Election bannerElection banner
Published:Updated:

`ட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவைச் சந்திப்பார் மோடி!’ - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மம்தா
மம்தா

`அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப்புக்கு நேர்ந்ததைவிட, பிரதமர் மோடியின் தேர்தல் முடிவு மிக மோசமாக இருக்கும்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்திருக்கிறார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால், இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் களை கட்டியிருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் தேர்தலையொட்டி, அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டம் சஹாகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

விளையாட்டு மைதானம்:

மம்தா பேசுகையில், ``இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தை நீங்கள் (பா.ஜ.க) விளையாட்டு மைதானமாக நினைத்தால், நான் கோல் கீப்பராக இருப்பேன். உங்களால் ஒரு கோல்கூட அடிக்க முடியாது. உங்களின் பந்து, கோல் போஸ்ட்டைத் தாண்டி மேலே எழும்பிச் செல்லும். இந்த விளையாட்டில் மேற்கு வங்க மக்கள் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும். பா.ஜ.க மேற்கு வங்கத்தில் தோல்வியடைந்தால், நிச்சயமாக நாட்டிலிருந்து தூக்கி எறியப்படும். அவர்கள் விடைபெறுவது நிச்சயம்” என்றார்.

மம்தா - மோடி
மம்தா - மோடி

பெண்கள் பாதுகாப்பு

``பா.ஜ.க-வில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. அந்தக் கதைகளை நான் இன்று வெளியே சொன்னால் பா.ஜ.க-வினர் தலைகள் அவமானத்தில் கவிழும். ஆனால், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் நாங்கள் பெண்களைத் தாயைப்போல் மதிக்கிறோம்; சகோதரியாக பாவிக்கிறோம்" என்று பேசினார்.

கலவரக்காரர்

மேலும் அவர், ``பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும், வெறுப்புணர்வையும் பரப்பிவருகிறார்கள். பிரதமர் மோடி, இந்த நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்புக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதைவிட மோசமான முடிவுதான் மோடிக்கு ஏற்படும். வன்முறையால் எந்தப் பலனையும் பெற முடியாது.” என்றார் காட்டமாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு