Published:Updated:

'வெற்றி பெற்றார் மல்லிகார்ஜுன கார்கே' - காங்கிரஸில் புதிய மாற்றங்கள் வருமா?!

மல்லிகார்ஜுன கார்கே!

அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். இதையடுத்து நாடு முழுவதும் அந்தக் கட்சிக்குள் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'வெற்றி பெற்றார் மல்லிகார்ஜுன கார்கே' - காங்கிரஸில் புதிய மாற்றங்கள் வருமா?!

அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். இதையடுத்து நாடு முழுவதும் அந்தக் கட்சிக்குள் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் கட்சி, கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்ற, மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்துவந்தது. குறிப்பாக 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தத் தோல்விக்கு அப்போதைய அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியே காரணம் என அந்தக் கட்சியைச் சேர்த்த முக்கிய நிர்வாகிகள் பலர் குற்றம்சாட்டினார். இதையடுத்து அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த ராகுல் காந்தி அந்தப் பதவியிலிருந்து விலகினார்.  

பிறகு சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். சுமார் மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியில் அவர் தொடர்ந்தார். தொடர் தோல்வி மற்றும் காந்தி குடும்பத்தைச் சேர்த்தவர்களே தலைவர்களாக இருக்கிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் காரணமாக, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிடப்பட்டது. இதன்படி முதலில் சசி தரூர், அசோக் கெலாட் ஆகியோருக்கு இடையேதான் போட்டி நிலவியது. அப்போது, ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட்டுக்கு காந்தி குடும்பத்தில் ஆதரவு இருந்ததால், காங்கிரஸ் தலைவராக வெல்வதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக முதலில் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவந்தனர். 

சோனியா காந்தி
சோனியா காந்தி

இதற்கிடையில் எதிர்பாராதவிதமாக இதில் மாற்றம் ஏற்பட்டது.  அதாவது, ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அசோக் கெலாட் விலக மறுத்துவிட்டார். பின்னர் அவர் போட்டியிலிருந்தும் விலகினார். அதன் பின்னர் மல்லிகார்ஜுன கார்கே களம் கண்டார். இதையடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கட்சிக்குள் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்தலில் 9,915 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருந்தன.

குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உட்பட பலரும் வாக்களித்தனர். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் பெல்லாரியிலுள்ள பாரத் ஜோடோ யாத்ரா முகாமில் வாக்களித்தார். டெல்லியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் மகள் பிரியங்கா காந்தியுடன், சோனியா காந்தி வாக்களித்தார். இதுபோல் நாடு முழுவதும் முக்கியத் தலைவர்கள் வாக்களித்தனர். 

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter

இதையடுத்து வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.  இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. முன்னதாகவே இந்தத் தேர்தலில் கார்கேதான் வெற்றி பெறுவார் என்று பலரும் கூறிவந்தனர். அதன்படி தேர்தல் முடிவும் அமைந்திருக்கிறது.

இதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் கார்கேவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மற்றொருபுறம் இனி காங்கிரஸ் கட்சி சார்ந்த விவகாரங்களில் முக்கிய முடிவுகளை கார்கே எடுப்பார் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் நாடு முழுவதும் அந்தக் கட்சிக்குள் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசி தரூர்
சசி தரூர்

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், "உலகிலுள்ள மிகப்பெரிய ஜனநாயகக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று என்பதை இந்தத் தேர்தல் மூலம் மற்றொருமுறை நிரூபித்துள்ளனர். இதுபோல் ஒரு தேர்தல் நடந்து 22 ஆண்டுகள் ஆகின்றன. கார்கே முழுக்க முழுக்க சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் சசிதரூர் தேர்தலில் களம் கண்டதின் மூலம் ஜனநாயகம் வெளிப்பட்டது. 

இவர் பல்வேறு புதிய மாற்றங்களைக் கொண்டுவருவார். குறிப்பாக, கார்கேவுக்கு முன்பு நான்கு மாநிலத் தேர்தல்கள் இருக்கின்றன. இந்தத் தேர்தல்களை எவ்வாறு இவர் கையாள்கிறார் என்பதைவைத்தே நாம் தென்னாட்டிலிருந்து ஒரு வலுவான தலைவர் வந்திருக்கிறார் என்று நாம் வெளிக்காட்ட முடியும். ஓடிப்போகக்கூடிய எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. எம்.பி.,  எம்.எல்.ஏ-க்கள் ஓடுவதுபோல் தொண்டர்களும் ஓடிவிடக் கூடாது. 

காங்கிரஸ்
காங்கிரஸ்

அதைத்தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து, காத்துக்கொண்டிருக்கிறோம். இதேபோல் ஒருசில மாநிலங்களில் சோனியா, ராகுல் ஆகியோரால் நடவடிக்கை எடுக்க முடியாத சிலர் இருக்கின்றனர். அவர்களால் பல்வேறுவிதமான பிரச்னைகள் ஏற்பட்டுவருகின்றன. மீறி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவேதான் கார்கே தலைவராகக் கொண்டுவரப்பட்டிருக்கிறார். வரும் காலங்களில் அவர்களைத் தனது 'ஃபார்முலா'வில் சரிசெய்வார் என்று நினைக்கிறோம். இதன் ஒரு பகுதியாக, தமிழக காங்கிரஸ் கட்சியிலும் பெரிய மாற்றம் விரைவில் இருக்கும்" என்றார்.