Published:Updated:

எதேச்சையாக நடந்த சந்திப்பு- மோடியின் மனைவிக்கு புடவை பரிசளித்த மம்தா!

mamata and Jashodaben
mamata and Jashodaben ( Twitter )

மேற்குவங்க மாநிலத்துக்கு வழங்கப்படவேண்டிய நிதி குறித்தே பிரதமரிடம் பேச இருக்கிறேன்.

மத்தியில், இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. எதிர்க்கட்சியில் உள்ள பல மூத்த தலைவர்களின் பழைய வழக்குகளைத் தூசுதட்டி வருவதாகக் கூறப்படுகிறது. பழிவாங்கும் நடவடிக்கையாகக் கருதப்படும் இதில் முதல் டார்கெட்டாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், இரண்டாவதாக டி.கே.சிவகுமாரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் வரிசையில் அடுத்த டார்கெட்டாக பார்க்கப்படுபவர், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நெருக்கமானவர்கள் என்று தேசிய அரசியல் வட்டாரங்கள் பேசிவருகின்றன.

mamata and modi
mamata and modi

அதற்கேற்றார்ப்போலவே சாரதா சிட் ஃபண்ட் முறைகேடு வழக்கில், கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிராக சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கிவிட்டனர். அடுத்து, மம்தா பானர்ஜிதான் என்கிறார்கள். இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச உள்ளார் மம்தா பானர்ஜி. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில், மாலை 4:30 மணி அளவில் நடைபெறும் இந்த சந்திப்பில், சாரதா சிட்ஃபண்ட் வழக்கு, மேற்கு வங்கத்தின் நிலை போன்ற பல விஷயங்கள் பற்றி பிரதமரிடம் மம்தா பேசவுள்ளதாக சர்ச்சை கிளம்ப, ``மேற்குவங்க மாநிலத்துக்கு வழங்கப்படவேண்டிய நிதி குறித்தே பிரதமரிடம் பேச இருக்கிறேன்.

Vikatan

அதேபோல், மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல், ரயில்வே உள்ளிட்ட நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவரிடம் கோரிக்கை வைப்பேன்'' என நேற்று இரவு கொல்கத்தாவில் விமானம் ஏறும் முன்பு விளக்கமளித்தார். இதற்கிடையே, டெல்லி செல்வதற்கு முன்பு விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னை, தற்செயலாக சந்தித்திருக்கிறார், மம்தா.

Jashodaben
Jashodaben
Vikatan

ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான யசோதா பென், மேற்கு வங்காளத்தின் அசான்சோல் பகுதியிலுள்ள, கல்யாணேஷ்வரி கோயிலுக்கு பிரார்த்தனைக்காக வந்துள்ளார். இந்தப் பூஜையை முடித்துவிட்டு திரும்பும்போதுதான் கொல்கத்தா விமான நிலையத்தில் எதேச்சையாக மம்தாவுடன் சந்திப்பு நடந்துள்ளது.

அப்போது, யசோதா பென்னின் பிரார்த்தனை குறித்து கேட்ட மம்தா, அவரிடம் கல்கத்தாவின் காளிகாட், தக்‌ஷினேஸ்வர் பகுதிகளிலுள்ள மிகப் பிரபலமான காளி கோயிலுக்குச் சென்றாரா எனக் கேட்டு தெரிந்துகொண்டதோடு, அடுத்த முறை கல்கத்தா வரும்போது, தன்னிடம் முன்பே தகவல் சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்ததாகவும், மோடியின் மனைவிக்கு கல்கத்தாவின் இனிப்புகளையும், மேற்கு வங்காளப் பாரம்பர்யப் புடவை ஒன்றையும் மம்தா பரிசளித்ததாக, மம்தாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாக பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு