Election bannerElection banner
Published:Updated:

50 பெண்கள், 79 தலித்கள், 35 இஸ்லாமியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு - மம்தா அறிவித்த வேட்பாளர் பட்டியல்

மம்தா
மம்தா

294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியிலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27-ம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்தநிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், கட்சி வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முக்கியக் காரணமாக அமைந்த நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மம்தா
மம்தா

294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியிலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியிருக்கிறது. அதேவேளையில் பா.ஜ.க இந்த முறை மேற்கு வங்கத்தில் முதலன்முறையாக ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது. தேர்தலுக்குச் சில வாரங்களே இருக்கும் நிலையில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார். அந்த வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள், 35 இஸ்லாமியர்கள், 79 தாழ்த்தப்பட்ட பிரிவினர், 17 பழங்குடி வேட்பாளர்களை மம்தா அறிவித்திருக்கிறார்.

இந்த வேட்பாளர் பட்டியலை, தனது அதிர்ஷ்டம் என மம்தா கருதும், 10 x 10 அறையில் வைத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி அறிவித்திருக்கிறார். 2011 மற்றும் 2016 தேர்தல் அறிவிப்புகள் மற்றும் முக்கியப் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளை அந்த அறையில்தான் மம்தா நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா
மம்தா

தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள 24 பேருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மேல் சபை உருவாக்கப்பட்டு, மூத்த நிர்வாகிகளுக்கு பதவிகள் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஹுமாயுன் கபீர், நடிகர்கள் சயோனி கோஷ், ஜூன் மாலியா, கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைத்த சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அவருடன் நேரடியாகப் போட்டியிடும் வகையில் மம்தா, பவானிபூர் தொகுதியிலிருந்து மாறி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வாமாக அறிவித்துள்ளார்.

பா.ஜ.க-வில் தேர்தல் உயர்மட்டக் குழுக் கூட்டம் கடந்த இரண்டு தினங்களாக டெல்லியில் நடந்துவரும் நிலையில், பா.ஜ.க வேட்பாளர்கள் தேர்வில் பல சிக்கல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் மற்ற கட்சியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்குத் தாவினார்கள்.

மேற்கு வங்கம்: மம்தாதான் டார்கெட்; யார் முதல்வர் வேட்பாளர்? - மோடி நடத்திய அவசர ஆலோசனை

தற்போது அந்தக் கட்சித் தாவல்கள் பா.ஜ.க-வுக்கு தலைவலியாக மாறியுள்ளது. தற்போதைய தேர்தலில் பா.ஜ.க உறுப்பினர்களுக்கு இடங்கள் வழங்குவதா அல்லது புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு இடங்களை வழங்குவதா என்பதில் இறுதி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. புதிதாக பா.ஜ.க-வில் இணைந்தவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் சுயேச்சை வேட்பாளர்களுக்குத் தங்களின் வாக்குகளை செலுத்துவோம் என்று பா.ஜ.க-வினர் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர் .

மூன்றாவது அணியாகப் பார்க்கப்படும் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணியில், முதல் இரண்டுகட்ட தேர்தல் நடக்கும் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்ச் 7-ம் தேதி கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு