களா.?’’

``அமைந்துவிட்டது என்றுதான் கூறுகிறேன். கூட்டணிவைப்பது என்பது நல்லவர்களின் கூட்டணியாக இருக்கும். அப்படியென்றால், வேறு எந்தக் கட்சியிலும் நல்லவர்களே இல்லையா என்று கேட்டால், கண்டிப்பாக இருக்கிறார்கள். அப்படியான நல்லவர்கள் கூட்டணி அமையும்போது, மக்கள் நீதி மய்யம் முதல் அணியாக இருக்கும். நல்லவர்கள் வேறு கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மனம் வெம்பி, நொந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கட்சிக்கு வர வேண்டும் என்ற அழைப்பாகக்கூட இதை எடுத்துக்கொள்ளலாம்."

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
ராகேஷ் பெ

``கழகங்களோடு கூட்டணி இல்லை என்றபட்சத்தில், பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா?"

``நல்லவர்களோடு மட்டும்தான் கூட்டணி என்று கூறியிருக்கிறேன். கட்சிகளுடன் கூட்டணி என்பதை, இந்த நேரத்தில், இவ்வளவு அவசரமாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை எங்கள் கட்சித் தொண்டர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது கூட்டணி குறித்துப் பேசும் தருணம் இல்லை.’’

``உங்கள் கட்சி, சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க-வின் குறைகளைச் சொல்லி வாக்குக் கேட்கும். அ.தி.மு.க., தான் செய்ததைச் சொல்லி வாக்குக் கேட்கும். மக்கள் நீதி மய்யம் எதை மையமாகக்கொண்டு வாக்குச் சேகரிக்கும்? வரும் தேர்தலில் உங்கள் கட்சியின் யுக்தி என்னவாக இருக்கும்?’’

``இந்தக் கேள்விக்கு நான் சொல்லப்போகும் பதில், ஏற்கெனவே ஒருவர் சொல்லியிருக்கும் பதில்தான். உங்களின் அரசியல் யுக்தி என்னவென்று காந்தியடிகளிடம் கேட்டபோது, `நேர்மைதான்’ என்று கூறினார். மக்கள் நீதி மய்யத்தின் யுக்தியும் நேர்மைதான். சமமான கட்சி, சரித்திரம் படைத்த கட்சி என்றும் கூறுபவர்கள், மனசைத் தொட்டு அல்லது மக்கள் நம்பும்படி, எங்களுடைய யுக்தியும் நேர்மைதான் என்று சொல்லட்டுமே பார்க்கலாம். நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் இல்லை, பழிவாங்கும் அரசியலும் இல்லை. வழிகாட்டும் அரசியலாக இருக்க வேண்டும் என்று நம்பி நகர்ந்துகொண்டிருக்கிறோம்."

``160 தொகுதிகளில் வெல்வதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறியிருந்தீர்கள். இது எந்தப் புள்ளிவிவரங்கள், கள ஆய்வு அடிப்படையில் கூறப்பட்டது?"

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கட்சி நிர்வாகி முருகானந்தம், ``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வாங்கிய வாக்குகளின் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்க்கையில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது தெரியவருகிறது. அதனடிப்படையில்தான் கூறப்பட்டது" என்று கூறினார்.

"ம.நீ.ம கட்சிக்கு 3ம் அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டது"- கமல்... மக்கள் கருத்து? #VikatanPollResults

``கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டதா?"

``வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி விட்டது. அதை அறிவிக்கும் நாள்தான், நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கும் நாள்."

``தமிழகத்தின் பெரிய கட்சிகளோடு நீங்கள் கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல்கள் கிடைக்கின்றனவே..?"

``உங்களுக்குத் தகவல் சொன்னது யார் என்று சொல்லுங்கள்... ஏனென்றால், எனக்கு அவர் அந்தத் தகவலைச் சொல்லவில்லை. நான்தான் இந்தக் கட்சியின் தலைவர். இப்படியான ஒரு தகவல் எனக்கு இதுவரை வரவில்லை.’’

``ரஜினியின் அரசியல் குறித்து...’’

``ரஜினி உடல்நிலையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நண்பனாக எனது கருத்து. அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்று என்னால் சொல்ல முடியாது. அது அவருடைய விருப்பம். அவர் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என் அன்பு என்ன என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.’’

மக்கள் நீதி மய்யம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
ராகேஷ் பெ

``சட்டசபைத் தேர்தலில் கமல் எம்.எல்.ஏ-வாகப் போட்டியிடுவாரா... சட்டசபையில் அவரது குரல் ஒலிக்குமா?’’

``கண்டிப்பாக ஒலிக்கும். சட்டமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும்.’’

``தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளோடு பார்க்கையில், உங்கள் கட்சி இப்போதுதான் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்சிகளின் பணபலம், படைபலத்தோடு மோத முடியும் என்று நினைக்கிறீர்களா... தங்களால் முதல்வராக முடியும் என்று நினைக்கிறீர்களா?’’

``மாற்றம் வேண்டும் என்பது முக்கியம். என் கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்து அறிவித்த முதல்வர் வேட்பாளர்தான் நான். எனவே, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுவேன் நான்.’’

``தமிழகத்தில் மனுஸ்மிருதி, வேல் யாத்திரை என்ற இரண்டு விஷயங்கள் பேசப்பட்டுவருகின்றன. இது குறித்த உங்களின் கருத்து என்ன?’’

``மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதனால், அதைப் பற்றிய விமர்சனம் தேவையற்றது. இதுவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவேன் என்று யாராவது சொல்கிறார்களா? அப்போது போராட்டம் வெடிக்கும். மனுஸ்மிருதி பற்றித் தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. வேலை எப்படி வாங்கித் தருவது என்பதைத்தான் பார்க்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவது என்பது பெரிய பொறுப்பு. தமிழகத்துக்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை அது. வேல் யாத்திரை வேண்டாம் என்று ரத்து செய்யப்பட்டது `சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது’ என்று நன்றி சொல்லலாம்.’’

அடுத்த கட்டுரைக்கு