Published:Updated:

தாவும் தலைவர்கள்... வலுப்பெறும் திரிணாமுல்... தேசிய அரசியலில் விஸ்வரூபம் எடுப்பாரா மம்தா?

மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
News
மம்தா பானர்ஜி

2024 நாடாளுமன்றத் தேர்தலில், மோடிக்கு எதிர்முகமாக மம்தாவை முன்னிறுத்துவதற்கான வேலைகள் தீவிரமாகியிருக்கின்றன

பெரும் வெற்றியை அறுவடை செய்து மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த மம்தா பானர்ஜி, தனது அடுத்தடுத்த அதிரடிகளால் தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறார். கோவா தேர்தலில் களமிறங்கிய மம்தா, அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களைத் தன் பக்கம் இழுத்திருக்கிறார். கடந்த வாரம் திரிபுராவிலுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில், 12 பேர் மம்தாவின் கட்சிக்கு தாவிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பலவீனமாக்கி, இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸை மாற்றத் துடிக்கிறாரா மம்தா?

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், `மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-தான் ஆட்சியமைக்கும்’ என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அவற்றைப் பொய்யாக்கி 215 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது திரிணாமுல் காங்கிரஸ். தனது கட்சியிலிருந்து வெளியேறிய சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்திருந்தாலும், இடைத்தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியையும் தக்க வைத்துக்கொண்டார் மம்தா. அதன் பிறகும் தொடர்ந்தன அவரது அதிரடிகள்... வெள்ள நிவாரணக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை அரை மணி நேரம் காக்கவைத்தது, மேற்கு வங்கத் தலைமைச் செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு அழைத்தபோது, அவரை ராஜினாமா செய்யவைத்து தன் தலைமை ஆலோசகராக நியமித்துக்கொண்டது எனத் தொடர்ந்து மத்திய அரசுக்கு சவால்விட்டார்.

காங்கிரஸுக்கு மாற்று மம்தாவா?

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மென்மையான போக்கைக் கையாண்ட மம்தா, தற்போது காங்கிரஸை வெளுத்து வாங்குகிறார். கோவா தேர்தல் பிரசாரத்தில், ``பா.ஜ.க வலிமை அடைந்ததற்குக் காரணமே காங்கிரஸ்தான்’’ என்று காங்கிரஸ் தலைவர்களின் செயல்படாத தன்மையைச் சுட்டிக்காட்டினார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில், திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரபூர்வ நாளிதழான `ஜெகோ பங்களா’வில், `ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்கத் தவறிவிட்டார். பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி மம்தா மட்டுமே’ என்று கட்டுரை வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

இந்த நிலையில்தான், நவம்பர் 25 அன்று திரிபுராவில் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மா உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ-க்கள், ஒரே இரவில் காங்கிரஸிலிருந்து திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவியிருக்கின்றனர். இவர்கள் தவிர பீகார் காங்கிரஸைச் சேர்ந்த கீர்த்தி ஆசாத்தும் கடந்த வாரம் மம்தாவின் கட்சியில் சேர்ந்துவிட்டார். காங்கிரஸ் அல்லாமல், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பவான் வர்மா, ஹரியானா காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த 2019-ல் விலகிய முன்னாள் தலைவர் அசோக் தன்வர் ஆகியோரும் திரிணாமுல் காங்கிரஸுக்கு வந்துவிட்டனர்.

தாவும் தலைவர்கள்... வலுப்பெறும் திரிணாமுல்... தேசிய அரசியலில் விஸ்வரூபம் எடுப்பாரா மம்தா?

2022, பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் கோவாவில் பல்வேறு காங்கிரஸ் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்ட மம்தா, தென்மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. வரும் 2023-ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகாவிலும் அந்த மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான எம்.பி.பாட்டீலுடன் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது திரிணாமுல். அரசியல் கட்சியினர் மட்டுமல்ல... டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, பாடகர்கள், நடிகர், நடிகைகள் எனப் பிரபலங்களும் திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகிவருகின்றனர்.

மம்தாவின் அரசியலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள் நம்மிடம், “2024 நாடாளுமன்றத் தேர்தலில், மோடிக்கு எதிர்முகமாக மம்தாவை முன்னிறுத்துவதற்கான வேலைகள் தீவிரமாகியிருக்கின்றன. மம்தா, அவருக்காக வேலை பார்க்கும் பிரசாந்த் கிஷோரின் பேச்சுகள், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் நடவடிக்கைகள், `ஜெகோ பங்களா’ கட்டுரைகள், மற்ற மாநில காங்கிரஸ் கட்சியினரை திரிணாமுல் காங்கிரஸில் சேர்ப்பது என இந்த மொத்தப் புள்ளிகளையும் ஒன்றிணைத்துப் பார்த்தால், மம்தாவின் வியூகம் காங்கிரஸ் கட்சியை பலவீனமாக்குவது என்று புரிகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸை பலவீனமாக்கிவிட்டால், அந்த இடத்தை திரிணாமுல் காங்கிரஸ் பிடித்துவிடும்.

இன்னொரு பக்கம் திரிணாமுல் காங்கிரஸுக்குக் கட்டமைப்பே இல்லாத மாநிலங்களிலும், பா.ஜ.க-வின் எதிர்க்கட்சிகளாகச் செயல்படும் மாநிலக் கட்சிகளோடு நல்லிணக்கத்தைப் பேணிவருகிறார் மம்தா. உத்தரப்பிரதேசத்தில், `அகிலேஷ் யாதவுக்குத் தேவைப்பட்டால் உதவி செய்வோம்’ என்றிருக்கிறார் மம்தா. மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருக்கும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவிடமும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவாரிடமும் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழ்நாட்டிலும் தி.மு.க-வுடன் நல்லுறவைப் பேணுகிறார். இப்படியாக எல்லா மாநிலங்களிலும் இருக்கும் எதிர்க்கட்சிகளை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது தலைமையின்கீழ் ஒன்றிணைக்கும் பணிகளைச் செய்துவருகிறார் மம்தா” என்றார்கள். ஆனால் காங்கிரஸ் தரப்பிலோ, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் முக்கிய கட்சிகள் இப்படி திசைக்கு ஒன்றாக சென்றதால்தான், பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. இப்போது மம்தா தனி ஆவர்த்தனம் செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை நீர்த்துபோகச் செய்கிறார்” என்று விமர்சனம் செய்கிறார்கள்.

2024-ல் பிரதமர் வேட்பாளர்?

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளோ, ``நாட்டிலிருக்கும் முதல்வர்களிலேயே மோடி, அமித் ஷாவுக்கு எதிராகத் துணிச்சலாகப் பேசக்கூடியவராக, நடவடிக்கைகளை எடுக்கக்கூடியவராக மம்தா மட்டுமே இருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக மம்தா விஸ்வரூபம் எடுப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தற்போது மாநிலக் கட்சியாக இருக்கும் திரிணாமுல், 2024-க்குள் தேசியக் கட்சியாகிவிடும். மம்தாவை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்தால், அவர்களையும் சேர்த்துக்கொள்ள மம்தா தயாராக இருக்கிறார்” என்கிறார்கள்!

அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில், திரிணாமுல் காங்கிரஸின் பர்ஃபாமன்ஸை வைத்துத்தான் தேசிய அரசியலில் மம்தா விஸ்வரூபமெடுப்பாரா... இல்லை புஸ்வாணமாவாரா என்பதைச் சொல்ல முடியும்!