Election bannerElection banner
Published:Updated:

முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்; மருத்துவமனையில் அனுமதி!-தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க முடிவு

மம்தா
மம்தா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நான்கைந்து பேர்கொண்ட குழுவினர் தன்னைத் தாக்கியதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (புதன்கிழமை) நந்திகிராமில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தார். மாலை 6:30 மணியளவில், அங்கேயுள்ள கோயிலில் பிராத்தனை செய்த பிறகு அந்தப் பகுதியில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். இந்தநிலையில், `கோயிலிலிருந்து காருக்குச் செல்லும் வழியில் கூட்டத்தில் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தன்னை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தாக்கியதாகவும், இதனால் தன் காலில் அடிப்பட்டதாகவும்’ மம்தா கூறியிருக்கிறார். செய்தியாளர்களிடம் வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்த தன் இடது காலைக் காட்டிய அவர், அது அடிபட்டு வீங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், `அந்த நேரத்தில் உள்ளூர் காவல் துறையினரோ, பாதுகாவலர்களோ உடன் இல்லை’ என்றும் குறிப்பிட்டார்.

மம்தா
மம்தா

இது குறித்து, `தேர்தல் ஆணையத்தில் புகராளிக்கவிருக்கிறேன். இது திட்டமிட்ட செயல்’ என்றும் மம்தா கூறினார். சமூக வலைதளங்களில் வெளியான மம்தா பானர்ஜியின் வீடியோவில் அவரை, அவரின் பாதுகாவலர்கள் தூக்கிச் சென்று காரின் பின்சீட்டில் அமரவைக்கின்றனர்.

இரண்டு நாள்கள் நந்திகிராமில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அதை ரத்து செய்துவிட்டு கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஐந்து பேர் கொண்ட மருத்துவக்குழுவினரால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகம் வெளியுட்டிருக்கும் அறிக்கையில், ``மம்தா பானர்ஜியின் இடது கணுக்கால், கால், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என ஆரம்ப பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. மேலும் மார்புவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். அவர் 48 மணி நேரம் கண்காணிக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கிழக்கு மிட்னாப்பூர் காவல்துறை அதிகாரி கூறுகையில், `தற்போது எதுவும் கூற முடியாது. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு